
சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்ய தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வந்தபோது, பா.ஜ.க வேட்பாளர் எச்.ராஜா மது போதையில் இருந்ததாக சமூக வலைத்தளங்களில் படத்துடன் செய்தி ஒன்று வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆராய்ந்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு…
தகவலின் விவரம்:
குடிபோதையில் இருந்த எச்ச ராஜா!!!
டென்ஷன் ஆன திருமதி.பிரேமலதா விஜயகாந்த்!!!
சிவகங்கை தொகுதியில் பிரச்சாரம் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் வேட்பாளர் எச்ச.ராஜாவுக்காக பிரச்சாரம் மேற்கொண்டார் அப்பொழுது எச்ச.ராஜா மது போதையில் இருந்ததால் கடுப்பான பிரேமலதா விஜயகாந்த்
இந்த பதிவில், பா.ஜ.க தேசிய செயலாளரும் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி பா.ஜ.க வேட்பாளருமான எச்.ராஜா அருகில் தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இருப்பது போன்ற படம் வெளியிடப்பட்டள்ளது. அதில், எச்.ராஜா மிகவும் சோர்வுடன் இருக்கிறார். ஆனால், எச்.ராஜா மது அருந்தியிருந்ததால் பிரேமலதா விஜயகாந்த் டென்ஷன் ஆனார் என்று சொல்லப்பட்டுள்ளது. சோர்வாக இருக்கும் எச்.ராஜா படத்தை வைத்து மது அருந்தியதால் மயக்கத்தில் உள்ளது போல காட்டியுள்ளனர். எச்.ராஜா அட்மின் என்ற ஃபேஸ்புக் குழு இந்த பதிவை வெளியிட்டுள்ளது. எச்.ராஜா மற்றும் பா.ஜ.க எதிர்ப்பு காரணமாக அதிக அளவில் இந்த தகவல் பகிரப்பட்டுள்ளது.
உண்மை அறிவோம்:
பா.ஜ.க தேசியத் தலைவரான எச்.ராஜா, சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். தமிழக முதல்வர், துணை முதல்வர், ஜி.கே.வாசன் உள்ளிட்ட தலைவர்கள் அவருக்கு ஆதரவாகப் பிரசாரம் மேற்கொண்டனர். அந்த வகையில், பா.ஜ.க-வின் கூட்டணிக் கட்சியான தே.மு.தி.க-வின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் எச்.ராஜாவுக்கு ஆதரவாக கடந்த ஏப்ரல் 5ம் தேதி பிரசாரம் மேற்கொண்டார்.
ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளது போல. அப்போது எச்.ராஜாவுக்கும் பிரேமலதா விஜயகாந்துக்கும் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டதா என்று கூகுளில் தேடினோம். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் இல்லை.

அதேநேரத்தில், எச்.ராஜா மிகவும் தைரியமானவர். மனதில் பட்டதை வெளிப்படையாக சொல்லக்கூடியவர் என்று புகழ்ந்து தள்ளியதாகத்தான் செய்தி வெளியாகி இருந்தது. இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
பிரேமலதா பிரசாரம் தொடர்பான வீடியோ ஏதேனும் உள்ளதா என்று கூகுளில் தேடினோம். அப்போது, கேப்டன் டி.வி வீடியோ ஒன்று கிடைத்தது.

அதில், எச்.ராஜாவுக்கு ஆதரவாக பிரேமலதா வாக்கு சேகரித்தார். இருவரும் தனித்தனி வாகனத்தில் இருந்தபடி வாக்கு சேகரித்துள்ளனர். ஃபேஸ்புக் பதிவில் உள்ளது போன்று எந்த ஒரு நிகழ்வும் பதிவு செய்யப்படவில்லை. வீடியோ இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது.
ராஜா மது அருந்தி இருந்தார் என்று சொல்லப்பட்டுள்ள அந்தப் பதிவில் உள்ள படத்தை தேடினோம். ராஜாவின் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கத்தில் இந்த படம் ஏதேனும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்று தேடியபோது படம் கிடைக்கவில்லை. ஆனால், சிவகங்கையில் ராஜாவும் பிரேமலதா விஜயகாந்தும் தனித்தனி வாகனத்தில் இருந்தபடி பிரசாரம் செய்ததற்கான தெளிவான படம் மட்டுமே கிடைத்தது.
பதிவில் பயன்படுத்தப்பட்ட படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜில் பதிவேற்றம் செய்து தேடினோம். அப்போது, ஒரே ஒரு செய்தியுடன் கூடிய படம் மட்டும் நமக்கு கிடைத்தது.


அந்த படத்தின் லிங்கை ஓப்பன் செய்து பார்த்தோம். அதில், விஜயகாந்த் போல எச்.ராஜாவும் தைரியமானவர் என்று சிவகங்கை தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் செய்த செய்திதான் இருந்தது. அந்த செய்தியில், பிரேமலதா அருகில் எச்.ராஜா நிற்கும் படம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
அந்த படத்தை எடுத்து, எச்.ராஜாவை இழிவுபடுத்தும் வகையில் வாசகங்களைச் சேர்த்து பதிவைத் தயார் செய்திருப்பது தெரிந்தது.
இது தொடர்பாக பா.ஜ.க தேர்தல் செய்திப் பிரிவு அமைப்பாளர் S.N.பாலாஜியிடம் கேட்டபோது, “அவருக்கு அந்த பழக்கமே இல்லை. அவரை வீம்பாக சீண்டிவிட்டுப் பார்க்கின்றனர். அவர் எவ்வளவு நல்லவர் என்பது அருகில் இருந்து பார்க்கும் எங்களைப் போன்றவர்களுக்குத் தெரியும். தவறான தகவல் பரப்புவதை நிறுத்திக்கொள்வது நல்லது” என்றார். இந்த தொலைபேசி உரையாடல், சட்ட ரீதியான காரணங்களுக்காக, ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பதிவை வெளியிட்ட எச்.ராஜா அட்மின் பின்னணியை ஆய்வு செய்தோம். எச்.ராஜா அட்மின் என்ற பெயரைப் பார்த்ததுமே இது கண்டிப்பாக எச்.ராஜாவை கிண்டல் செய்யும் பக்கம் என்பது புரிந்தது. உள்ளே சென்று பார்த்தபோது எச்.ராஜா, பா.ஜ.க எதிர்ப்பு பதிவுகள் கொட்டிக்கிடந்தன.
இப்பக்கத்தின் கவர் படமாக, “தமிழக மக்கள் ஓட்டு போட்டு பி.ஜே.பி ஆட்சிக்கு வரவில்லை” என்று எச்.ராஜா கூறியதை வைத்துள்ளனர். இந்த செய்தி உண்மையானதுதான். இது தொடர்பாக நாம் ஏற்கனவே உண்மை கண்டறியும் ஆய்வு நடத்தியுள்ளோம். இதைப் பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
எச்.ராஜா சொன்ன சர்ச்சைக்குரிய கருத்துக்கள், எச்.ராஜா பற்றி மற்றவர்கள் சொன்ன குற்றச்சாட்டுக்கள், எச்.ராஜா பற்றிய கேலி – கிண்டல்கள் இந்த பக்கத்தில் நிறைந்திருந்தன. இதன் மூலம், எச்.ராஜாவுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருவது உறுதியானது.
இதுவரை நமக்குக் கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில் தெரியவந்த உண்மையின் விவரம்,
1 ) எச்.ராஜா – பிரேமலதா விஜயகாந்த் பற்றி இவர்கள் கூறுவதைப் போல, எந்த செய்தியும் கிடைக்கவில்லை.
2) பிரேமலதா பிரசாரம் தொடர்பான கேப்டன் தொலைக்காட்சி வீடியோ நமக்கு கிடைத்துள்ளது.
3) இணையத்தில் வெளியான படத்தை பயன்படுத்தி அவதூறு செய்தி தயார் செய்யப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.
4) தமிழக பா.ஜ.க தேர்தல் செய்திப் பிரிவு அமைப்பாளர் பாலாஜி மறுப்பு தெரிவித்துள்ளார்.
5) பதிவிட்டவரின் பின்னணி, சந்தேகப்படும்படி உள்ளது, தனிப்பட்ட அரசியல் காரணத்திற்காக, இப்படி தவறாக சித்தரித்துள்ளனர்.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில் எச்.ராஜா தொடர்பான செய்தி வேண்டுமென்றே திட்டமிட்டு, அவதூறு பரப்பும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக, முடிவு செய்யப்படுகிறது.
முடிவு:
எச்.ராஜா மது அருந்தினார் என்ற செய்தியில் உண்மை இல்லை என்பது உரிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ என எதையும் உறுதிப்படுத்தாமல், மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Title:குடிபோதையில் எச்.ராஜா: ஃபேஸ்புக் புகைப்படத்தால் சர்ச்சை
Fact Check By: Praveen KumarResult: False
