FactCheck: 5ஜி கதிர்வீச்சு; பாக்டீரியா காரணம்; ஆஸ்பிரின் மருந்து- கோவிட் 19 மற்றும் இத்தாலி பற்றி பரவும் வதந்தி

அரசியல் கோவிட் 19 சமூக ஊடகம்

‘’5ஜி கதிர்வீச்சு, பாக்டீரியா காரணமாக கோவிட் 19 பரவுகிறது என்று இத்தாலி கண்டுபிடிப்பு,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்: 

Facebook Claim LinkArchived Link

மிக நீளமாக உள்ள இந்த தகவலை, வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் என பல்வேறு சமூக வலைதளங்களிலும் பகிர்ந்து வருகின்றனர். இதில், ‘’இத்தாலி நாட்டில் கொரோனா நோயாளியின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்து பார்த்தனர். அப்போது, கோவிட் 19 என்பவது 5ஜி கதிர்வீச்சால் ஏற்படும் பாதிப்பு என்றும், இதனால், உடலில் ஒருவித பாக்டீரியா உருவாகி, அது ரத்தக்குழாய்களை முடக்குகிறது. இந்த உண்மை வெளியே தெரியக்கூடாது என்பதற்காகவே, உலக சுகாதார நிறுவனம் (WHO) கொரோனா பாதித்து உயிரிழந்தால் பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என்று உலக நாடுகளை அறிவுறுத்தியுள்ளது. ஆனால், இத்தாலி இந்த உண்மை தெரிந்துகொண்டதால், தனது நாட்டில் கொரோனா பாதித்தவர்களுக்கு ஆஸ்பிரின் மாத்திரை தருகிறது. ரத்தம் உறையாமல் தடுக்க சிகிச்சை அளிக்கிறது,’’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இதனை வாசகர்கள் சிலர் தொடர்ச்சியாக, +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மைத்தன்மை பற்றி சந்தேகம் கேட்டதால், நாமும் ஆய்வை தொடங்கினோம்.

உண்மை அறிவோம்:
5ஜி நெட்வொர்க் சேவையால் கதிர்வீச்சு பாதிப்புகள் ஏற்படுவதாகவும், கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு இதுவே காரணம் எனவும் கூறி, கடந்த 2020ம் ஆண்டே, கொரோனா தொற்று உலகம் முழுக்க பரவ ஆரம்பித்ததும், ஐரோப்பிய நாடுகளில், செல்ஃபோன் கோபுரங்களை மக்கள் தீ வைத்துக் கொளுத்தினர்.

cnet.com Link I TheHindu Link I NYtimes Link

ஆனால், அப்போதே, இது ஒரு அடிப்படை ஆதாரமற்ற வதந்தி என்று பல்வேறு உலக நாடுகளும், அமைப்புகளும், ஆய்வாளர்களும் விளக்கம் அளித்துவிட்டனர். ஆனாலும், இந்த தகவல் இன்னமும் ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் மூலமாக பரவி வருகிறது.

எனவே, பழைய செய்தியை புதியதுபோல, மீண்டும் 2021ல் பரப்பி வருகின்றனர் என்று தெரியவருகிறது.

இதுதவிர, கொரோனா வைரஸ் எவை மூலம் பரவாது என்பது பற்றி WHO விரிவான விளக்கமும் ஏற்கனவே அளித்துள்ளது.

WHO advice for public: myth busters

அடுத்ததாக, இவர்கள் கூறுவது போல, கொரோனா வைரஸ் தொற்று என்பது முற்றிலும் பாக்டீரியா பாதிப்பு என்பது தவறாகும். அது, Coronaviridae என்ற வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த SARS-CoV-2 எனும் வகை வைரஸ் தொற்றால் ஏற்படுகிறது. அதனால்தான், அதற்குப் பெயரே கொரானா வைரஸ் தொற்றுநோய். இவற்றுக்கு எதிராக, ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் எதுவும் பலன் தராது.

அந்த வைரஸின் ஆதி முதல் அந்தம் வரை ஏற்கனவே WHO விளக்கம் அளித்துள்ளது.

WHO questions and answers regarding Covid 19

இது மட்டுமின்றி, கொரோனா வைரஸின் Genetic Sequence, Origin, Diagnosis உள்ளிட்ட விவரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

கூடுதல் விவரம்… ncbi.nlm.nih.gov Link

இது தவிர்த்து, கொரோனா வைரஸ் தொற்று ரத்தம் உறைதல் பிரச்னை ஏற்படுத்துகிறதா, என்ற கேள்விக்கான விடையாக, முழு ஆய்வு விவரமும் கீழே தரப்பட்டுள்ளது.

Study Link 1 I Study Link 2

2020ம் ஆண்டே இதுதொடர்பாக, விரிவான ஆய்வு செய்து, Fact Crescendo ஆங்கில பிரிவினர் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதன் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.

Fact Crescendo English Link

எனவே, கொரோனா வைரஸ் ஒரு பாக்டீரியா தொற்று இல்லை, அது ரத்தம் உறைதல் (திரோம்போசிஸ்) ஏற்படுத்தவில்லை என்றும் தெளிவாக தெரியவருகிறது.

இதேபோல, ஹெபரின் ஊசி பயன்பாடு என்பது கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சையில் எங்கே பயன்படுகிறது, எதற்காக என்பது பற்றியும் விரிவான விளக்கம் ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளது.

WHO PDF link I Heparin Injection description Link

எனவே, கொரோனா வைரஸ்க்கு அளிக்கப்படும் ஊசி மருந்தால், ரத்தக் கட்டி ஏற்படுகிறது என்பதும் தவறான தகவல்.

தொடர்ந்து, கொரோனா நோயாளிகள் இறக்கும்பட்சத்தில் பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளதா, என்று தகவல் தேடினோம்.

அப்படி WHO எங்கேயும் குறிப்பிடவில்லை. கொரோனா பாதிப்பு பரவியதும், உலக நாடுகளுக்கு அவர்கள் வெளியிட்ட அறிவுறுத்தல் என்னவென்று கீழே முழு விவரமும் இணைத்துள்ளோம்.

WHO Guidelines for safe management of a dead body in the context of Covid 19

இதேபோல, இத்தாலி நாட்டில் கோவிட் பாதித்து இறந்தவர்களுக்கு பிரேத பரிசோதனை செய்யப்படுவது வழக்கமாக இருந்த நிலையில், கடந்த ஏப்ரல் 1,2020 அன்று அந்நாடு திடீரென கொரோனா பாதித்து இறந்தவர்களுக்கு பிரேத பரிசோதனை செய்ய வேண்டாம் என மருத்துவர்களுக்கு அறிவிப்பு வெளியிட்டது.

கூடுதல் விவரங்களுக்கு… ncbi.nlm.nih.gov Link

அடுத்தப்படியாக, கொரோனா வைரஸ் தொற்றுக்கு, ஆஸ்பிரின் மட்டுமே, இத்தாலி பரிந்துரை செய்வதாகக் கூறப்படும் தகவலில் நம்பகத்தன்மை இல்லை. ஏனெனில், அவர்கள் எந்த பிரத்யேக மருந்தும் இதுவரை கோவிட் 19 தொற்று சிகிச்சையில் பயன்படுத்தவில்லை. நோயாளிகளின் உடல் தன்மை, நோய் பாதிப்பிற்கு ஏற்ற மருந்தையே பயன்படுத்தி வருகின்றனர். 

இத்தாலி அரசின் இணையதளத்திலேயே இந்த தகவல் விளக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Italy govt Link

இதுபோலவே, என்னென்ன மருந்துகளை இத்தாலி கோவிட் 19 சிகிச்சையில் பயன்படுத்துகிறது என்பது பற்றி அந்நாட்டு மருந்துகள் ஆணையம் விளக்கம் அளித்திருக்கிறது.

Italian Medicines Agency Link

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவரும் உண்மையின் விவரம்,

1) கொரோனா வைரஸ் என்பது வைரஸ் தொற்றுதான்; பாக்டீரியா மூலம் வருவதல்ல.

2) கொரோனா வைரஸ் சிகிச்சையில் ஆன்ட்டிபயாடீக் பெரிதும் பலன் அளிப்பதில்லை.

3) கொரோனா வைரஸ் பரவலுக்கு 5ஜி சேவை காரணமில்லை.

4) ஹெரபின் ஊசி மருந்தால் ரத்தக்கட்டி, உறைதல் ஏற்படுகிறது என்பது தவறான தகவல்.

5) இத்தாலி நாடு மட்டுமல்ல, உலக நாடுகள் எதற்குமே கொரோனா நோயாளி இறந்தால் பிரேத பரிசோதனை செய்ய WHO தடை விதிக்கவில்லை.

6) இத்தாலி நாடு கொரோனா சிகிச்சைக்கு எந்த பிரத்யகே மருந்தும் பயன்படுத்தவில்லை. ஆஸ்பிரின் மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது என்பதும் வதந்தியே.

எனவே, நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் முற்றிலும் தவறானது என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:5ஜி கதிர்வீச்சு; பாக்டீரியா காரணம்; ஆஸ்பிரின் மருந்து- கோவிட் 19 மற்றும் இத்தாலி பற்றி பரவும் வதந்தி

Fact Check By: Pankaj Iyer 

Result: False