
‘’ராமர் கோயில் கட்டும் இடத்தில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்ட மூலப்பத்திரம் கிடைத்தது,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் தகவல் ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

ஆகஸ்ட் 3, 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘’ இப்போது ராமர் கோயில் கட்ட அஸ்திவாரம் தோண்டும்போது அங்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ராமர் கோயில் பற்றிய விபரம் கேப்ஸ்யூல் வடிவில் தாமிரத்தகட்டில் மூலப்பத்திரமாக இருந்தது கிடைத்துள்ளது.🇮🇳🙂,’’ என்று எழுதியுள்ளனர்.
அதில இணைக்கப்பட்டுள்ள வீடியோவில், கேப்சூல் வடிவில் ஒரு பொருள் காட்டப்படுகிறது. அதனை ஒருவர் பிரித்து, உள்ளே இருந்து, தாமிர தகடு போன்ற பொருளை வெளியே எடுத்துக் காட்டுகிறார்.
இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட வீடியோவின் ஒரு ஃபிரேமை பிரித்தெடுத்து, கூகுளில் பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது இது ஒரு வதந்தி என தெரியவந்தது.
முதன்முதலில், இதனை இந்தியில் ட்விட்டர் வாசகர் ஒருவர் ‘’ராம ஜென்ம பூமி இடத்தில் நடந்த அகழாய்வின்போது, ஒரு தாமிர குப்பி கிடைத்தது. அதில், ஒரு கடிதமும் இடம்பெற்றுள்ளது‘’ என்ற தலைப்பில் பகிர்ந்திருக்கிறார். அது படிப்படியாக, மற்ற மொழிகளுக்கும் பரவ தொடங்கியுள்ளது.
இதுவே, தமிழ் மொழியை எட்டியபோது, ‘’ராமர் கோயில் கட்டும் இடத்தில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டிருந்த கோயில் தொடர்பான மூலப்பத்திரம் தாமிர தகட்டில் எழுதி வைக்கப்பட்டுள்ளது,’’ என்ற கூடுதல் தகவலை சேர்த்துள்ளனர்.
உண்மையில், இந்த தாமிர குப்பியின் உள்ளே காணப்படும் தகட்டில் என்ன மொழி எழுதப்பட்டுள்ளது என்று பார்த்தால், ஹீப்ரு மொழி என தரவுகள் சொல்கின்றன. எனவே, இது சமஸ்கிருதம் எனச் சொல்வது தவறான தகவல்.

இதில் உள்ள லட்சினையை பார்த்தால், நமது சந்தேகம் இன்னும் வலு பெறுவதை உணர முடியும். இதுபற்றிய வீடியோ செய்தி ஆதாரம் கீழே தரப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை முதன்முதலாக, கடந்த ஏப்ரல் மாதத்தில் Define Avcilari என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதன்முதலாக பகிர்ந்துள்ளனர். இது ஒரு கைவினைப் பொருட்கள், நாணயங்கள் போன்றவற்றை பகிரக்கூடிய இன்ஸ்டாகிராம் ஐடி ஆகும்.
பாரசீக மொழியில் பகிரப்பட்டுள்ள இந்த இன்ஸ்டாகிராம் பதிவில், இந்த பொருள் இந்தியாவில், அதிலும் குறிப்பாக, ராமர் கோயில் அல்லது அயோத்தியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக எதுவும் குறிப்பிடவே இல்லை. இதனை புராதன கலைப் பொருள் என்கிற ரீதியில்தான் அடையாளப்படுத்தி பதிவை வெளியிட்டுள்ளனர்.
ஆனால், இது பல்வேறு மொழிகளை கடந்து, இந்திய மொழிகளை எட்டியபோது, தற்போதுள்ள ராமர் கோயில் விவகாரத்தை தொடர்புபடுத்தி சிலர் வேண்டுமென்றே தவறான தகவலை பரப்பியுள்ளனர் என்று தெரியவருகிறது.
சில நாள் முன்பாக, ராமர் கோயில் கட்டுமிடத்தில், கோயில் பற்றிய விவரங்கள் அடங்கிய ஆவணங்களை டைம் கேப்சூல் ஒன்றை ஏற்படுத்தி, ஆழத்தில் புதைக்கப் போவதாக செய்திகள் பரவின. பிறகு, அதனை அயோத்தி ராமர் கோயில் கட்டும் அறக்கட்டளை மறுத்தது. இதுபற்றி நாமும் செய்தி வெளியிட்டிருக்கிறோம்.
அறக்கட்டளையினர் இப்படி எந்த திட்டமும் இல்லை என மறுத்துள்ளதால், டைம் கேப்சூல் பதிக்கப்படுவதாகப் பரவும் வதந்திக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக, இதுபோன்ற புதுப்புது வீடியோ அல்லது புகைப்பட ஆதாரங்களை சிலர் மேற்கோள் காட்டி தகவல் பகிர தொடங்கியுள்ளனர். அதில் ஒன்றுதான் மேலே நாம் கண்ட வீடியோ பதிவும்.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட ஃபேஸ்புக் வீடியோ பற்றிய தகவல் தவறானது என நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், +91 9049044263 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு தகவல் தெரிவியுங்கள்.

Title:அயோத்தி ராமர் கோயில் கட்டும் பகுதியில் தாமிரத் தகட்டில் எழுதிய மூலப்பத்திரம் கிடைத்ததா?
Fact Check By: Pankaj IyerResult: False
