
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை, அவரது வீட்டுக்குச் சென்று பிரதமர் மோடி சந்தித்ததாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Link I Archived Link 1 I News Link I Archived Link 2
“முன்னாள் பிரதமர் மன்மோகனை சந்திக்க வீடு தேடி வந்த பிரதமர் மோடி! எதற்குத் தெரியுமா?” என்று தலைப்பிட்டு patrikai.com என்ற இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனைத் தொடர்ந்து கடந்த வாரம் பிரதமர் மோடி, மன்மோகன் சிங்கை அவரது இல்லத்துக்கே சென்று சந்தித்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பாக ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளனர்.
patrikai.com என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த தகவல் ஜூலை 2ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இதைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மத்திய நிதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமன் தன்னுடைய முதல் பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். இந்த நிலையில், ஜூன் 27ம் தேதி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை, அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார் நிர்மலா சீதாராமன்.
இந்தநிலையில், பிரதமர் மோடியே மன்மோகன் சிங் இல்லத்துக்கு நேரில் சென்று, ஜிடிபி தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக சமூக ஊடகங்களில் பலரும் செய்தியைப் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், பத்திரிகை.காம் செய்தி வெளியிட்டிருக்கலாம் என்று தோன்றியது.
பத்திரிகை.காம் செய்தியில், “புதிய நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார். கடந்த 27ம் தேதி முன்னாள் பிரதமரும் பொருளாதார வல்லுநருமான மன்மோகன் சிங்கை சந்தித்து பட்ஜெட் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.இந்த நிலையில் பிரதமர் மோடி, மன்மோகன் சிங் வீட்டுக்கு வருகை தந்தார். அவரை மன்மோகன் சிங் தனது மனைவியுடன் வாசலுக்கு சென்று வரவேற்றார்.
பின்னர் மன்மோகன் வீட்டுக்குள் சென்ற பிரதமர் மோடி, அங்கு அவருடன் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) குறித்து ஆலோசனை நடத்தியதாகவும், அப்போது மன்மோகன் சிங் மோடிக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கியதாகவும் கூறப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த செய்தி உண்மைதானா என்று கண்டறிய ஆய்வு மேற்கொண்டோம். ஆனால், எந்த ஒரு ஊடகத்திலும் இது தொடர்பான செய்தி வெளியாகவில்லை. முன்பு எப்போதாவது மன்மோகன் சிங் இல்லத்துக்கே பிரதமர் மோடி சென்று பார்த்துள்ளாரா என்று ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கொடுக்கப்பட்டுள்ள வீடியோ தொடர்பான தகவல் நமக்குக் கிடைத்தது.
பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் இந்த வீடியோ நமக்குக் கிடைத்தது. 2014ம் ஆண்டு மே 27ம் தேதி இந்த வீடியோவை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். அதில், டாக்டர் மன்மோகன் சிங்கை சந்தித்த பிரதமர் மோடி என்று குறிப்பிட்டுள்ளார். இரண்டு வீடியோவும் ஒன்றாக இருந்ததைக் காண முடிந்தது.
இது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி இருக்கிறதா என்று ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, நரேந்திர மோடியின் இணைய தள பக்கத்தில் வெளியான செய்தி மற்றும் இந்தியப் பிரதமரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியான ட்வீட் நமக்குக் கிடைத்தன.
27 மே 2014ம் ஆண்டு வெளியிடப்பட்ட அந்த ட்வீட்டில், “புது டெல்லியில் நேற்று முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் பிரதமர் சந்தித்தார்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
நம்முடைய தேடலில், சில தினங்களுக்கு முன்பு மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் வைத்து பிரதமர் மோடி சந்தித்தார் என்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் தவறானது என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டதும் தெரிந்தது.
நம்முடைய ஆய்வில்,
சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்துக்குச் சென்றதாக எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை.
மன்மோகன் சிங் இல்லத்துக்கு மோடி சென்றதாகப் பகிரப்பட்டுள்ள வீடியோ, 2014ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மோடியின் அதிகாரப்பூர்வ இணையதளம், ட்விட்டர், யூடியூப் பக்கங்களில் இருந்து ஆதாரம் கிடைத்துள்ளது.
ஜி.டி.பி தொடர்பாக மன்மோகன் சிங் இல்லம் சென்று பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார் என்று பகிரப்படும் தகவல் தவறு என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு மற்றும் செய்தி தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:“மன்மோகன் சிங் வீடு தேடிச் சென்ற மோடி!” – சமூக ஊடகங்களில் பரவும் தகவல் உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
