மின் கட்டணம் – ஆதார் இணைப்பு அறிவிப்பை மின் வாரியம் திரும்பப் பெற்றதா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

மின் கட்டணம் செலுத்த ஆதார் எண்ணைக் கட்டாயம் இணைக்க வேண்டும் என்ற அறிவிப்பை மின் வாரியம் திரும்பப் பெற்றது என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

நம்முடைய வாசகர் ஒருவர் ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ் அப் சாட்பாட் எண்ணுக்குத் தினமலர் வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டை அனுப்பி இது உண்மையா என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்த நியூஸ் கார்டில், “மின் கட்டணம் செலுத்த ‘ஆதார்’ எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்ற அறிவிப்பை மின் வாரியம் திரும்ப பெற்றது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

இந்த நியூஸ் கார்டை உண்மையில் தினமலர் தான் வெளியிட்டதா என்று அறிய அதன் ஃபேஸ்புக் பக்கத்தை பார்வையிட்டோம். நவம்பர் 25, 2022 அன்று இந்த நியூஸ் கார்டை தினமலர் வெளியிட்டிருந்தது தெரிந்தது. இந்த நியூஸ் கார்டை பலரும் தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மின்சார இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதற்கான கால அவகாசத்தையும் நீட்டித்தது. “ஆதார் இணைப்பு தொடர்பாக பலரும் வதந்தி பரப்பி வருகின்றனர்… அதை நம்ப வேண்டாம்” என்று தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி அளித்து வருகிறார். அப்படி இருக்கும் போது ஆதார் – மின் இணைப்பு எண் இணைப்பைத் தமிழ்நாடு மின்சார வாரியம் எப்படித் திரும்பப் பெற்றிருக்க முடியும் என்ற கேள்வி எழுந்தது. எனவே, இது பற்றி ஆய்வு செய்தோம்.

உண்மையில் தமிழ்நாடு அரசு இப்படி ஏதும் அறிவிப்பு வெளியிட்டதா என்று தேடிப் பார்த்தோம். ஆனால், இணைப்பு கட்டாயம் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறிய பேட்டிகள்தான் நமக்குக் கிடைத்தன. எனவே, தினமலர் வெளியிட்ட செய்தியைத் தேடி எடுத்தோம். அந்த செய்தியில் அரசு அறிவிப்பு போன்று எதையும் வெளியிடவில்லை. “இதையடுத்து, மின் கட்டண மையங்களில் கட்டணம் செலுத்த ஆதார் எண் இணைக்க வேண்டும் என்ற அறிவிப்பை, மின் வாரியம் திரும்பப் பெற்றது. அதே நேரம், இணையதளத்தில் கட்டணம் செலுத்த ஆதார் கட்டாயம் என்ற முறை தொடர்கிறது” என்று குழப்பமான செய்தியை வெளியிட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: dinamalar.com I Archive

ஆதார் இணைப்பை மின்சார வாரியம் திரும்பப் பெற்றது என்று செய்தி வெளியிட்டுவிட்டு, அந்த செய்தியின் கடைசியில், “மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் இணைக்க, மூன்று மாதங்கள் வரை அவகாசம் அளிக்க வேண்டும்’ என்று பொது மக்கள் கருத்து தெரிவித்தனர் என்றும் குறிப்பிட்டு குழப்பத்தை அதிகரிக்கச் செய்தது.

இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியைத் தொடர்புகொள்ள முயற்சி செய்தோம். நம்மால் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. மின் துறை அதிகாரிகளிடம் பேசினோம். அவர்கள் இந்த செய்தி தவறானது. டிசம்பர் 31ம் தேதி வரை சிறப்பு முகாம் நடத்தி ஆதார் எண்ணை இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  இந்த திட்டத்தைத் திரும்பப் பெற்றிருந்தால் டிசம்பர் 31ம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறும் என்று அமைச்சர் ஏன் அறிவிக்க வேண்டும் என்று நம்மிடம் எதிர்க்கேள்வி எழுப்பினர்.

உண்மைப் பதிவைக் காண: maalaimalar.com I Archive

தினமலர் இந்த நியூஸ் கார்டை நவம்பர் 25, 2022 அன்று வெளியிட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி 2022 நவம்பர் 28ம் தேதி வெளியிட்டிருந்த பேட்டியை யூடியூபில் தேடி எடுத்தோம். அதில், “மின்துறையை மேம்படுத்தவே மின் இணைப்புடன் ஆதார் இணைக்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதால் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படாது. நடைமுறையில் இருக்கும் அனைத்து இலவச மின்சார திட்டம், மானியம் தொடரும். வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் மின்சாரம் ரத்து செய்யப்படாது. ஒருவர் 5 இணைப்பு வைத்திருந்தாலும் சரி, 100 இணைப்பு வைத்திருந்தாலும் சரி, தற்போதுள்ள நடைமுறையே தொடரும். பல மின் இணைப்புகளை ஒரே ஆதாரில் இணைத்துக்கொள்ளலாம்” என்று கூறியிருந்தார். 

இதன் மூலம் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டத்தைத் தமிழ்நாடு மின்சார வாரியம் திரும்பப் பெறவில்லை என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

மின் இணைப்பு மற்றும் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டத்தை மின்சார வாரியம் திரும்பப் பெற்றது என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:மின் கட்டணம் – ஆதார் இணைப்பு அறிவிப்பை மின் வாரியம் திரும்பப் பெற்றதா?

Fact Check By: Chendur Pandian 

Result: False