பிரான்ஸ், டென்மார்க்கில் நிரந்தரமாக ரெட் புல் எனர்ஜி டிரிங் தடை செய்யப்பட்டதா?

உலகச் செய்திகள் வர்த்தகம்

‘’பிரான்ஸ், டென்மார்க்கில் ரெட் புல் எனர்ஜி டிரிங் நிரந்தரமாக தடை செய்யப்பட்டது,’’ என்று கூறி பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவு ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். 

தகவலின் விவரம்: 

Facebook Claim LinkArchived Link

உண்மை அறிவோம்:
இதில் கூறப்பட்டுள்ளதுபோல, ரெட் புல் எனர்ஜி டிரிங்கை பிரான்ஸ், டென்மார்க் அரசுகள் தடை செய்தனவா என்று விவரம் தேடினோம்.

அப்போது ரெட் புல் எனர்ஜி டிரிங்கில் கலந்துள்ள Taurine பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்துவதாக உள்ளதென்று கூறி பிரான்ஸ் அரசு தற்காலிக தடை விதித்ததாகவும், பின்னர் அதனை நீக்கிவிட்டதாகவும் தெரியவந்தது.

இந்த தற்காலிக தடை தற்போது நீக்கப்பட்டுவிட்டது. Taurine கலந்த ரெட் புல்லை விற்காமல், அதற்கு நிகரான மாற்று வகை எனர்ஜி டிரிங்கை தயாரித்து, அந்நிறுவனம் பிரான்சில் விற்பனை செய்த கதையும் நடந்திருக்கிறது. பிறகு, Taurine ரசாயனம், உடல் உபாதை தருவதற்கான சாத்தியக்கூறுகள் நிரூபிக்கப்படாமல் போன காரணத்தால், வேறு வழியின்றி பிரான்ஸ் அரசு ரெட் புல் விற்பனைக்கு அனுமதி அளித்துள்ளது. இதுபற்றி விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யவும். 

Reuters LinkArchived Link 

அதாவது, பிரான்ஸ் நாட்டில் 12 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டு, தற்போது நீக்கப்பட்டுவிட்டது. அங்கு ரெட் புல் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், அதனை பிரான்ஸ் அரசு இன்னமும் தீவிர கண்காணிப்பில்தான் வைத்துள்ளது. ஒருவேளை தீங்கு ஏற்படுவதாக நிரூபிக்கப்பட்டால், எப்போது வேண்டுமானாலும் முற்றிலுமாக ரெட் புல் தடை செய்யப்படும் என்பதே பிரான்ஸ் அரசின் தற்போதைய நிலைப்பாடாகும்.

சமீபத்தில் கூட செஸ் விளையாட்டு வீரர் நாகமுரா ரெட் புல் எனர்ஜி டிரிங்கை விளம்பரம் செய்தது பற்றி சர்ச்சையான தகவல் வெளியானது. அதனையும் இங்கே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம். 

Chess-news.ruArchived Link 

இதுபோலவே, ஜெர்மனி, டென்மார்க், நார்வே போன்ற நாடுகளும் ரெட் புல் விற்பனைக்கு தடை விதித்திருந்தன. ஆனால், ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் நாடுகள் அனைத்திலும் 2014 முதலாக, ரெட் புல் மீதான தடை நீக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது.

ஆனாலும், ஐரோப்பிய நாடுகள் அனைத்துமே, ரெட் புல் மீது கடும் கண்காணிப்பை மேற்கொண்டுள்ளன. இதனால், அந்த நிறுவனம் அடிக்கடி சட்ட ரீதியான பிரச்னைகளை சந்தித்து வருகிறது. டென்மார்க், லித்துவேனியா போன்ற நாடுகள் திடீரென ரெட் புல்லுக்கு தடை விதிப்பதும், பின்னர் நீக்குவதும் என மாறி மாறி வழக்கமாக நடைபெறுகிறது.

அமெரிக்கா, குவைத் போன்ற நாடுகள் கூட ரெட் புல் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. 

TIME Link Archived Link 

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,

1) ரெட் புல் எனர்ஜி டிரிங்கில் கலக்கப்படும் Taurine, Caffeine மீது உலக அளவில் பெரும் சந்தேகம் உள்ளது. ஆனாலும், இதனால் என்ன பாதிப்பு ஏற்படும் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.

2) பிரான்ஸ் நாடு ரெட் புல் எனர்ஜி டிரிங்க் மீது தடை விதித்ததும், மற்ற ஐரோப்பிய நாடுகளும் ஒவ்வொன்றாக தடை விதித்திருக்கின்றன. எனினும், பிரான்ஸ் பின்னர் தடையை நீக்கிவிட்டது. இதையடுத்து, 2014ம் ஆண்டு ஐரோப்பிய யூனியன் நாடுகள் அனைத்துமே மீண்டும் ரெட் புல் விற்பனைக்கு அனுமதி அளித்துள்ளன.

3) ரெட் புல் மீது நிரந்தர தடை எதுவும் பிரான்ஸ் விதிக்கவில்லை. 12 ஆண்டுகள் விதித்த தடையை 2008ம் ஆண்டே நீக்கிவிட்டது. இருந்தாலும், சந்தேகத்தின் பேரில் ரெட் புல் மீது பல ஐரோப்பிய, ஆசிய, அமெரிக்க நாடுகளும் முன்னெச்சரிக்கையாக தடை விதிப்பதும், பின்னர் நீக்குவதையும் செய்து வருகின்றன.

எனவே, ரெட் புல் எனர்ஜி டிரிங்கில் எத்தகைய ஆபத்து உள்ளதென்று இதுவரை ஆய்வுப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்று தெரியவருகிறது. அத்துடன், பிரான்ஸ், டென்மார்க் போன்ற ஐரோப்பிய நாடுகள் ரெட் புல்லை தடை செய்வதும், பின்னர் அனுமதிப்பதும் தொடர்கதையாக உள்ளதாக, உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தியில் நம்பகத்தன்மை இல்லை என நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய நம்பகத்தன்மை இல்லாத செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால் +91 9049044263 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு தகவல் தெரிவியுங்கள்.

Avatar

Title:பிரான்ஸ், டென்மார்க்கில் நிரந்தரமாக ரெட் புல் எனர்ஜி டிரிங் தடை செய்யப்பட்டதா?

Fact Check By: Pankaj Iyer 

Result: Partly False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •