
வேலூரில் இருந்து சுற்றுலா வந்த அரசு பள்ளி மாணவி ஒருவர் தங்களிடம் இருக்கிறார் என்று தொலைப்பேசி எண்ணுடன் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இந்த பதிவின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

சிறுமி ஒருவரின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “Missing. Name: gayathri. Age : 5. Pls share. வேலூரில் இருந்து சுற்றுலா வந்த அரசு பள்ளி மாணவி எங்களிடம் இருக்கிறாள் இதை அனைத்து Group க்கு தெரிவிக்கவும் 919487111888” என்று இருந்தது.
இந்த பதிவை, அலைஓசை அலைஓசை என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் விவாதிப்போம் வாங்க என்ற பதிவாளர் பகிர்ந்துள்ளார். இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் காணாமல் போனவர்கள் பற்றி, ரத்த தானம் பற்றித் தொடர்ந்து பல வதந்திகள் பரவிக்கொண்டே இருக்கின்றன. குழந்தைகள், உயிர் காக்கும் விஷயம் என்பதால் அது உண்மையா, வதந்தியா என்று கவலைப்படாமல் பலரும் அந்த தகவலை பகிர்ந்து வருகின்றனர். இதனால், உண்மையில் உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவி கிடைக்காமல் போய்விடுகிறது.
இதனால், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியிருப்பது போல் உண்மையில் இந்த சிறுமி காணாமல் போய் கிடைத்துள்ளாரா, போலீசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதா, சிறுமி தற்போது யார் பொறுப்பில் இருக்கிறார் என்பதை அறிய முடிவு செய்தோம்.
ஃபேஸ்புக் பதிவில் அந்த மாணவி எப்போது காணாமல் போனார், வேலூரில் இருந்து எந்த ஊருக்கு வந்தார் என்று எந்த தகவலும் இல்லை. சிறுமியைப் பார்க்க தமிழக மாணவி போலவோ, அரசு பள்ளி மாணவியைப் போலவோ இல்லை. இதனால், முதலில் அந்த பதிவில் உள்ள எண்ணைத் தொடர்புகொண்டோம். ஆனால், அந்த எண்ணுக்கு அழைப்பு செல்லவில்லை. ட்ரூ காலரில் அந்த எண் ஜான் டேவிட் என்பவருக்கு சொந்தமானது என்று தெரிந்தது.
இதனால், வேலூரில் சுற்றுலா சென்ற பள்ளி மாணவி காணாமல் போனது தொடர்பாக செய்தி ஏதும் உள்ளதா என்று பார்த்தோம். அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.
சிறுமியின் படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, பல சமூக ஊடக பக்கங்களில் இந்த சிறுமியின் படம் பகிரப்பட்டு வருவது தெரிந்தது.
Chowkidar Jaganathan G என்பவர் இந்த சிறுமி சென்னையைச் சேர்ந்தவர் என்றும் தற்போது மங்களூரு காவல் நிலையத்தில் இருப்பதாகவும், சிறுமியின் பெற்றோருக்கு தகவல் போய் சேரும் வரை பகிருங்கள் என்றும் கூறி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஜூலை 26ம் தேதி பகிர்ந்துள்ளார்.
SSG Commandos Pakistan என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த சிறுமியின் படம் 2019 ஜூன் 24ம் தேதி பகிரப்பட்டுள்ளது. அதில், (பாகிஸ்தான்) ராவல்பென்டியில் இந்த சிறுமி காணாமல் போனார். இந்த சிறுமி பற்றி தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்தை தொடர்புகொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டு ஒரு தொலைப்பேசி எண்ணையும் அளித்திருந்தனர். இந்த பதிவைப் பகிர்வது நம்முடைய கடமை என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
மிஸ்ஸிங் கிட்ஸ் இன் இந்தியா என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த சிறுமி கிடைத்துவிட்டதாக ஒரு பதிவு ஷேர் செய்யப்பட்டு இருந்தது. Techwire.com என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டதை அப்படியே ரீஷேர் செய்திருந்தனர். அதில், இந்த சிறுமி தன்னுடைய வீட்டுக்கு வந்து சேர்ந்துவிட்டார். அனைவருக்கும் நன்றி என்று இருந்தது.
இந்த பதிவு 2019 ஜூன் 12ம் தேதி வெளியிடப்பட்டு இருந்தது. கமெண்டில் சிறுமி பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும், காணாமல் போன அன்றே கிடைத்துவிட்டர் என்றும் தெரிவித்திருந்தனர்.

நம்முடைய ஆய்வில், இந்த சிறுமி வேலூரைச் சேர்ந்தவர் இல்லை என்பதும், சில மாதங்களாகவே இந்த சிறுமியின் புகைப்படம் சமூக ஊடகங்களில் காணவில்லை என்ற அறிவிப்புடன் பகிரப்பட்டு வருவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்த தகவல் பொய்யானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:காணாமல் போன வேலூர் அரசுப் பள்ளி மாணவி! – தொடரும் ஃபேஸ்புக் வதந்தி!
Fact Check By: Chendur PandianResult: False
