நிர்மலா தேவி விவகாரத்தில் ஸ்டாலின், தமிழன் பிரசன்னாவுக்குத் தொடர்பா? ஃபேஸ்புக் விஷமம்

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழகம்

கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க வழக்கறிஞர் தமிழன் பிரசன்னாவுக்கு தொடர்பு இருப்பதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மற்றும் தி.மு.க வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா ஆகியோ படங்களுடன் பகிரப்பட்ட பதிவு ஒன்றை ஸ்கிரீன் ஷாட் எடுத்து பதிவிட்டது போல உள்ளது. அதில், “நிர்மலா தேவி விவகாரத்தில் விலகுகிறது மர்மம்! ஸ்டாலின் பெயரை போட்டுடைத்தார் நிர்மலா தேவி. தமிழன் பிரசன்னாதான் ஸ்டாலினுக்காக பெண்களை தேர்ந்தெடுப்பார் எனவும் நீதிமன்றத்தில் நிர்மலா தேவி அதிரடி வாக்குமூலம்” என்று உள்ளது.

இந்த பதிவை, Republic Tamil News என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Mohan Velu B என்பவர் 2020 ஜனவரி 17ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை ஶ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் தமிழக ஆளுநர் முதல் பல முக்கிய நபர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது.  தன்னை கட்டாயப்படுத்தி ஒப்புதல் வாக்குமூலம் வாங்கினார்கள் என்று எல்லாம் நிர்மலா தேவி கூறியிருக்கிறார். வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் அது பற்றி நாம் ஆய்வு மேற்கொள்ளவில்லை.

இது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று தேடினோம். அப்போது, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா ஆகியோரைத் தொடர்புபடுத்தி எந்த ஒரு செய்தியும் வரவில்லை. அதே நேரத்தில், இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று 2018ம் ஆண்டு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியது தொடர்பான செய்திகளும், கடைசியாக வழக்கிலிருந்து விலகுவதாக வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் கூறியது தொடர்பான செய்திகளும் கிடைத்தன. 

vikatan.comArchived Link

வழக்கு விசாரணையிலிருந்து வழக்கறிஞர் விலகுவதுதான் லேட்டஸ்ட் அப்டேட் என்பதால், அது பற்றித் தெரிந்துகொள்ள, அதில் ஸ்டாலினை தொடர்புபடுத்தி ஏதாவது கூறினாரா என்றும் பார்த்தோம். எல்லா ஊடகங்களிலும் அமைச்சர் ஒருவர் மிரட்டுகிறார், விசாரணை நியாயமாக நடக்காது என்பதால் விலகுகிறேன் என்று வழக்கறிஞர் கூறியதாக பொதுப்படையாக செய்தி வெளியிட்டிருந்தன.

கலைஞர் செய்திகளில் மட்டும் ஆளுநர், அமைச்சர் உதயகுமார் பெயரை வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் வெளிப்படையாக குறிப்பிட்டதாக செய்தி வெளியிட்டிருந்தனர். கலைஞர் தொலைக்காட்சி என்பது தி.மு.க-வின் ஊடகம் என்பதால் அது எந்த அளவுக்கு உண்மையானது என்று தெரியாது. எனவே, அதை மட்டுமே ஆதாரமாக கொள்ள முடியாது என்று வீடியோ ஏதும் கிடைக்கிறதா என்று தேடினோம்.

kalaignarseithigal.comArchived Link 1
maalaimalar.comArchived Link 2
tamil.asianetnews.comArchived Link 3

வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் பேச்சை எந்த தொலைக்காட்சி ஊடகமாவது வெளியிட்டுள்ளதா என்று தேடினோம். ஆனால், பேட்டி அளித்த காட்சிகளைப் பயன்படுத்தியிருந்தார்களே தவிர, பேட்டியாக ஒளிபரப்பவில்லை. நீண்ட தேடுதலுக்குப் பிறகு வீடியோ ஒன்று கிடைத்தது. அது 2020 ஜனவரி 10ம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது.

Archived Link

அதில் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் பேசிய காட்சிகள் முழுமையாக இருந்தன. அவர் பேசும்போது.  “இந்த வழக்கில் தமிழகத்தின் ஆளுநர் நேரடியாக தொடர்பில் உள்ளார் என்று பேராசிரியர் நிர்மலாதேவி என்னிடம் கூறியிருந்தார். அம்பு மட்டும்தான் நிர்மலா தேவி. அம்பை எய்தவர்கள் யார் என்பதுதான் என்னுடைய கேள்வி. அதற்கு அவர் ஒத்துழைப்பு அளிக்க மறுக்கிறார். கேட்டால், என்னுடைய மகளைக் கடத்திவிடுவோம் என்று அமைச்சர் ஒருவர் மிரட்டுகிறார் என்கிறார். எந்த அமைச்சர் அப்படி கூறினார் என்று கேட்டால், உதய குமார் என்கிறார். ‘வருவாய்த்துறை அமைச்சர் உதய குமார் மிரட்டுகிறார், அவர் பெயரைச் சொல்லி மிரட்டுகிறார்கள்’ என்கிறார். அவரைப் பார்த்திருக்கின்றீர்களா என்று கேட்டபோது, ‘பார்த்துள்ளேன். மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் அவரை சந்தித்துள்ளேன்’ என்கிறார். 

அரசு நிர்வாகம் ஆட்டுவிப்பதற்கு நிர்மலா தேவி உடன்படுகிறார். அரசின் கட்டுப்பாடு காரணமாக நிர்மலாதேவி பயந்துகொண்டிருக்கிறார். நிர்மலா தேவி, கருப்பசாமி, முருகன் ஆகிய மூன்று பேரை மட்டுமே வைத்து வழக்கை முடிக்க முயல்கிறார்கள். இதற்கு நான் உடன்பாடு இல்லை. வேறு மாநிலத்தில் இந்த வழக்கை நடத்தினால் நியாயம் கிடைக்கும். இல்லை என்றால் இந்த ஆட்சி இருக்கும் வரை, இந்த ஆளுநர் இருக்கும்வரை, இந்த அமைச்சர் உதயகுமார் இருக்கும்வரை இந்த வழக்கில் நீதி, நியாயம் கிடைக்காது. எனவே, இந்த வழக்கிலிருந்து என்னை விடுத்துக்கொள்வதாக முடிவு செய்துள்ளேன்” என்று கூறினார். 

இது குறித்து தமிழன் பிரசன்னாவை தொடர்புகொள்ள தி.மு.க முக்கிய பிரமுகர் ஒருவரிடம் பேசினோம். “இது தவறான தகவல், பா.ஜ.க-வினர் செய்யும் கேவலமான செயல்” என்று கொந்தளிப்பான பதில் வந்தது. தொடர்ந்து அவர்களிடம் பேசுவது சரியாக இருக்காது என்பதால், வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியனிடம் பேச முடிவு செய்தோம்.

இது குறித்து வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியனைத் தொடர்புகொண்டு பேசினோம். அப்போது “என்னது ஸ்டாலின் பெயரா?” என்று அதிர்ச்சியடைந்த அவரிடம், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு பற்றி எடுத்துரைத்து, நம்முடைய ஆய்வைப் பற்றியும் விளக்கினோம். நம்மிடம் பேசிய அவர், “இது முழுக்க முழுக்க பொய்யான தகவல். 100 சதவிகிதம் பொய்யானது. இது கண்டிப்பாகத் தடை செய்ய வேண்டும்” என்றார்.

நம்முடைய ஆய்வில்

நிர்மலா தேவி வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியது தெரியவந்துள்ளது.

தமிழக அமைச்சர் ஒருவர் நிர்மலா தேவியை மிரட்டுகிறார், எனவே வழக்கு விசாரணைக்கு அவர் ஒத்துழைப்பு அளிக்க மறுக்கிறார் என்று நிர்மலா தேவியின் வழக்கறிஞர் கூறிய செய்திகள் கிடைத்துள்ளன.

வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் பேட்டி வீடியோ கிடைத்துள்ளது.

மு.க.ஸ்டாலினுக்கும் இந்த வழக்குக்கும் தொடர்பு என்ற பகிரப்படும் தகவல் தவறானது என்று வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் நம்மிடம் தெரிவித்துள்ளார்.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில்  “நிர்மலா தேவி விவகாரத்தில் விலகுகிறது மர்மம்! ஸ்டாலின் பெயரைப் போட்டுடைத்தார் நிர்மலா தேவி…” என்று பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:நிர்மலா தேவி விவகாரத்தில் ஸ்டாலின், தமிழன் பிரசன்னாவுக்குத் தொடர்பா? ஃபேஸ்புக் விஷமம்

Fact Check By: Chendur Pandian 

Result: False