ஆசாரி பூணூலை அறுக்கச் சென்ற நபருக்கு அடி உதை: போலி செய்தியால் சர்ச்சை

அரசியல் | Politics தமிழகம்

‘’ஐயர் என நினைத்து ஆசாரி பூணூலை அறுக்கச் சென்ற ராமசாமி நாயக்கர் சீடருக்கு தலையில் தக்காளி சட்னி,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்படும் ஒரு புகைப்பட செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link 

மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், தலையில் ரத்தக் காயத்துடன் காட்சியளிக்கும் ஒருவரின் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’ #அய்யர் என நினைத்து #ஆசாரி பூநூலை அறுக்க முயன்ற ராமசாமி நாயக்கர் சீடருக்கு உளி மூலமாக தலையில் தக்காளி சட்னியை ஊத்திவிரட்டிய ஆசாரி.. #சபாஷ்_ஆசாரி,’’ என எழுதியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
இந்த புகைப்பட பதிவின் கமெண்டிலேயே பலரும் இதுபற்றி பகிரப்படும் தகவல் தவறு; இது தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினருக்கும், திராவிட கழகத்தினருக்கும் இடையே நிகழ்ந்த மோதல் எனக் குறிப்பிட்டு, கமெண்ட் பகிர்ந்திருந்ததைக் காண நேரிட்டது. 

இதை வைத்துப் பார்த்தால், இது வேறொரு சம்பவம் தொடர்பான புகைப்படம் என்றும், இதில், ஆசாரி, ஐயர் என பலரையும் உள்ளிழுத்து அரசியல் நோக்கத்துடன் தவறான தகவலை பரப்ப முயன்றுள்ளனர் என்றும் சந்தேகம் எழுகிறது.

இதையடுத்து, மேற்கண்ட புகைப்படம் பற்றி தகவல் அறியும் வகையில் அதனை கூகுளில் பதிவேற்றி, ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, இதுதொடர்பான செய்தி விவரம் கிடைத்தது.

இதன்படி, குறிப்பிட்ட செய்தி லிங்கை கிளிக் செய்து படித்து பார்த்ததில், ‘’தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் நீண்ட நாள் கோரிக்கையான பட்டியல் வெளியேற்ற கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, பகுஜன் திராவிட கட்சியினர் 11.12.2019 அன்று போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் மீது மர்ம நபர்கள் சிலர் கற்களை வீசி கடுமையாக தாக்கினர். இதில், போராட்டக்காரர்கள் பலத்த காயம் அடைந்ததோடு, அவர்களின் வாகனமும் சேதமடைந்தது,’’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.

RedFoxTamil Website News LinkArchived Link

இதே செய்தியின் தொடர்புடைய மற்றொரு ஃபாலோ அப் செய்தியையும் மேற்கண்ட இணையதளத்தில் காண நேரிட்டது. அதனை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

குறிப்பிட்ட இணையதளத்தை பார்வையிட்டதில் (https://redfoxtamil.com/) மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெறும் உள்ளூர் செய்திகள் குறிப்பாக, தேவேந்திர குல வேளாளர் தொடர்பான அரசியல் செய்திகளை தனி கவனத்துடன் பதிவேற்றம் செய்துவருவதை காண நேரிட்டது.

இதையடுத்து, மதுரை மாவட்ட செய்தியாளர்கள் தரப்பில் கேட்டபோது, இதே தகவலை உறுதிப்படுத்தினர். இதுதொடர்பாக, போலீஸ் விசாரணை நடைபெறுவதாகவும், தெரிவித்தனர். ஆனாலும், இச்செய்திக்கு, மற்ற முன்னணி ஊடகங்களில் முக்கியத்துவம் தரப்படவில்லை.

இதுதவிர, மேற்கண்ட புகைப்படம் தொடர்பாக, ஃபேஸ்புக்கில் சிலர் (https://www.facebook.com/profile.php?id=100016712139366) தொடர்ந்து விமர்சனங்களை பதிவிட்டு வருவதையும் காண முடிந்தது. இதன்மூலமாக, தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் உட்பிரச்னை இது என்று தெளிவாகிறது.

அதேசமயம், இதனை பகிர்ந்தவர் உண்மை தெரிந்தே, பெரியாரிஸ்ட்களை கிண்டல் செய்கிறேன் என்ற பெயரில் இப்படி கதை எழுதியிருக்கலாம் என்றும் சந்தேகம் உள்ளது. இதனை பகிர்ந்தவர்கள் பலர் உண்மை விவரம் தெரியாமல் ஷேர் செய்துள்ளனர். எனவே, ‘தாக்குதல் நடந்தது உண்மை, ஆனால், தாக்கியவர்கள் ஆசாரி சமூகத்தினர் இல்லை; அதற்கான காரணம் வேறு ஒன்று; இது ஜாதி ரீதியான பிரச்னை,’ என்பதன் அடிப்படையில், பாதி உண்மை, பாதி தவறான தகவல் இந்த ஃபேஸ்புக் பதிவில் உள்ளதாக, உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் பாதி உண்மை, பாதி தவறான தகவல் உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய குழப்பமான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:ஆசாரி பூணூலை அறுக்கச் சென்ற நபருக்கு அடி உதை: போலி செய்தியால் சர்ச்சை

Fact Check By: Pankaj Iyer 

Result: Partly False