மகாராஷ்டிர மாநிலத்தில் சாதுக்களை அடித்து கொலை செய்த வன்முறை கும்பலை போலீசார் அடித்து கைது செய்தனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link 1Archived Link 2

2 நிமிடம் 10 விநாடிகள் ஓடக்கூடிய வீடியோவை பகிர்ந்துள்ளது. அதில் இளைஞர்கள், முதியவர்கள் என பலரையும் போலீசார் அடித்து விரட்டுகின்றனர். பார்க்க பலர் இஸ்லாமியர்கள் போல உள்ளனர். வீடு புகுந்தும் இளைஞர்களை போலீசார் அடித்து இழுத்து வருகின்றனர். நிலைத் தகவலில், "மஹாராஷ்டிரா மாநிலத்தில் சாதுக்களை அடித்து கொன்ற கொடுரர்களை தர்ம அடி கொடுத்து கைது செய்த காவல்துறையினர்" என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை Bharat Mata Ki Jai என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 ஏப்ரல் 23ம் தேதி வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மகாராஷ்டிர மாநிலம் பால்கார் மாவட்டத்தில் சாதுக்கள் இருவர் மற்றும் கார் ஓட்டுநர் என மொத்தம் மூன்று பேரை கிராம மக்கள் அடித்தே கொன்றனர். அந்த பகுதியில் திருடர்கள் நடமாட்டம் உள்ளதாக பரவிய வதந்தி காரணமாக சாதுக்கள் அடித்து கொள்ளப்பட்டனர். சாதுக்களை அடித்தது இஸ்லாமியர்கள் என்று வதந்தி பரவியது. இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 101 பேரில் ஒருவர் கூட இஸ்லாமியர் இல்லை என்று பட்டியலை மகாராஷ்டிர அரசு வெளியிட்ட பிறகு அந்த பிரச்னை கொஞ்சம் அடங்கியது. இது தொடர்பாக நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் வெளியிட்ட கட்டுரையை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

ஆனால், தற்போது சாதுக்களை கொன்றவர்களை அடித்து கைது செய்த போலீஸ் என்று குறிப்பிட்டு இஸ்லாமியர்கள் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டது போன்று பரப்பும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர். இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்று ஆய்வு மேற்கொண்டோம்.

வீடியோவை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். நீண்ட தேடலுக்குப் பிறகு இந்த வீடியோ ஏப்ரல் 9ம் தேதி யூடியூபில் சிலர் பதிவேற்றம் செய்திருப்பதைக் காண முடிந்தது. ஆனால், எங்கே இந்த வீடியோ எடுக்கப்பட்டது என்ற தகவல் இல்லை.

தொடர்ந்து தேடியபோது உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு ஊரடங்கு பணியில் ஈடுபட்ட போலீசார் மீது பொது மக்கள் தாக்குதல் நடத்தியதாகவும், தாக்குதல் நடத்தியவர்களை போலீசார் தடியடி கைது செய்ததாகவும் ஒரு பதிவு நமக்கு கிடைத்தது.

threadreaderapp.comArchived Link

இதன் அடிப்படையில் உ.பி, பரேலி, கோவிட்19 உள்ளிட்ட கீ வார்த்தைகளை வைத்து கூகுளில் தேடியபோது இது தொடர்பான செய்திகள் நமக்கு கிடைத்தன. டைம்ஸ் நவ் வெளியிட்ட செய்தியில் இந்த வீடியோவின் சில காட்சிகள் இருந்தன. அதே நேரத்தில் ஏப்ரல் 7ம் தேதி வெளியான ட்வீட் பதிவில் முழு வீடியோவும் இடம் பெற்றிருந்தது. அதில், பரேலியில் நேற்று (ஏப்ரல் 6ம் தேதி) போலீஸ் தடியடி நடத்தியது" என்று குறிப்பிட்டிருந்தனர்.

Archived LinkYoutube Link

மகாராஷ்டிர மாநிலம் பால்காரில் சாதுக்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஏப்ரல் 16ம் தேதி நடந்தது. இது தொடர்பாக மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே வெளியிட்ட ட்வீட் கீழே…

Archived Link

இதன் மூலம், உத்தரப்பிரதேசத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசார் மீது தாக்குதல் நடத்தியவர்களை போலீசார் தடியடி நடத்தி கைது செய்த வீடியோவை மகாராஷ்டிராவில் சாதுக்களை கொலை செய்த கும்பல் கைது என்று விஷமத்தனமாக பதிவிட்டிருப்பது உறுதி செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில் இந்த பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு உண்மையுடன் தவறான தகவலும் சேர்த்து பகிரப்பட்டுள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:மகாராஷ்டிராவில் சாதுக்களை கொன்றவர்களை போலீசார் அடித்து கைது செய்தனரா?

Fact Check By: Chendur Pandian

Result: False