
பொன்.ராதாகிருஷ்ணன் மனநலம் சரியில்லாதவர் போன்று செயல்படுகிறார் என்று எச்.ராஜா கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
நியூஸ் 7 தமிழ் மற்றும் நியூஸ் 18 தமிழ்நாடு ஆகிய நியூஸ் கார்டுகளை ஒன்று சேர்த்துப் பதிவிட்டுள்ளனர். நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டில், “மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஒரு மனநலம் சரியில்லாதவர் போன்று செயல்படுகின்றார் – ஹெச்-ராஜா விமர்சனம்” என்று உள்ளது.
நியூஸ் 18 தமிழ்நாடு நியூஸ் கார்டில் “எச்.ராஜா தேவையில்லாமல் பேசிக்கொண்டிருந்தால் விளக்கமாத்தால் அடித்து, அவரது சொந்த மாநிலத்துக்கு விரட்டுவேன். பொரி உருண்டையார்” என்று உள்ளது.
இந்த பதிவை, பார்ப்பன தந்திரம் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 ஜனவரி 6ம் தேதி வெளியிட்டுள்ளது. 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் என்று குறிப்பிட்டிருப்பதன் மூலம் இது பழைய கார்டுகள் தற்போதும் சுற்றி வருவது தெரிந்தது. மத்திய அமைச்சராக பொன் ராதாகிருஷ்ணன் இருந்தபோது, நானும் திராவிடன்தான் என்று பேட்டி அளித்தார். அதற்கு எச்.ராஜா அதிருப்தி வெளியிட்டிருந்தார். எனவே, அந்த காலகட்டத்தில் இந்த நியூஸ் கார்டு வந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இப்படி சண்டை போடும் வகையில் எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் கருத்தை வெளிப்படுத்தினார்களா என்ற அறிய கூகுள் செய்து பார்த்தோம். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.

Search Link | webdunia.com | Archived Link |
நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட நியுஸ் கார்டு பார்க்க அசல் போல தெரிந்தது. ஆனால், பொரி உருண்டையார் என்று கிண்டல் தொனியில் நியூஸ் 18 கார்டில் குறிப்பிடப்பட்டு இருந்ததால் எச்.ராஜாவுக்கு பதிலடியாக போலியாக உருவாக்கினார்களோ என்ற சந்தேகம் எழுந்தது. நியூஸ் 7 தமிழ், நியூஸ் 18 தமிழ் நாடு நியூஸ் கார்டுகளில் வெளியான தேதி இடம் பெற்றிருக்கும். ஆனால், இதில் தேதி அகற்றப்பட்டு இருந்தது. மேலும், நியூஸ் 7 தமிழ், நியூஸ் 18 தமிழ் நாடு நியூஸ் கார்டுகளில் உள்ள தமிழ் ஃபாண்ட், வடிவமைப்பு உள்ளிட்டவற்றில் வித்தியாசங்கள் இருந்தன.

எனவே, இந்த நியூஸ் கார்டை அவர்கள்தான் வெளியிட்டார்களா என்பதை, உறுதி செய்ய சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி ஊடகங்களை அணுகி விசாரித்தோம். இது போலியான நியூஸ் கார்டு என்று அவர்கள் உறுதி செய்தனர்.

இதைத் தொடர்ந்து பா.ஜ.க மூத்த நிர்வாகி ஒருவரைத் தொடர்புகொண்டு இந்த தகவல் பற்றி கருத்துக் கேட்டோம். அப்போது இவர், “எந்த சூழ்நிலையிலும் எச்.ராஜா, பொன் ராதாகிருஷ்ணன் இப்படி பேசியது இல்லை. இது போலியான நியூஸ் கார்டு” என்றார்.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், “பொன்.ராதாகிருஷ்ணன் மனநலம் சரியில்லாதவர் போல் செயல்படுகிறார்” என்று எச்.ராஜா கூறியதாகவும், “எச்.ராஜா தேவையில்லாமல் பேசிக்கொண்டிருந்தால் விளக்கமாத்தால் அடித்து அவரது சொந்த ஊருக்கு அனுப்புவேன்” என்று பொன் ராதாகிருஷ்ணன் கூறியதாகவும் பகிரப்படும் நியூஸ் கார்டுகள் போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:பொன்.ராதாகிருஷ்ணன் மனநலம் சரியில்லாதவர் என்று எச்.ராஜா விமர்சித்தாரா?
Fact Check By: Chendur PandianResult: False

தெரியாது தவருக்காக மன்னித்துவிடுங்கள்