
‘’ஊக்கமருந்து குற்றச்சாட்டை தவறு என நிரூபித்தார் தங்க மங்கை கோமதி மாரிமுத்து,’’ எனும் தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link I Archived Link
Enigo Sudhakar என்பவர் கடந்த ஜூன் 22, 2019 அன்று இந்த ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளார். இதில், கோமதி மாரிமுத்துவின் புகைப்படத்தை பகிர்ந்து அதன் மேலே, ‘’தங்க மகள் கோமதி அவர்கள் மேல் வைக்கப்பட்ட ஊக்க மருந்து பயன்படுத்துவதாக வைக்கப்பட்ட குற்றச்சாட்டு பொய் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது,’’ என எழுதியுள்ளார். அத்துடன், ‘’உண்மை வெல்லும், வென்றது,’’ என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனை பலரும் உண்மை என வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கோமதி மாரிமுத்து தங்கம் வென்று சாதனை படைத்தார். பலரும் அதற்காக அவரை பாராட்டிய நிலையில், ஆசிய தடகளப் போட்டியில் கிழிந்த ஷூவுடன் ஓடினார் என்றும், மத்திய மாநில அரசுகள் இவருக்கு தகுந்த நிதி உதவி செய்யவில்லை என்றும் பலவித வதந்திகள் பரவ தொடங்கின.
இதுபற்றிய வதந்திகளை நாம் கூட ஆய்வு செய்து, ஏற்கனவே முடிவுகளை வெளியிட்டிருக்கிறோம். அதனை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இப்படியாக, பாராட்டுகளும், வதந்திகளும் கோமதி மாரிமுத்துவை மையமிட்ட நிலையில், திடீரென அவர் ஊக்கமருந்து பரிசோதனையில் சிக்கினார். தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை கோமதி பயன்படுத்தியதாகக் கூறி, கோமதிக்கு தடகள விளையாட்டில் பங்கேற்க தடை விதிக்கப்படுவதாக, கடந்த மே 22ம் தேதி அறிவிப்பு வெளியானது. இதுபற்றிய செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

தற்போதைய நிலையில், கோமதி மாரிமுத்துவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. ஃபெடரேஷன் கோப்பை மற்றும் ஆசிய தடகளப் போட்டி ஆகிய இரண்டிலும் ஊக்கமருந்து சோதனையில் அவர் தோல்வியடைந்தார். இவை இரண்டும் ஏ பிரிவு சோதனை என்பதால், அவருக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. தன் மீதான புகாரை அவர் உரிய சாம்பிள் சமர்ப்பித்து, எதிர்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒருவேளை அடுத்தப்படியாக, பி பிரிவு சோதனையில் அவர் சிக்கினால், அவருக்கு 4 ஆண்டுகள் தடை விதிக்கப்படும்.
கோமதி மாரிமுத்து பற்றி கடந்த ஜூன் மாதம் வரையில்தான் செய்திகள் வெளியாகியுள்ளன. அதன்பின், அவர் ஊக்கமருந்து சோதனை புகாரை சந்திக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். கடைசியாக, ஜூன் 19ம் தேதியன்று கோமதி மாரிமுத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நான் ஊக்கமருந்து பயன்படுத்தவில்லை என்பதை உரிய முறையில் நிரூபிப்பேன், இதுதொடர்பாக, சட்டப்படி வழக்கு தொடர்ந்துள்ளேன், என்றுதான் கூறியிருந்தார்.
இதுபற்றி தந்திடிவி வெளியிட்ட செய்தி விவரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் கிடைத்த விவரம்,
1) கோமதி மாரிமுத்து, ஊக்கமருந்து சோதனையில் சிக்கியுள்ளார்.
2) தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை அவர் பயன்படுத்தியதாகக் கூறி, இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
3) தன் தரப்பில் உரிய சாம்பிள் சமர்ப்பித்து, ஊக்கமருந்து சோதனை பற்றி மேல்முறையீடு செய்ய கோமதிக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
4) ஊக்கமருந்து விவகாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன் என்று கோமதி மாரிமுத்து பேட்டி அளித்துள்ளார்.
5) இதில் உண்மை என்னவென்று, ஊக்கமருந்து மறு பரிசோதனைக்கான சாம்பிளை கோமதி சமர்ப்பித்தால் மட்டுமே தெரியவரும்.
எனவே, இந்த செய்தியில், பாதி உண்மை, பாதி நிரூபிக்கப்படாத விசயமாக உள்ளதென்று தெரியவருகிறது.
முடிவு:
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தியதாகக் கூறப்படும் புகார் பொய் என நிரூபிக்கப்படவில்லை. ஊக்க மருந்து சர்ச்சையை சட்டப்படி எதிர்கொண்டு வருவதாக கோமதி மாரிமுத்து கூறியிருக்கிறார். எனவே, இதில் பாதி உண்மை, பாதி நிரூபிக்கப்படாத விசயமாக உள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய நிரூபிக்கப்படாத செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:ஊக்கமருந்து குற்றச்சாட்டை தவறு என நிரூபித்த கோமதி மாரிமுத்து: ஃபேஸ்புக் செய்தி உண்மையா?
Fact Check By: Pankaj IyerResult: Mixture
