பாஜகவுக்கு யார் அதிகம் சொம்படிப்பது என்ற தலைப்பில் மதன் ரவிச்சந்திரன் விவாதம் நடத்தினாரா?

அரசியல் சமூக ஊடகம்

‘’பாஜக யார் சரியாக சொம்பு தூக்குவது,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒரு செய்தியை காண நேரிட்டது. இந்த தலைப்பில் உண்மையிலேயே வின் டிவி விவாத நிகழ்ச்சி நடத்தியதா என விவரம் அறிய முயற்சித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

Troll Mafia எனும் ஃபேஸ்புக் ஐடி மேற்கண்ட பதிவை வெளியிட்டுள்ளது. இதில், வின் டிவி பெயரில் மதன் ரவிச்சந்திரன் நடத்தும் விவாத நிகழ்ச்சி ஒன்றின் பெயரில் நியூஸ் கார்டு வெளியிட்டுள்ளனர். அதில், ‘’மதன் ரவிச்சந்திரன் – பாஜக பிரிவு ஆசிரியர்,’’ எனக் குறிப்பிட்டு, ‘’பாஜகவுக்கு யார் சரியாக சொம்பு தூக்குவது? எடப்பாடி பழனிசாமியா! ஓ.பன்னீர்செல்வமா!,’’ என்ற தலைப்பில், கிஷோர் கே. சுவாமி – இடது சாரி எதிர்ப்பாளர், வலதுசாரி ஆதரவாளர், திமுக எதிர்ப்பாளர், அதிமுக ஆதரவாளர், ஆகிய பிரிவுகளில் விவாதிக்க உள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளனர். இந்த நியூஸ் கார்டின் தேதி நவம்பர் 19, 2019 என்று காட்டுகிறது. இது உண்மையா, பொய்யா என தெரியாமல் கமெண்ட் பாக்ஸில் சிலர் சந்தேகம் எழுப்பியதை காண முடிந்தது. எனவே, வாசகர்களை குழப்பும் வகையில் உள்ளதால் இதன் உண்மைத்தன்மை பற்றி ஆராய தீர்மானித்தோம்.

உண்மை அறிவோம்:

சமீப காலமாக, ஊடகத்துறை மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் அதிக விமர்சனத்திற்கு ஆளான நபராக மதன் ரவிச்சந்திரன் உள்ளார். பத்திரிகையாளரான மதன் சர்ச்சைக்குரிய கேள்விகளை கேட்பதாகக் கூறி திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அவருக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், சக ஊடகவியலாளர்கள் தனக்கு எதிராக சதி செய்வதாகவும் அவரே அடிக்கடி குறிப்பிட்டு வருகிறார். 

இந்நிலையில்தான், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு வெளியாகியுள்ளது. அதில், வின் டிவியின் அரசியல் பிரிவு ஆசிரியர் மதன் ரவிச்சந்திரன் எனக் கூறாமல், பாஜக பிரிவு ஆசிரியர் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இதுபோல ஒரு ஊடகத்தின் பெயரில் போலியான நியூஸ் கார்டை தயாரித்து பகிர்வது அண்மைக்காலமாக வழக்கமாகியுள்ளது. இதனால் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களை உபயோகிக்கும் பொதுமக்கள் உண்மை எது, பொய் எது எனத் தெரியாமல் குழம்ப நேரிடுகிறது. மேலும், ஊடகங்களின் பெயரில் போலியான செய்தியை தயாரித்து வெளியிடுவது சைபர் குற்றமாகும். விளையாட்டுக்குச் செய்கிறேன் என்பதை கடந்து தனிப்பட்ட அரசியல் விரோதத்திற்காக இப்படி செய்வதை பலர் வாடிக்கையாகச் செய்கின்றனர்.

இதையடுத்து, வின் டிவியின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் ஆய்வு மேற்கொண்டோம். அதில், நவம்பர் 19, 2019 அன்று வெளியான நியூஸ் கார்டின் உண்மை விவரம் கிடைத்தது. 

Facebook LinkArchived Link

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், வின் டிவியில் மதன் ரவிச்சந்திரன் நடத்திய விவாத நிகழ்ச்சியின் தலைப்பு வேறு ஒன்றாக இருக்க, நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவலை பகிர்ந்துள்ளனர் என்று தெளிவாகிறது. 

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை ஆய்வு செய்யாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:பாஜகவுக்கு யார் அதிகம் சொம்படிப்பது என்ற தலைப்பில் மதன் ரவிச்சந்திரன் விவாதம் நடத்தினாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False