“தமிழகத்தை அழிக்கும் மத்திய அரசு தேசிய விருதைக் கொடுத்தாலும் வாங்கமாட்டேன்” – விஜய் சேதுபதி சொன்னது உண்மையா?

அரசியல் சினிமா

மத்திய அரசு தேசிய விருது கொடுத்தாலும் அதை வாங்கமாட்டேன் என்று நடிகர் விஜய் சேதுபதி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

ஆண்பிள்ளை

Archived link

பிரதமர் மோடி மற்றும் நடிகர் விஜய் சேதுபதி படத்தை ஒன்றாக வைத்து, அதன் மேல் பகுதியில், “தமிழகத்தை அழிக்கிற மத்திய அரசின் தேசிய விருதை நிச்சயம் வாங்க மாட்டேன். எனக்கு என் மண், என் தமிழ் மக்கள்தான் முக்கியம்” – விஜய் சேதுபதி என்று கூறப்பட்டுள்ளது.

இந்த படத்தின் கீழ், “வடநாட்டு நடிகனெல்லாம் மோடிக்கு ஆதரவாக இருக்கும்போது, தில்லாக எதிர்த்த தமிழன் விஜய் சேதுபதி. தமிழனுக்கு மட்டுமே சொந்தமான திராணி கெத்து விஜய் சேதுபதி” என்று கூறப்பட்டுள்ளது.

இதை Jakkariya என்பவர் “ஆண்பிள்ளை” என்ற நிலைத்தகவலுடன் 2019 மே 12ம் தேதி பகிர்ந்துள்ளார். இதை ஏராளமானோர் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழகத்தை அழிக்கிற மத்திய அரசின் விருதை வாங்க மாட்டேன் என்று விஜய் சேதுபதி கூறியது உண்மையா என்று கண்டறிய கூகுளில் தேடினோம். அப்போது இது தொடர்பான செய்திகள் கிடைத்தன.

VIJAY SETHUPATHI 2.png

2017ம் ஆண்டு ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய விஜய்சேதுபதி, தேசிய விருது பெறமாட்டேன் என்று கூறியது தெரியவந்தது.

இதுதொடர்பாக தினமலர் வெளியிட்ட செய்தியைப் பார்த்தோம். அதில், “இன்றைக்கு மத்திய அரசு நீட் தேர்வு, நவோதயா பள்ளி என்று தமிழக அரசு மீது அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் உங்களுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டால் அதனை பெற்றுக்கொள்வீர்களா?” என்று கேட்டுள்ளனர்.

அதற்கு விஜய் சேதுபதி, “இது கொஞ்சம் அட்வான்சான கேள்வி. இருந்தாலும் பதில் சொல்கிறேன். நீட் தேர்வால் ஒரு உயிரைப் பறிகொடுத்திருக்கிறோம். இதுபோன்ற ஒரு காலகட்டத்தில் எனக்கு விருது அறிவிக்கப்பட்டால் அதை நான் பெற்றுக்கொள்ள மாட்டேன். விருதைவிட என் மக்களின் உணர்வே எனக்கு முக்கியம்” என்றார். அந்த செய்தியைப் பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Archived link

இந்த பேட்டி, இந்து தமிழ், ஃபிலிம் பீட் உள்ளிட்ட பல இணையதளங்களில் வெளியாகி இருந்தது. ஆனால், எதிலும் தமிழகத்தை அழிக்கும் மத்திய அரசு என்று விஜய் சேதுபதி கூறியதாக இல்லை.

இதனால், இந்த நிகழ்ச்சியின் வீடியோவை ஆய்வு செய்தோம். அதில், 11வது நிமிடத்தில், “கவலைப்படாதீங்க நான் வாங்க மாட்டேன். நாம் நசுக்கப்படுவது உண்மைதான்” என்று விஜய் சேதுபதி கூறுவதைக் காணலாம். ஆனால், தமிழகத்தை அழிக்கும் மத்திய அரசு என்று அவர் கூறவில்லை.

Archived link

மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளது போன்று, மத்திய அரசின் விருதை வாங்க மாட்டேன் என்று விஜய் சேதுபதி கூறியது உண்மைதான். ஆனால், தமிழகத்தை அழிக்கும் மத்திய அரசு என்று கூறவில்லை. நாம் நசுக்கப்படுகிறோம் என்று மட்டுமே சொல்லியுள்ளார். இதன் மூலம், உண்மையும் பொய்யும் கலந்து இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது என்பது நிரூபிக்கப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு பாதி உண்மை, பாதி தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:“தமிழகத்தை அழிக்கும் மத்திய அரசு தேசிய விருதைக் கொடுத்தாலும் வாங்கமாட்டேன்” – விஜய் சேதுபதி சொன்னது உண்மையா?

Fact Check By: Praveen Kumar 

Result: Mixture

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •