
முதல்வர் பழனிசாமி அறிமுகம் செய்த கார் வெடித்துச் சிதறியது என்று ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link I Archived Link 1 I News Link I Archived Link 2
“முதல்வர் பழனிசாமி அறிமுகப்படுத்திய சொகுசு கார் வெடித்து சிதறியது! ஹூண்டாய் நிறுவனத்துக்கு சோதனை! அதிமுக உறுப்பினர்கள் வேதனை!” என்று நிலைத்தகவலுடன் செய்தி ஒன்றை டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் தமிழ் பிரிவான Samayam Tamil தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் படம் மற்றும் வெடித்து சிதறிய காரின் படத்தைப் பகிர்ந்திருந்தனர். செய்தியின் லிங்கில், “முதல்வர் பழனிசாமி அறிமுகம் செய்த கார் வெடித்து சிதறியது!” என்று இருந்தது. ஜூலை 20, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளனர். பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சில தினங்களுக்கு முன்பு ஹூண்டாய் நிறுவனத்தின் மின்சாரத்தில் இயங்கும் காரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைத்தார். அதன் பிறகு, அந்த காரில் சிறிது தூரம் பயணமும் செய்தார். அது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இந்தநிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்த கார் வெடித்து சிதறியது என்று தலைப்பிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் ஊடகத்தின் செய்தி ஒன்று சமூக ஊடகங்களில் பரபரப்பை கிளப்பியது.முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்துவைத்த கார், ஒரு சில நாட்களிலேயே வெடித்து சிதறியது என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தவே அது உண்மையா என்று ஆய்வு செய்ய முடிவு செய்தோம். அது தொடர்பாக மற்ற ஊடகங்களில் செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று தேடினோம். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.

ஃபேஸ்புக்கில் அளித்திருந்த செய்தி இணைப்பை கிளிக் செய்து செய்தியை படித்தோம். செய்தியின் லீடிலேயே பொசுக்கென்று போய்விட்டது. கனடா நாட்டில் நடந்த சம்பவத்தை சென்னையில் நடந்த நிகழ்வோடு தொடர்புப்படுத்தி செய்தி வெளியிட்டது தெரிந்தது. தமிழகத்தில் நடந்த மிகப்பெரிய விஷயங்களைப் பற்றி கவலைப்படவே இங்கு பலருக்கும் நேரம் இல்லை. இந்த அழகில், கனடாவில் நடந்த சம்பவத்தால் அ.தி.மு.க தொண்டர்கள் வேதனை அடைந்ததாக குறிப்பிட்டு பகிர்ந்துள்ளனர்.
கனடாவில் இந்த மின்சார கார் வெடித்து சிதறியது உண்மையா என்று ஆய்வு செய்தோம். அப்போது அது உண்மை என்பது உறுதியானது. கனடாவில் கடந்த மார்ச் மாதம் ஹூண்டாய் நிறுவனத்தின் இந்த மின்சாரத்தில் இயங்கும் காரை ஒருவர் வாங்கியுள்ளார். கடந்த ஜூலை 26ம் தேதி வீட்டின் ஷெட்டில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து புகை வந்துள்ளது. திடீரென்று கார் முழுவதும் எரிய ஆரம்பித்து, வெடித்துள்ளது. 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்துள்ளனர்.
இந்த வண்டி முழுவதும் மின்சாரத்தில் இயங்கக் கூடியது. சம்பவம் நடந்தபோது காரை சார்ஜ் செய்யவும் இல்லை என்று உரிமையாளர் கூறியுள்ளார். எதனால் வெடி விபத்து ஏற்பட்டது என்று ஹூண்டாய் நிறுவனமும் விசாரணை நடத்தி வருகிறது என்று அந்த செய்தியில் குறிப்பிட்டு இருந்தனர். அதாவது, எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்வதற்கு முன்பாகவே கனடாவில் இந்த கார் விற்பனைக்கு வந்துவிட்டது. மார்ச் மாதம் வாங்கிய கார், ஜூலை மாதம் எரிந்திருக்கிறது. அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
உண்மை இப்படி இருக்க, பரபரப்புக்காக, வாசகர்களை தங்கள் இணைய தள பக்கத்துக்கு ஈர்க்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக விஷமத்தனமாக தவறான தலைப்பை ‘சமயம் தமிழ்’ வைத்திருப்பது உறுதியாகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:முதல்வர் அறிமுகம் செய்த கார் வெடித்து சிதறியது! – பரபரப்பை ஏற்படுத்திய ‘சமயம் தமிழ்’
Fact Check By: Chendur PandianResult: False Headline
