
“கமல்ஹாசன் பற்றிய வரலாற்று உண்மைகளை சொல்லும் நேரம் வந்துவிட்டது” என்று கௌதமி பேட்டி அளித்துள்ளதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
கமல்ஹாசன் பற்றிய வரலாற்று உண்மைகளை சொல்லும் நேரம் வந்துவிட்டது கௌதமி பேட்டி
“கமல்ஹாசன் பற்றிய வரலாற்று உண்மைகளை சொல்லும் நேரம் வந்துவிட்டது – கௌதமி பேட்டி” என்று நியூஸ் கார்டு வெளியாகி உள்ளது. அந்த நியூஸ் கார்டில் “என் நியூஸ் 9 தமிழ்” என்று பெயர் உள்ளது. பி.என் செய்திகள் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில், 2019 மே 17ம் தேதி இந்த நியூஸ்கார்டு வெளியாகி உள்ளது. ஆனால், இது தொடர்பான செய்தி லிங்க் எதையும் அளிக்கவில்லை. இந்த தகவல் உண்மை என்று நம்பி ஏராளமானோர் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தேர்தல் பிரசாரத்தின்போது, “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து” என்று மக்கள் நீதி மய்ய தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் பேசியதில் இருந்து அவரை பற்றி பலவிதமான தகவல்கள், சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்பு, “என் மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதால் கமலை விட்டு பிரிந்தேன் – கௌதமி பேட்டி” என்று ஒரு விஷம பதிவு சமீபத்தில் வைரலாகியது. அதன் நம்பகத்தன்மையை நாம் ஆய்வு செய்து அது பொய்யானது என்று கண்டறிந்தோம். அந்த செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
இந்த நிலையில், “கமல்ஹாசன் பற்றிய வரலாற்று உண்மைகளை சொல்லும் நேரம் வந்துவிட்டது” என்று நடிகை கௌதமி கூறியதாக இந்த நியூஸ் கார்டு வெளியாகி உள்ளது. இதற்கு லிங்க் எதுவும் அளிக்கவில்லை. என் நியூஸ் 9 தமிழ் என்று இணையதளம் இருக்கிறதா என்று பார்த்தால் அப்படி ஏதும் இல்லை.

பிஎன் செய்திகள் ஃபேஸ்புக் பக்கத்தில் பார்த்தபோது, எந்த ஒரு செய்திக்கும் லிங்க் இல்லை. வெறும் நியூஸ் கார்டு மட்டுமே பகிர்ந்து வருவது தெரிந்தது. பிற செய்தி இணைய தளங்களில் வெளியாகும் பா.ஜ.க ஆதரவு செய்திகளை எடுத்து பகிர்ந்து வந்ததும் தெரிந்தது.
கௌதமி சமீபத்தில் ஏதேனும் பேட்டி அளித்துள்ளாரா என்று கூகுளில் தேடினோம். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் இல்லை.

நடிகர் கமலை விட்டுப் பிரிந்தது, சம்பள பாக்கி என்று எல்லா பிரச்னைகளையும் கௌதமி தன்னுடைய பிளாக், ட்விட்டர், ஃபேஸ்புக் பக்கத்தில்தான் தெரிவித்திருந்தார். அவருடைய அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கங்களில் இது தொடர்பாக ஏதேனும் செய்தி வெளியாகி உள்ளதா என்று தேடினோம்.
அவருடைய பிளாக்கில் கடைசியாக 2018 பிப்ரவரி 17ம் தேதி பதிவிட்டதற்கு பிறகு வேறு எந்த பதிவும் இல்லை. அதேபோல், அவருடைய ட்விட்டர், ஃபேஸ்புக் பக்கத்திலும் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டது போன்று எந்த ஒரு செய்தியும் இல்லை.
கவுதமியின் பிளாக
்ஃபேஸ்புக் பக்கம்
ட்விட்டர் பக்கம்
“சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து” என்ற கமலின் பேச்சுக்கு எதிர்வினையாக, பா.ஜ.க ஆதரவு செய்திகளை வெளியிடும் பிஎன் செய்திகள் ஃபேஸ்புக் பக்கம், கமல்ஹாசனுக்கு எதிராக விஷமத்தனத்துடன் இந்த நியூஸ் கார்டை வெளியிட்டுள்ளது தெரிகிறது.
நமக்கு கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில், “கமல் பற்றிய வரலாற்று உண்மைகளை வெளியிடும் நேரம் வந்துவிட்டது” என்று நடிகை கௌதமி பேட்டி அளிக்கவில்லை. இது தொடர்பாக வெளியான பதிவு தவறாகச் சித்தரிக்கப்பட்டது என்று நிரூபிக்கப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:கமல்ஹாசன் பற்றிய வரலாற்று உண்மைகளை சொல்லும் நேரம் வந்துவிட்டது- கௌதமி பேட்டி அளித்தாரா?
Fact Check By: Praveen KumarResult: False
