
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்ற மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

மதுரை எம்.பி சு.வெங்கடேசன் மற்றும் மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாண படங்களுடன் கூடிய நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “மதுரை சித்திரைத் திருவிழா ரத்து! மதுரை சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது போல், மே 4ம் தேதி நடைபெறும் திருக்கல்யாணம் நிகழ்வும் ரத்து செய்ய வேண்டும். மதுரை எம்.பி சு.வெங்கடேஷ் அறிவிப்பு” என்று உள்ளது.
இந்த பதிவை, Revathi Tnkm என்பவர் உலகின் குரு பாரதம் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் 2020 ஏப்ரல் 18ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ஏற்கனவே, கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது மதுரை சித்திரைத் திருவிழாவை ரத்து செய்ய வேண்டும் என்று சு.வெங்கடேசன் கூறியதாக வதந்தி பரப்பப்பட்டது. அது பற்றி நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் உண்மை கண்டறியும் ஆய்வுக் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.
தற்போது ஓராண்டு கடந்த நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று சு.வெங்கடேசன் கூறியதாக செய்தி பரவி வருகிறது.
இந்த நியூஸ் கார்டில் உள்ள தமிழ் ஃபாண்ட்டும் நியூஸ் 7 தமிழ் வழக்கமாக வெளியிடும் நியூஸ் கார்டு ஃபாண்டுக்கும் வித்தியாசம் இருப்பதைக் காண முடிந்தது. எனவே, நியூஸ் 7 தமிழைத் தொடர்புகொண்டு இது உண்மையா என்று கேட்டோம். அவர்கள் இது போலியான நியூஸ் கார்டு என்று குறிப்பிட்டனர்.

இது குறித்து மதுரை எம்.பி சு.வெங்கடேசனிடம் நேரடியாக இது குறித்து கேட்டோம். அதற்கு அவர், “இது போலியான நியூஸ் கார்டு. இதுபோன்று நான் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இது சம்பந்தமாக நேற்று மதுரை காவல்துறை ஆணையாளரிடம் புகார் கொடுத்துள்ளேன்” என்றார். மேலும் புகார் நகலையும் நமக்கு அனுப்பியும் வைத்தார்.

சு.வெங்கடேசனின் ட்விட்டர் பதிவுகளை பார்த்தபோது இதுதொடர்பாக பதிவு ஒன்றை வெளியிட்டிருந்ததையும் காண முடிந்தது. இதன் மூலம் சு.வெங்கடேசன் மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் பதிவிட்டிருப்பது உறுதியானது.
நம்முடைய ஆய்வில்,
நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட நியூஸ் கார்டு போலியானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பரவும் வதந்தி தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளதாக சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். புகார் நகலையும் நமக்கு அவர் கொடுத்துள்ளார்.
இதன் அடிப்படையில், “மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை நிறுத்த வேண்டும்” என்று சு.வெங்கடேசன் கூறியதாக பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று சு.வெங்கடேசன் கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: False
