
“அர்ஜுன் சம்பத் வாயில் இருந்து வேதம் வெளிவரப்போவது வேதனை அளிக்கிறது” என்று எச்.ராஜா ட்வீட் செய்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
எச்.ராஜா ட்வீட் ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிரப்பட்டது போன்று பதிவு உள்ளது. அதில், “திருமாவளவனை இந்து மதத்தில் இருந்து விலக்க அர்ஜுன் சம்பத் யாகம் செய்வதாக அறிந்தேன். வேதத்தை கேட்டாலே காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டிய …. வாயில் இருந்து வேதம் வெளிவரப்போவது வேதனை அளிக்கிறது. ராமபிரான் நம்மிடையே இல்லாததை எண்ணி வருந்துகிறேன்” என்று உள்ளது.
இந்த பதிவை, Kampuli Ayubkhan என்பவர் 2019 நவம்பர் 21ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
நவம்பர் 20ம் தேதி எச்.ராஜா மகள் திருமணத்தில் பங்கேற்று வந்துள்ளார் அர்ஜுன் சம்பத். அடுத்த நாளே அர்ஜுன் சம்பத்தை விமர்சித்து எச்.ராஜா ட்வீட் போட்டு இருப்பாரா என்ற சந்தேகத்தோடு எச்.ராஜாவின் ட்விட்டர் பக்கத்தை ஆய்வு செய்தோம். அப்போது, நவம்பர் 21ம் தேதி அவர் எந்த ஒரு ட்வீட்டையும் வெளியிடவில்லை. நவம்பர் 20ம் தேதிக்குப் பிறகு, 22ம் தேதிதான் அவர் பதிவிட்டிருந்தார்.

Archived Link |
வேறு எங்காவது எச்.ராஜா கூறிய கருத்தை அவருடைய ட்வீட் போல போலியாக தயாரித்து வெளியிட்டுள்ளார்களா என்று கூகுளில் தேடினோம். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.
அப்போதுதான் அவருடைய ஐ.டி-க்கும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட படத்தில் உள்ள ட்விட்டர் ஐ.டி-க்கும் வித்தியாசம் இருப்பதை பார்த்தோம்.
எச்.ராஜாவின் ட்விட்டர் பக்கமானது H Raja @HRajaBJP என்று இருந்தது. ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள ட்விட்டர் ஐடி-யோ, அதில், H Raja @echarajabjp என்று இருந்தது. இதன் மூலம் எச்.ராஜா இந்த பதிவை வெளியிடவில்லை என்பது உறுதியானது.

உண்மையில், H Raja @echarajabjp என்ற பெயரில் ட்விட்டர் கணக்கு ஏதும் உள்ளதா, அதில் இந்த பதிவு வெளியாகி உள்ளதா என்று தேடினோம். அப்போது, எச்.ராஜா படத்துடன் குறிப்பிட்ட அந்த ஐடி-யில் ட்விட்டர் அக்கவுண்ட் இருந்தது தெரிந்தது. 2018ம் ஆண்டு அந்த பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை அதில் எந்த ஒரு பதிவும் வெளியாகவில்லை. ஒருவேளை இந்த அக்கவுண்டில் விஷமத்தனமான பதிவுகளை வெளியிட்டு அதை ஸ்கிரீன் ஷாட்டு எடுத்து அழித்துவிடுகிறார்களோ என்னவோ…

நம்முடைய ஆய்வில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள ட்விட் எச்.ராஜா வெளியிட்டது இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், எச்.ராஜா கூறியதாக பகிரப்படும் விஷமத்தனமான ட்விட்டர் ஸ்கிரீன் ஷாட் போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:அர்ஜுன் சம்பத் வாயில் இருந்து வேதம் வருவது வேதனை என்று எச்.ராஜா கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: False
