பாஜக எம்எல்ஏ சுதிர் காட்கில் காரில் இருந்து பணம் பறிமுதல்?

அரசியல் சார்ந்தவை

‘’பாஜக எம்எல்ஏ சுதிர் காட்கில் காரில் இருந்து ரூ.20,000 கோடி பணம் பறிமுதல்,’’ என்ற தலைப்பில், ஃபேஸ்புக்கில் ஒரு வைரல் பதிவை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். அதில் கிடைத்த விவரங்களை இங்கே தொகுத்து அளித்துள்ளோம்.

தகவலின் விவரம்:
பாஜக MLA சுதிர் காட்கில்.இவரது காரிலிருந்து 20,000 கோடி புதிய ரூபாய் நோட்டுகள் பிடிபட்டு உள்ளது.இது பற்றி எந்த

செய்தி ஊடகங்களும் வாய் திறக்கவில்லை.

சமூக வலைதளங்கள்மூலமே பகிர வேண்டும்

Archived Link

பாஜக எம்எல்ஏ சுதிர் காட்கில் காரில் இருந்து ரூ.20,000 கோடி பணம் பறிமுதல் என்பதையே, ஆங்கிலத்தில் யாரோ பகிர்ந்ததை, கட் செய்து எடுத்து, இந்த பதிவில் தமிழ் தலைப்பு சேர்த்து பகிர்ந்துள்ளனர். அதில், சுதிர் காட்கில் உள்ளிட்டோர் நிற்கும் புகைப்படம், கட்டுக்கட்டாக பணம் இருக்கும் புகைப்படங்கள் என 3 புகைப்படங்கள் சேர்த்து பகிரப்பட்டுள்ளன. ஏப்ரல் 10ம் தேதியன்று, இப்பதிவு வெளியிடப்பட்டுள்ளது. பாஜக எதிர்ப்பு சிந்தனை உள்ளவர்களால், அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வரும் இப்பதிவின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்தோம்.

உண்மை அறிவோம்:

இது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் காலம் என்பதால், தேர்தலின் அடிப்படையில் அரசியல் கட்சிகள் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி, பல்வேறு பிரசாரங்களை சமூக ஊடகங்களில் செய்து வருகின்றனர். இதன்படிதான், மேற்கண்ட பதிவும் பகிரப்பட்டுள்ளதாக, நமக்கு தோன்றுகிறது.

இருந்தாலும், சந்தேகத்தை உறுதி செய்ய முதலில், குறிப்பிட்ட புகைப்படத்தை எடுத்து, கூகுள் உதவியுடன் ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பதிவில் உள்ள 3 புகைப்படங்களில், ஒரு புகைப்படத்தின் ஆதார செய்தி கிடைத்தது. இதுதொடர்பான புகைப்பட ஆதாரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

இதன்படி, இந்த 3 புகைப்படங்களில் ஒரு புகைப்படம், நியூஇந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட செய்தியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது தெளிவாகிறது. ரூ.2000 நோட்டுகளை அச்சிடுவதை மத்திய அரசு நிறுத்திவிட்டதாகக் கூறி, நியூஇந்தியன்எக்ஸ்பிரஸ் வெளியிட்ட செய்தியில்தான், இந்த புகைப்படம் இடம்பெற்றுள்ளது. அந்த செய்தியை படிக்க, இங்கே கிளிக் செய்யவும்.

இதேபோல, 2வது பணக்கட்டுகள் இருக்கும் புகைப்படத்தின் ஆதார செய்தியும், அதே கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலிலேயே கிடைத்தது. ஆதார படம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வீடியோ ஒன்றில் இருந்தும், அதே நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட செய்தியில் இருந்தும், மேற்கண்ட 2வது புகைப்படம் திருடப்பட்டதாக, உறுதி செய்யப்படுகிறது. நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இந்த புகைப்படத்துடன் வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும். இதே காட்சி அடங்கிய வீடியோ இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது.

Archived Link

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள 3 புகைப்படங்களில், 2 புகைப்படங்கள் வேறு செய்திகளில் இருந்து எடிட் செய்து எடுக்கப்பட்டவை என உறுதியாகிறது. எனவே, 3வது புகைப்படத்தின் ஆதாரம் எது என தேடிப் பார்த்தோம். கூகுள் சென்று சுதிர் காட்கில் என டைப் செய்து தேடியபோது, இதுதொடர்பாக நிறைய ஃபேஸ்புக் பதிவுகள் மற்றும் செய்திகள் கிடைத்தன.

அதில் ஒரு ஃபேஸ்புக் பதிவில், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்பட பதிவில் உள்ள 3வது புகைப்படம் பற்றியும், இந்த செய்தியின் முழு விவரமும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த ஃபேஸ்புக் பதிவிலேயே, கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 14ம் தேதியன்று சுதிர் காட்கில் காரில் இருந்து ரூ.6 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அது ரூ.500, ரூ.1000 நோட்டுகள் தடை செய்யப்பட்ட பின், நடைபெற்ற சோதனை எனவும் கூறப்பட்டிருந்தது. இதன்படி, சுதிர் காட்கிலின் சகோதரர் கணேஷ் காட்கில், சங்க்லி ஊரக வங்கியின் தலைவராக உள்ளார். அவரது வங்கிக்கு எடுத்துச் சென்ற ரூ.6 கோடி பணத்தையே, போலீசார் பறிமுதல் செய்துவிட்டு, பின்னர் ஒப்படைத்தனர் எனவும், அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவு, 2018ம் ஆண்டு வெளியிடப்பட்டதாகும். அதாவது, சுதிர் காட்கில் பற்றிய வதந்தி கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பரவி வருவதும் உறுதி செய்யப்படுகிறது. இதுபற்றிய செய்தி எதுவும் கிடைக்கவில்லை என்பதால், இந்த ஃபேஸ்புக் பதிவையே இறுதியாக எடுத்துக் கொள்கிறோம்.

Archived Link

இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி, வெவ்வேறு செய்திகளில் இருந்து 3 பதிவுகளை எடுத்து, அவற்றை ஒன்றாக தொகுத்து பகிர்ந்துள்ளனர் என, உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறான தகவல் என உறுதி செய்யப்படுகிறது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ எதையும் உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். ஒருவேளை நீங்கள் அப்படி பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் அளித்தால் உரிய சட்ட நடவடிக்கையை நீங்கள் சந்திக்க நேரிடும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

Avatar

Title:பாஜக எம்எல்ஏ சுதிர் காட்கில் காரில் இருந்து பணம் பறிமுதல்?

Fact Check By: Parthiban S 

Result: False