
இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மனைவி சுதா நாராயணமூர்த்தி தெருவில் உட்கார்ந்து காய்கறி விற்பதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மனைவி சுதா நாராயணமூர்த்தி காய்கறி விற்பனை செய்வது போன்ற படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தன் மன அகங்காரம் நீங்க திருமதி சுதா மூர்த்தி அவர்கள் (இன்ஃபோசிஸ் நிறுவனர்) வருடத்தில் ஒரு நாள் சாலையோர காய்கறி விற்கிறாா்கள். உழைக்கும் எண்ணம் நமக்குள் வந்துவிட்டால் நமக்கு உயா்வே. நம்மில் பலா் இதை இன்னும் உணர வேண்டியுள்ளது.
Mrs. Sudha Murthy wife of the founder of Infosys company sells vegetables in front of Venkateshwar temple for one day every year, to vanish “Ahankar”” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை Raja Gopal என்பவர் 2020 செப்டம்பர் 14ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இது போன்ற பதிவை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இன்ஃபோசிஸ் சுதா நாராயணமூர்த்தி ஒவ்வொரு ஆண்டும் ராகவேந்திரா கோவிலுக்குச் சென்று அன்ன தானத் திட்டத்தில் பங்கேற்பது வழக்கம் என்று முன்பு செய்தி வெளியாகி இருந்தது. இந்த நிலையில், அவர் சாலையோரத்தில் காய்கறி விற்கிறார் என்ற தகவல் ஆச்சரியத்தை அளித்தது.
படத்தைப் பார்க்கும் போது சாலையில் உட்கார்ந்து காய்கறி விற்பது போல இல்லை. அவருக்கு பின்புறம் உள்ள ஓவியத்தைப் பார்க்கும் போது அர்ஜூனனுக்கு கிருஷ்ணன் கீதை உபதேசம் செய்தது போன்ற காட்சி தெரிகிறது. எனவே, கோவிலில் அவர் பணியாற்றிய படத்தை எடுத்து, சாலையில் காய்கறி விற்கிறார் என்று பகிர்ந்திருக்கலாம் என தோன்றியது. எனவே, இந்த புகைப்படம் பற்றிய ஆய்வை மேற்கொண்டோம்.
படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடிய போது, சமீபத்தில் ஐ.ஆர்.ஐ அதிகாரியான சுரபி என்பவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த புகைப்படத்துடன் சாலையில் காய்கறி விற்பனை செய்கிறார் என்று பதிவிட்டது சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருவதாகவும், அதைத் தொடர்ந்து உண்மை நிலவரம் தெரிந்து சுரபி தன்னுடைய ட்வீட் பதிவுக்கு விளக்கம் அளித்துள்ளார் என்ற செய்தியும் கிடைத்தது.

ஐஆர்எஸ் அதிகாரி சுரபி வெளியிட்டிருந்த மறுப்பு பதிவில் 2013ம் ஆண்டு இந்த புகைப்படத்தை பெங்களூரு மிரர் என்ற ஊடகம் வெளியிட்டுள்ளது என்றும் ராகவேந்திரா சுவாமி கோவிலில் அன்னதான திட்டத்தில் பங்கேற்கு சமையல் அறையில் காய்கறிகளை நறுக்குவது, அறையை சுத்தம் செய்வது, சமையல் பாத்திரங்களைக் கழுவுவது போன்ற பணிகளைச் செய்கிறார் என்று பெங்களூரு மிரர் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் பெங்களூரு மிரர் இணைப்பை அவர் வழங்கவில்லை.

அதே நேரத்தில், 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான செய்தி ஒன்றில் காய்கறி வாங்குவது முதல் தரையைச் சுத்தம் செய்வது முதல் அனைத்து பணிகளையும் செய்யும் சுதா மூர்த்தி என்று செய்தி வெளியிட்டிருந்தனர். அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படம் இடம் பெற்றிருந்தது. அதிலும் ராகவேந்திரா ஸ்வாமி கோவிலில் ஆண்டுக்கு மூன்று நாட்கள் வந்து பணி புரிந்து செல்லும் சுதா என்று குறிப்பிட்டிருந்தனர்.

ஐ.ஆர்.எஸ் அதிகாரி குறிப்பிட்டது போன்று பெங்களூரு மிரர் நாளிதழில் வெளியான செய்தி கிடைக்கிறதா என்று தேடினோம். அப்போது, 2013ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி வெளியான சுதா மூர்த்தி பேட்டி நமக்குக் கிடைத்தது. அதில், ஆண்டுக்கு மூன்று நாள் பெங்களூரு ஜெயா நகரில் உள்ள ராகவேந்திரா சுவாமி கோவிலில் தன்னார்வலராக பணியாற்றி வருவதாக குறிப்பிட்டிருந்தனர். ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படம் அதில் இல்லை.
தொடர்ந்து தேடிய போது, “இந்த புகைப்படத்தைப் பற்றி இன்ஃபோசிஸ் ஃபவுண்டேஷனிடம் கேட்டோம். படத்தில் இருப்பது சுதா மூர்த்திதான், ஆனால் அவர் காய்கறி விற்பனை செய்யவில்லை. அவர் ஜெயாநகர் ராகவேந்திரா ஸ்வாமி கோவில் சமையல் அறையில் தன்னார்வலராக உதவி செய்கிறார். இந்த புகைப்படம் சமீபத்தில் எடுத்தது இல்லை” என்று கூறினார்கள் என ட்வீட் பதிவு ஒன்று கிடைத்தது. அது வெரிஃபைடு ட்வீட் கணக்காக இருந்தது. யார் அந்த ட்விட் பதிவர் என்று பார்த்தபோது, ET Now-ன் சீனியர் எடிட்டர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதன் மூலம் கோவிலில் தன்னார்வலராக சேவை செய்யும் சுதா மூர்த்தி புகைப்படத்துடன் தவறான தகவல் சேர்த்து பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவின் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:Fact Check: தெருவில் உட்கார்ந்து காய்கறி விற்கும் இன்ஃபோசிஸ் சுதா நாராயணமூர்த்தி?
Fact Check By: Chendur PandianResult: False
