‘’முட்டாள் பட்டம் கிடைக்க விளக்கேற்ற வேண்டும்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டு வரும் ஒரு தமிழ் காலண்டர் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link

இதில், காலண்டர் ஒன்றின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அதில், ‘’முட்டாள் பட்டம் கிடைப்பதற்கு அறிவு இருக்க வேண்டும் என்று அவசியமில்லை, வேண்டுதல் இன்றி விளக்கு ஏற்றினாலே கிடைத்துவிடும்,’’ என ஒரு பழமொழி எழுதப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்கும் வகையில், நாட்டு மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும்படி பிரதமர் மோடி அறிவுறுத்தினார். இதன்பேரில், இந்தியா முழுக்க ஊரடங்கு உத்தரவு பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கியுள்ள மக்களை ஊக்குவிக்கும் வகையில் ஏப்ரல் 5, 2020 அன்று இரவு 9 மணிக்கு, சுமார் 9 நிமிடங்கள் அனைவரும் விளக்கேற்றி அல்லது டார்ச் லைட் அடித்து ஒற்றுமையை வெளிப்படுத்த பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இதற்கு, எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்தன.

அதேசமயம், குறிப்பிட்ட நாளில் நாட்டு மக்கள் தமது வீடுகளில் விளக்கேற்றியதோடு பல இடங்களில் பட்டாசு வெடித்து தீ விபத்துகளையும் ஏற்படுத்தினர்.

இதையொட்டி, மோடி மீதான அரசியல் வெறுப்பில் பலவிதமான வதந்திகள் சமூக ஊடகங்களில் பரவ தொடங்கின. அதில் ஒன்றுதான் மேலே உள்ள காலண்டர் பழமொழியும்.

உண்மையில், இவர்கள் குறிப்பிடும் ஆன்லைன் தமிழ் காலண்டரில் அன்றைய தேதியில் இவ்வாறு பழமொழி இடம்பெறவில்லை. அதில், ‘’நெல்லிக்கனியை அதிகம் சாப்பிட்டால் இரத்தம் சுத்தமாகும்,’’ என்றுதான் உள்ளது. இதனை எடுத்து எடிட் செய்து தவறான தகவலை பரப்பியுள்ளனர்.

TamilDailyCalendar LinkArchived Link

இது மட்டுமின்றி, நாம் ஆய்வு செய்யும் காலண்டர் படத்தில் உள்ள லோகோ (www.tamildailycalendar.com), நந்தி உள்ளிட்டவை நமது சந்தேகம் சரிதான் என்று உறுதிப்படுத்துகின்றன.

எனவே, ஆன்லைன் காலண்டரில் உள்ள ஏப்ரல் 5, 2020 அன்றைய தேதி பழமொழியை எடிட் செய்து, தங்களது அரசியல் விருப்பத்திற்கேற்ப தவறான தகவலை பரப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி தெளிவாகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:முட்டாள் பட்டம் கிடைக்க விளக்கேற்ற வேண்டும்- போலியான காலண்டர் பழமொழி!

Fact Check By: Pankaj Iyer

Result: False