தமிழக மக்கள் ஓட்டுப்போட்டு பி.ஜே.பி ஆட்சிக்கு வரவில்லை: எச்.ராஜா பரபரப்பு

அரசியல்

“தமிழக மக்கள் ஓட்டுப்போட்டு பி.ஜே.பி ஆட்சிக்கு வரவில்லை” என்று பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா பேசியதாக சமூக வலைத்தளங்களில் ஒரு மீம்ஸ் வேகமாகப் பரவி வருகிறது. இதன் உண்மைத் தன்மையை பரிசோதிக்க முடிவு செய்தோம்.

வதந்தியின் விவரம்

“நீங்க எந்த தமிழக மக்கள் ஓட்டு போட்டு ஆட்சிக்கு வரலைனு ஏளனமா சொன்னீங்ளோ, இன்னைக்கு அதே தமிழக மக்கள் கிட்ட ஓட்டு கேட்க வச்சாரு பார்த்தீங்களா” என்று பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜாவை கேட்கும் வகையில் இந்த மீம் தயாரிக்கப்பட்டுள்ளது.

Archive link

தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை சொல்பவர், பகிர்பவர் எச்.ராஜா. அதனால், அவர் அப்படி சொல்லியிருக்கக் கூடும் என்று நம்பி பலரும் இதை ஷேர் செய்துள்ளனர். அதிலும், தேர்தல் நேரம் என்பதால் பதிவிடப்பட்ட ஒரு சில நாட்களிலேயே பல ஆயிரம் பேரால் ஷேர் செய்யப்பட்டுள்ளது.

உண்மை அறிவோம்

பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா, அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களை சொல்வதும், அது தமிழகத்தில் பிரச்னையாக உருவெடுப்பதும் வழக்கம். குறிப்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தைப் பற்றி எச்.ராஜா அவதூறாக பேசியது மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. பின்னர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டதைத் தொடர்ந்து அந்த பிரச்னை முடித்து வைக்கப்பட்டது. இது பற்றிய செய்திக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்.

இந்நிலையில், சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதிக்கு பா.ஜ.க சார்பில் எச்.ராஜா போட்டியிடுகிறார். எனவே, எதிர்க்கட்சிகள் யாரேனும் எச்.ராஜா பற்றி இவ்வாறு போலி மீம் தயாரித்து வெளியிட்டுள்ளனரா அல்லது எச்.ராஜா இவ்வாறு பேசினாரா என்று சந்தேகம் எழுந்தது. இந்த மீமில், விகடன் லோகோ இருப்பதால், எச்.ராஜா பேசியது ஏதேனும் விகடனில்  ஏதேனும் போட்டோ கார்டு, செய்தி வெளியாகி இருக்கிறதா என்று தேடினோம்.

விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் டிசம்பர் 19, 2018ல் இந்த மீமில் இடம் பெற்ற படம் நமக்குக் கிடைத்தது.

Archive link

குறிப்பிட்ட அந்த தேதியில் வேறு செய்தி ஏதேனும் வெளியாகி இருக்கிறதா என்று விகடன் இணையத்தில் தேடினோம். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17ம் தேதி கோயமுத்தூரில் நிருபர்களுக்கு எச்.ராஜா பேட்டி அளித்த போது, “தமிழக மக்கள் ஓட்டுப்போட்டு பி.ஜே.பி ஆட்சிக்கு வரவில்லை” என்று கூறியதாக செய்தி ஒன்று நமக்குக் கிடைத்தது. அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

மற்ற ஊடகங்களில் இச்செய்தி வெளியாகி உள்ளதா என்று கூகுளில் தேடியபோது, மாலை மலர், ஒன்இந்தியா உள்ளிட்டவற்றிலும் வெளியாகி இருப்பதைக் காண முடிந்தது.

தமிழகத்தில், கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது தே.மு.தி.க, பா.ம.க, ம.தி.மு.க என மிகப்பிரம்மாண்ட கூட்டணியை ஏற்படுத்தி, பாஜக போட்டியிட்டது. அந்த தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட பொன் ராதாகிருஷ்ணன், தர்மபுரி தொகுதியில் பா.ம.க சார்பில் போட்டியிட்ட அன்புமணி என இருவர் மட்டுமே வெற்றிபெற்றனர். இதுதொடர்பான பிபிசி தமிழ் செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

இந்திய அளவில் பா.ஜ.க 282 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இதில், பொன் ராதாகிருஷ்ணனின் வெற்றியும் அடங்கும். தமிழகத்தில் ஒரே ஒரு வேட்பாளர் வெற்றிபெற்ற போதும், ஆட்சி அமைக்கத் தேவையான 272 சீட்களை விட அதிக அளவிலான இடங்களில் பா.ஜ.க வெற்றிபெற்றிருந்தது. பா.ஜ.க கூட்டணி மொத்தம் 336 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இதன் அடிப்படையில் எச்.ராஜா இவ்வாறு கருத்து கூறியிருந்திருக்கலாம்.

கஜா புயல் பாதிக்கப்பட்ட சூழலில், பிரதமர் மோடி ஏன் வரவில்லை என்று நிருபர்கள் கேட்டதற்குத்தான் ராஜா மேற்கண்டவாறு பதில் அளித்துள்ளார். தற்போது, நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள சூழலில், மக்களிடம் வாக்கு கேட்டு செல்ல வேண்டிய நிலை ராஜாவுக்கு. இதனால், அவர் சொன்ன அந்த பதிலை எடுத்து, தற்போது எதிர்க்கட்சிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

இதற்கு முன்பும்கூட எச்.ராஜா இதே பதிலை சொல்லியிருக்கிறார். கடந்த 2017ம் ஆண்டு ட்விட்டரில் ஒருவர் வெளியிட்ட பதிவுக்கு பதில் அளிக்கும் வகையில் ட்வீட் செய்துள்ளார் எச்.ராஜா. அதில், “தமிழகத்தில் பலரும் தற்போது பா.ஜ.க மீது குற்றம்சாட்டுகின்றனர். தேர்தலின்போது அவர்கள் ஆதரவு அளித்தது இல்லை. இது பாசாங்கத்தின் உச்சம் இல்லையா?” என்று கேட்டிருந்தார். அப்போதே அது சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்படி என்றால், தமிழகத்துக்கு பிரதமர் மோடி இல்லையா என்று எல்லாம் எதிர்விமர்சனம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Archive link

நாம் கண்டறிந்த வகையில், சிவகங்கை மக்களவை தொகுதியில் பா.ஜ.க சார்பில் எச்.ராஜா போட்டியிடுகிறார். இதுபற்றிய அறிவிப்பு போட்டோ கார்டு, “தமிழக மக்கள் ஓட்டுப்போட்டு பி.ஜே.பி ஆட்சிக்கு வரவில்லை” என்று ராஜா சொன்னதாக விகடனில் வெளியான போட்டோ கார்டு ஆகியவற்றை பயன்படுத்தி, மேலே குறிப்பிட்ட பதிவை உருவாக்கியுள்ளனர்.

மேலும், “எந்த மக்களின் வாக்குகளால் நாங்கள் ஆட்சிக்கு வரவில்லை என்று கூறினீர்களோ, அதே தமிழக மக்களிடம் வாக்கு கேட்க வேண்டிய நிலை உங்களுக்கு வந்துவிட்டது பார்த்தீர்களா” என்றும் அதில் எச்.ராஜாவிடம் கேட்டுள்ளனர். ஆதார புகைப்படம் கீழே தரப்பட்டுள்ளது.

இதைப் பதிவிட்டவர் எந்த அரசியல் அமைப்பையும் சார்ந்தவராக இல்லை. இருப்பினும், அவருடைய பதிவுகள் எல்லாம் அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி எதிர்ப்பு என்ற வகையிலேயே இருந்தது. இதனால் இவருடைய பதிவுகள் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சியினரால் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

நாம் மேற்கொண்ட ஆய்வில் நமக்குக் கிடைத்த உண்மையின் விவரம்:

1. சர்ச்சைக்குரிய கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டு வருபவர் எச்.ராஜா.
2. தமிழக மக்கள் ஓட்டுப்போட்டு பா.ஜ.க ஆட்சிக்கு வரவில்லை என்ற எச்.ராஜாவின் பேச்சை போட்டோ கார்டாக வெளியிட்டது ஆனந்த விகடன்தான்.
3. இது தொடர்பான செய்தி விகடன், மாலைமலர், ஒன் இந்தியா இணையத்தில் வெளியாகி உள்ளது.
4. “தேர்தலின் போது வாக்களிக்காத தமிழக மக்கள்… இப்போது குற்றம்சாட்டுவது பாசாங்கு இல்லையா” என்று ஏற்கனவே எச்.ராஜா வெளியிட்ட ட்விட்டர் பதிவு நமக்குக் கிடைத்துள்ளது.

இந்த ஆதாரங்களின் அடிப்படையில், கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ம் தேதி, கோவையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது எச்.ராஜா அவ்வாறு பேசியது உண்மைதான் என்பது தெளிவாகிறது.  

முடிவு

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் இந்த செய்தி உண்மைதான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஃபேஸ்புக்கில் அதிகமாக ஷேர் செய்யப்படுவதால், பார்ப்பதற்கு வதந்தி போல தெரிகிறது. எனினும், இது தேர்தல் காலம் என்பதால், எச்.ராஜா பேசியதை தேடி எடுத்து, இவ்வாறு பதிவு வெளியிட்டுள்ளனர் என்பது சந்தேகமின்றி தெளிவாகிறது.   

Avatar

Title:தமிழக மக்கள் ஓட்டுப்போட்டு பி.ஜே.பி ஆட்சிக்கு வரவில்லை: எச்.ராஜா பரபரப்பு

Fact Check By: Praveen Kumar 

Result: True

 • 41
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  41
  Shares