நாசரேத்தில் இயேசு கிறிஸ்து வாழ்ந்த வீட்டின் படமா இது?
இயேசு கிறிஸ்து வாழ்ந்த வீடு, என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
அகழாய்வு செய்யப்பட்ட புகைப்படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில் "நம்முடைய ஆண்டவர் இயேசு வாழ்ந்த வீடு" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை Saravanan என்பவர் 2020 ஆகஸ்ட் 3ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கிறிஸ்தவர்கள் கடவுளாக வழிபடும் இயேசு வளர்ந்த இடம் என்று குறிப்பிட்டுள்ளதால் பலரும் ஷேர் செய்து வருகின்றனர். இந்த தகவல் உண்மையா, இயேசு இங்குதான் வாழ்ந்தார் என்பதை எதன் அடிப்படையில் உறுதி செய்தார்கள் என்று தெரிந்துகொள்ள ஆய்வு மேற்கொண்டோம்.
இயேசு பெத்தலகேமில் பிறந்தார். அதன் பிறகு எகிப்துக்கு கொண்டு செல்லப்பட்டார். ஏரோது மன்னன் இறந்த பிறகு அவரது பெற்றோர் நாசரேத் என்ற ஊரில் குடியேறினார்கள் என்று பைபிள் கூறுகிறது. அதன் அடிப்படையில் நாசரேத்தில் கண்டறியப்பட்ட பழைய வீட்டை இயேசுவின் வீடு என்று குறிப்பிட்டிருப்பார்கள் என தெரிகிறது.
படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது, இயேசு வாழ்ந்த காலத்தைச் சேர்ந்த வீடு என்று சில செய்திகள் கிடைத்தன. அதைப் படித்துப் பார்த்தோம், 2009ம் ஆண்டு இஸ்ரேல் நாட்டில் உள்ள நாசரேத்தில் ஆராய்ச்சியாளர்கள் அகழாய்வில் ஈடுபட்டனர்.
தற்போது உள்ள நாசரேத் என்பது கடந்த நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட நகரம் என்பதால், அதற்கு அருகில் ஒரு கிறிஸ்தவ தேவாலயத்துக்கு அருகில் அகழாய்வு பணி நடந்தது. அந்த கிறிஸ்தவ தேவாலயம் முதன் முதலில் நான்காம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அதன் பிறகு பல முறை இடிக்கப்பட்டது. தற்போது 1969ம் ஆண்டு நான்காவது முறையாக கட்டப்பட்டது.
இந்த ஆய்வில், பூமிக்கு அடியில் ஒரு சிறு கிராமம் புதையுண்டு இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அது பொதுக் காலம் (கிறிஸ்து பிறப்புக்குப் பிறகு) 69 முதல் 70ம் ஆண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று கண்டறிந்தனர் என்று இருந்தது.
அதாவது, இயேசு சிறு குழந்தையாக இருந்த காலத்தில் இந்த கிராமம் நாசரேத் என்ற ஊராக இருந்திருக்கலாம், கி.பி முதல் நூற்றாண்டைச் சேர்ந்த இடம் என்று கண்டறியப்பட்டதால் இது இயேசு நன்கு அறிந்த இடமாகக் கூட இருந்திருக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தனர்.
அகழாய்வில், இயேசு பிறந்ததில் இருந்து 50-51 ஆண்டுகளில் வெளியிடப்பட்ட நாணயம் கிடைத்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். அதாவது ஜெருசலேம் நகரம் அழிக்கப்பட்ட யூதர்கள் - ரோமானியர்கள் போர் நடந்த கி.பி 66-67ம் ஆண்டுக்கு முன்பு இங்கு கிராமம் இருந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். எந்த இடத்திலும் இந்த வீட்டில்தான் இயேசு வாழ்ந்தார் என்று குறிப்பிடவில்லை.
கத்தோலிக்க கிறிஸ்தவ நம்பிக்கையின் படி இயேசுவோடு தொடர்புடைய இடங்களில் எல்லாம் தேவாலயம் எழுப்பப்படும் என்று அகழாய்வில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டுள்ளார். அப்படி என்றாலும் கூட இந்த இடம் தேவாலயத்துக்கு அருகிலேயே உள்ளது. இயேசு வாழ்ந்த காலத்தைச் சேர்ந்த கிராமம் கண்டுபிடிப்பு என்று வெளியான செய்தியை, இயேசுவின் வீடு என்று தவறாக புரிந்து கொண்டு பகிர்ந்திருப்பது தெரிகிறது.
நாசரேத்தில் இயேசு வாழ்ந்த வீடு என எதுவும் உள்ளதா என்று தேடியபோது பல அகழாய்வு ஆராய்ச்சியாளர்கள் இது போன்று பழங்கால குடியிருப்புகளை கண்டறிந்து இது இயேசு வாழ்ந்த வீடாக இருக்கலாம் என்று குறிப்பிட்டு ஆய்வுக் கட்டுரை வெளியிட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது.
இயேசு அந்த வீட்டில் வாழ்ந்திருக்கலாம், வந்திருக்கலாம்... ஆனால் அங்குதான் வாழ்ந்தார் என்று அகழாய்வு ஆராய்ச்சியாளர்கள் உறுதியாக கூறாத நிலையில் இந்த பதிவு தவறான புரிதலை ஏற்படுத்தும் என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு உண்மையுடன் தவறான தகவலும் சேர்த்து பகிரப்பட்டுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
Title:நாசரேத்தில் இயேசு கிறிஸ்து வாழ்ந்த வீட்டின் படமா இது?
Fact Check By: Chendur PandianResult: Misleading