
இந்து மகாசபை தலைவர் பூஜா சகுண பாண்டே, காந்தி உருவபொம்மையை துப்பாக்கியால் சுடுவது போல, ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, இந்த பெண் இந்து தீவிரவாதியா அல்லது கிறிஸ்தவரா, இஸ்லாமியரா எனக் கேட்டு, ஒருவர் ஃபேஸ்புக்கில் பதிவு வெளியிட்டுள்ளார். அது வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருவதால், உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். தகவலின் விவரம்:

மே 15ம் தேதி, Jaffar Ali Melur என்பவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், ‘’இந்து மதத்தைச் சேர்ந்தவன் தீவிரவாதியாக இருந்தால் அவன் உண்மையான இந்து அல்ல, பிரதமர் மோடி, இந்த அம்மா கிறிஸ்தவரா இல்ல, முஸ்லீமா சவுக்கிதார் ஜீ,’’ என அவர் கேள்வி ஒன்றையும் எழுப்பியுள்ளார்.
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட புகைப்படம் உண்மையான ஒன்றா என முதலில் தேடிப் பார்த்தோம். இதன்படி, கூகுளில் இந்த புகைப்படத்தை பதிவேற்றி, ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது இது உண்மையான புகைப்படம்தான் என தெரியவந்தது. இதுதொடர்பாக, ஏராளமான செய்தி ஆதாரங்களும் கிடைத்தன.

இந்தியாவில் ஆண்டுதோறும் ஜனவரி 30ம் தேதி தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. அன்றைய நாளில்தான், காந்தியை, நாதுராம் கோட்சே சுட்டுக் கொன்றான். இதனால், ஜனவரி 30, நாடு முழுவதும் தியாகிகள் தினமாகக் கடைப்பிடிக்கப்படும் நிலையில், கடந்த 2019, ஜனவரி 30ம் தேதியன்று, உத்தரப்பிரதேசத்தில் உள்ள அகில பாரத ஹிந்து மகாசபா, அலிகார் பகுதியில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. அதில், அந்த அமைப்பின் தேசிய செயலாளர் பூஜனா சகுண பாண்டே பங்கேற்றார். அதன்படி, காந்தியின் உருவபொம்மையை பூஜா சுடுவதுபோலவும், அந்த பொம்மையில் இருந்து, செந்நிற திரவம் வடிவதுபோலவும் வீடியோ எடுத்து, சமூக ஊடகங்களில் வெளியிட்டனர். பின்னர் அவர் கோட்சே சிலைக்கு மாலை அணிவித்தும் மரியாதை செய்திருக்கிறார். இதுபற்றி தி ஸ்க்ரோல் வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவிய நிலையில், பூஜாவை போலீசார் வழக்குப் பதிந்து தேடி வந்தனர். அதற்குள் அவர் தலைமறைவாகிவிட்டார். நீண்ட தேடுதலுக்குப் பின், அவர் பிப்ரவரி மாதத்தில் கைது செய்யப்பட்டார். இதுபற்றி நியூஸ் 18 வெளியிட்ட செய்தி விவரம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த புகைப்படம் உண்மைதான், இந்த சம்பவம் நிகழ்ந்து, 4 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், தற்போது, கோட்சே பற்றி கமல்ஹாசன் கூறிய கருத்துக்கு, பிரதமர் மோடி பதில் அளித்துள்ளார். அதில், ஒரு இந்து தீவிரவாதியாக இருக்க முடியாது என்றும், அப்படி அவன் இருந்தால், அவன் இந்துவே இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மோடியின் கருத்தை விமர்சிக்கும் வகையில், 4 மாதங்களுக்கு முந்தைய புகைப்படத்தை எடுத்து, புதியது போல பகிர்ந்து, மோடிக்கு கேள்வி எழுப்பியும், நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவில் எழுதியுள்ளனர்.
எனவே, இந்த பதிவில் பாதி உண்மை, பாதி சொந்த கருத்து இடம்பெற்றுள்ளதாக, உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், பாதி உண்மை மற்றும் பாதி சொந்த கருத்து இடம்பெற்றுள்ளதாக, நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய நம்பகத்தன்மை இல்லாத செய்தி, புகைப்பட மற்றும் வீடியோ பதிவுகளை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

Title:காந்தி உருவபொம்மையை துப்பாக்கியால் சுட்ட இந்து மகாசபை தலைவர்!
Fact Check By: Parthiban SResult: Mixture
