
இந்திய பிரதமர் மோடியை பாகிஸ்தான் பிரதமர் அவமதித்ததாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அலசலான தெளிவற்ற படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில் மையத்தில் மோடி போல ஒருவர் இருக்கிறார். அந்த அறையில் இருந்த அனைவரும் எழுந்து நின்று வரவேற்பு அளிக்கின்றனர். ஆனால், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மட்டும் எழுந்திருக்காமல் அமர்ந்த நிலையில் உள்ளார். இம்ரான் கானை மட்டும் நீல நிறத்தில் வட்டமிட்டு காட்டியுள்ளனர்.
படத்தின் மீது, “மோடிக்கு உலகத் தலைவர்கள் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்யும்போது பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான் மட்டுமே எழாமல் அவமரியாதை செய்தான்” என்று போட்டோஷாப்பில் எழுதியுள்ளனர்.
இந்த பதிவை, முத்து கிருஷ்ணன் என்பவர் 2019 ஆகஸ்ட் 31ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்த நிகழ்வு எப்போது, எங்கு நடந்தது என்று குறிப்பிடவில்லை. இம்ரான்கானை பாகிஸ்தான் அதிபர் என்று குறிப்பிட்டுள்ளனர். அவர் பாகிஸ்தான் பிரதமர் மட்டுமே. எனவே, படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம்.

அப்போது, இந்த புகைப்படம் 2018ம் ஆண்டு ஜனவரி டாவோஸில் நடைபெற்ற சர்வதேச வர்த்தக மன்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி முன்னணி சர்வதேச தலைமை செயல் அலுவலர்களுடன் கலந்துரையாடிய போது எடுத்தது என்று தெரிந்தது. அந்த அசல் புகைப்படத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இல்லை. வேறு ஒருவர் எழ முயற்சிப்பது போல இருந்தது. அவர் யார் என்று தெரியவில்லை. இது தொடர்பான செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
இது தொடர்பாக மத்திய அரசின் தகவல் ஒலிபரப்புத் துறையின் பி.ஐ.பி வெளியிட்ட புகைப்படத்தைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

2018 ஜனவரியில் மோடியை புகழ்ந்து ஒருவர் வெளியிட்ட ட்வீட்:
இந்த நிகழ்ச்சியில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கலந்து கொண்டாரா என்று தேடினோம். உண்மையில் பாகிஸ்தானின் பிரதமராக 2018 ஆகஸ்ட் மாதம் தான் இம்ரான்கான் பதவி ஏற்றது தெரியவந்தது.
பாகிஸ்தான் பிரதமரை திட்டுவதாக நினைததுக்கொண்டு, நம்முடைய பாரத பிரதமருக்கு அவமானம் தரும் வகையில் பதிவு உருவாக்கியுள்ளனர். நமக்கு கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு பொய்யானது, விஷமத்தனமானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:மோடியை அவமதித்த இம்ரான் கான்- விஷம ஃபேஸ்புக் படம்!
Fact Check By: Chendur PandianResult: False
