
‘’பாகிஸ்தான் பிரதமரின் ஆசி பெற்ற வேட்பாளர் மோடி,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

I Support Thirumurugan Gandhi என்ற ஃபேஸ்புக் குழு கடந்த ஏப்ரல் 10ம் தேதி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், பிரதமர் மோடியின் புகைப்படத்தையும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பற்றி நியூஸ் 7 தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியையும் இணைத்து பகிர்ந்துள்ளனர். அதன்கீழே, பாகிஸ்தான் பிரதமரின் ஆசிபெற்ற வேட்பாளர் மோடி என்று எழுதியுள்ளனர்.
உண்மை அறிவோம்:
இந்த ஃபேஸ்புக் பதிவில் உள்ளதுபோல, நியூஸ்7 தொலைக்காட்சி முதலில் ஏதேனும் செய்தி வெளியிட்டுள்ளதா என தேடிப்பார்த்தோம். அதே செய்தியின் ஆதாரம் கிடைத்தது.

இதன்படி, நியூஸ்7 வெளியிட்ட அந்த செய்தியில், ‘’இந்தியாவில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்குமானால், அமைதி பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பு அதிகரிக்கும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், காஷ்மீர் பிரச்னையில் துணிச்சலுடன் செயல்படாது,’’ என்றுதான், இம்ரான் கான் கூறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அச்செய்தியை படிக்க, இங்கே கிளிக் செய்யவும்.
இதுபற்றி மீண்டும் கூகுளில் சென்று, ஆங்கிலத்தில் தேடிப் பார்த்தோம். அப்போது, இம்ரான் கான், சர்வதேச ஊடகங்களுக்கு இவ்வாறு பேட்டி அளித்ததாகக் கூறி, எகனாமிக் டைம்ஸ் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்தன. இந்தசெய்தியும் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகியிருந்தது.

நமக்குக் கிடைத்த செய்தி, வீடியோ ஆதாரங்கள் அனைத்திலும், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், காஷ்மீர் விவகாரத்தை பேசி தீர்க்க வாய்ப்பு ஏற்படும் என்று இம்ரான் கூறியதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. எந்த இடத்திலும், பிரதமர் மோடி வெற்றிபெறுவதற்கு, ஆதரவு தெரிவிப்பதாக, இம்ரான் கான் கூறினார் என்று குறிப்பிடப்படவில்லை.
இது தேர்தல் நேரம் என்பதால், ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை பகிர்ந்து, அதனுடன் தங்களது சொந்த கருத்துகளையும் பரப்புவதை சிலர் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். அதன்படியே, இந்த பதிவிலும், இம்ரான் கானின் ஆசிபெற்ற வேட்பாளர் மோடி என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இது அரசியல் உள்நோக்கத்துடன் பகிரப்பட்ட தவறான கருத்தாகும்.
சொல்லப் போனால், இம்ரான் கான், பாஜக., வெற்றிபெற ஆதரவு தருகிறேன், என்று கூட கூறவில்லை. பாஜக, காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளில் யார் ஆட்சியமைத்தால், காஷ்மீர் பிரச்னையை தீர்க்க முடியும் என்பதன் அடிப்படையில்தான் அவர், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நன்றாக இருக்கும் எனப் பேசியுள்ளார். அவர் சொன்னதன் அர்த்தம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. ‘’பாஜக மற்றும் மோடி வெற்றிபெற நான் ஆதரவு தருகிறேன்,’’ என்று அவர் பேசவே இல்லை. எனவே, இந்த ஃபேஸ்புக் பதிவு தவறானது என உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய நம்பகத்தன்மை இல்லாத செய்தி, புகைப்பட மற்றும் வீடியோ பதிவுகளை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:பாகிஸ்தான் பிரதமரின் ஆசி பெற்ற வேட்பாளர் மோடி: ஃபேஸ்புக் செய்தியின் உண்மை என்ன?
Fact Check By: Parthiban SResult: False
