மோடி பற்றி மீண்டும் மீண்டும் பரவும் போலியான புகைப்படம்!

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

பல ஆண்டுகளுக்கு முன்பு மோடி தரையைக் கூட்டி சுத்தம் செய்யும் படம் என்று சமூக ஊடகங்களில் வைரல் ஆகி, அது போட்டோஷாப் செய்யப்பட்ட படம் என்று உறுதி செய்யப்பட்ட படம் மீண்டும் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

மோடி தரையைக் கூட்டி சுத்தம் செய்வது போன்ற எடிட் செய்யப்பட்ட படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “ஜெயிலை சுத்தம் செய்யும் இந்த கொலைக் குற்றவாளி யார் என்று தெரியுதா. இந்தியாவின் சாபக்கேடு” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை Nakkheeran News tamil Live என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Muhammed Sufian என்பவர் 2020 ஜூன் 27ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

2014 நாடாளுமன்றத் தேர்தலின் போது மோடி எவ்வளவு எளிமையான மனிதர், எந்த அளவுக்கு பின்தங்கிய நிலையிலிருந்து பிரதமர் பதவிக்கு போட்டியிடும் அளவுக்கு வளர்ந்துள்ளார் என்பதைக் காண்பிக்க பா.ஜ.க-வினரால் அதிகம் பகிரப்பட்ட படம் தரையைத் துடைப்பத்தால் பெருக்கி சுத்தம் செய்யும் கருப்பு வெள்ளை படம்.

இந்தியப் பிரதமராக மோடி வந்த பிறகு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த படம் பற்றி பிரதமர் அலுவலகத்தில் கேட்கப்பட்டது. அப்போது இந்த படம் பதிவுகளில் இல்லை, எடிட் செய்யப்பட்ட படம் இது. படத்தில் இருப்பது நரேந்திர மோடி இல்லை என்று கூறி முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. ஆனாலும் பிரதமர் மோடியைப் புகழ, இகழ இந்த படத்தை அவரது ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் என அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். 

jantakareporter.comArchived link

தரையைக் கூட்டிப் பெருக்கும் அசல் படத்தைத் தேடினோம். அது 1946ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்று தெரிந்தது. ஏபி இமேஜஸ்-ல் இந்த புகைப்படத்தை தேடிக் கண்டுபிடித்தோம். 1946ம் ஆண்டு எடுக்கப்பட்ட படத்தை போட்டோஷாப் செய்து மோடி படம் வைத்து வெளியிட்டிருப்பது தெரிந்தது.

apimages.comArchived Link

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில், ஜெயிலை சுத்தம் செய்யும் கொலைக் குற்றவாளி என்று குறிப்பிட்டு பதிவிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி கொலை வழக்கில் தண்டனைப் பெற்று சிறையிலிருந்தவர் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. தங்களுக்கு உள்ள கோபத்தில் மிக அவதூறாக, அநாகரீகமாக இந்த எடிட் செய்யப்பட்டத்தை மோடி என்று குறிப்பிட்டு வெளியிட்டுள்ளது தெரிகிறது.

நம்முடைய ஆய்வில்,

மோடி தரையைக் கூட்டி பெருக்கும் புகைப்படம் போலியானது என்று பிரதமர் அலுவலகம் உறுதி செய்திருப்பது தெரியவந்துள்ளது.

அசல் படம் 1946ம் ஆண்டில் ஏசோசியேட் பிரஸ் எடுத்தது உறுதியாகி உள்ளது.

மோடி கொலைக் குற்றத்துக்காக சிறை தண்டனை பெற்றதாக எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் பிரதமர் மோடி தரையைப் பெருக்கும் இந்த புகைப்படம் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:மோடி பற்றி மீண்டும் மீண்டும் பரவும் போலியான புகைப்படம்!

Fact Check By: Chendur Pandian 

Result: False