
நடிகை ஶ்ரீதேவி போதை மருந்து உட்கொண்டதால் உயிரிழந்தார் என்று துபாய் மருத்துவமனை உடற்கூறு ஆய்வு முடிவு கூறுகிறது என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

துபாய் சுகாதாரத் துறை வழங்கிய நடிகை ஶ்ரீதேவியின் உடற்கூறு ஆய்வு முடிவு நகல் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஸ்ரீதேவி கொலை ரிப்போர்ட் அவுட். ரெண்டு வருஷம் கழிச்சு உண்மைகள் வெளியேவருது. பாலிவுட், போதைப்பொருள் மாபியாக்களின் ராஜ்ஜியம் தான் என்பது உறுதியாகிறது. கங்கனா குறிபார்த்து சரியாவே அடித்துள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை Manickam Pillai Sattainathan என்பவர் 2020 செப்டம்பர் 16ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
நடிகை ஶ்ரீதேவி இறந்து இரண்டு ஆண்டுகள் கழிந்த நிலையில் தற்போது போதை மருந்து உட்கொண்டுதான் இறந்தார் என்று அவரது உடற்கூறு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது என்று ஒரு கடிதம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ம் தேதி துபாயில் ஹோட்டல் அறையில் நடிகை ஶ்ரீதேவி உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவருடைய உடலை அப்போது இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான செயல்பாடுகள் நடந்தன.
அப்போது துபாய் அரசின் சுகாதாரத் துறை, துபாய் ஹெல்த் அத்தாரிட்டி வெளியிட்ட ஆவணங்கள் அனைத்தும் உடனுக்குடன் செய்தி ஊடகங்களில் வெளியாகின. அப்படி இருக்கும்போது 2018 பிப்ரவரி 26ம் தேதி வெளியான இந்த உடற்கூறு ஆய்வு முடிவு மட்டும் எப்படி ஊடகங்களில் கண் பார்வையில் மறைந்தது என்ற கேள்வி எழுந்தது.
2018ல் ஶ்ரீதேவி இறந்த பிறகு வெளியான மருத்துவ அறிக்கைகளைத் தேடினோம். போஸ்ட்மார்ட்டம் அறிக்கை வெளியாகி உள்ளதா என்று தேடினோம். அப்போது எக்கனாமிக் டைம்ஸ் இதழில் ஶ்ரீதேவியின் போஸ்ட்மார்ட்டம் அறிக்கை வெளியானது என்று செய்தி வெளியிட்டிருந்தனர். அதில் துபாயில் செயல்படும் கல்ஃப் நியூஸ் என்ற ஊடகத்தின் ட்விட்டர் பக்கத்தில் வெளியான ஶ்ரீதேவியின் போஸ்ட் மார்ட்டம் அறிக்கையின் குறிப்பை பகிர்ந்திருந்தனர்.

அதில் எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு (Accidental Drowning) என்று குறிப்பிட்டிருந்தனர். போதை மருந்து பயன்படுத்தி இறந்ததாக, தகவல் இல்லை. இந்த உடற்கூறு ஆய்வு முடிவு 2018 பிப்ரவரி 26ம் தேதி வெளியிடப்பட்டு இருந்தது. அதாவது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள அதே நாளில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஒரே நாளில் இரண்டு விதமான அறிவிப்பை வெளியிடுவதற்கு வாய்ப்பே இல்லை. ஒரு வேளை ஶ்ரீதேவி எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி இறந்தார் என்ற அறிக்கை முதலில் வெளிவந்த நிலையில், போதை மருந்தை எடுத்ததால் உயிரிழந்தார் என்று திருத்தப்பட்ட அறிக்கையை அதே நாளில் துபாய் சுகாதாரத் துறை வெளியிட்டதா என்று தேடினோம். அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை.

அதே நேரத்தில் 2018 பிப்ரவரி 27ம் தேதி ஶ்ரீதேவியின் உடலை எம்பார்மிங் செய்த துபாய் ஹெல்த் அத்தாரிட்டி வெளியிட்டிருந்த அறிக்கை நமக்குக் கிடைத்தது. அந்த அறிக்கையிலும் எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார் என்றே இருந்தது. எந்த இடத்திலும் போதை மருந்தை எடுத்துக் கொண்டதால் உயிரிழப்பு என்று இல்லை.
நம்முடைய ஆய்வில்,
ஃபேஸ்புக் பதிவில் வெளியிடப்பட்டுள்ள உடற்கூறு ஆய்வு முடிவை துபாய் அரசு வெளியிட்டது என்பதற்கு எந்த சான்றும் கிடைக்கவில்லை.
நடிகை ஶ்ரீதேவி எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார் என்று 2018 பிப்ரவரி 26ம் தேதி துபாய் சுகாதாரத் துறை வெளியிட்ட உடற்கூறு ஆய்வு அறிக்கை கிடைத்துள்ளது.
அதற்கு அடுத்த நாள், அதாவது 2018 பிப்ரவரி 27ம் தேதி ஶ்ரீதேவி உடலை எம்பாமிங் செய்த நிபுணர்களும் ஶ்ரீதேவி எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற துபாய் சுகாதாரத் துறையின் உடற்கூறு ஆய்வு முடிவை உறுதி செய்துள்ளனர்.
நடிகை ஶ்ரீதேவி போதை மருந்து உட்கொண்டதால் உயிரிழந்தார் என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை.
இதன் அடிப்படையில், ‘’நடிகை ஶ்ரீதேவி போதை மருந்து உட்கொண்டதால் உயிரிழந்தார் என்று அவரது உடற்கூறு ஆய்வு முடிவு கூறுகிறது என்று வெளியான ரிப்போர்ட் போலியானது,’’ என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:போதை மருந்து காரணமாக நடிகை ஶ்ரீதேவி கொலை செய்யப்பட்டார் என்று பரவும் தகவல் உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
