ராகுல் காந்தியுடன் இருப்பது டெல்லி மாணவியா?- ஃபேஸ்புக் பதிவின் உண்மை அறிவோம்!

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

டெல்லியில் நடந்த போராட்டத்தின்போது, மாணவர் ஒருவரை போலீசார் இழுத்துப்போட்டு அடிக்கும்போது அதைத் தடுத்த பெண், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் உள்ளார். அவர்தான் போராட்டத்தைத் தூண்டிவிட்டார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

College Girls 2.png
Facebook LinkArchived Link

மாணவி ஒருவர் மைக் உடன் நிற்கும் படம் மற்றும் ராகுல் காந்தியுடன் பேசும் படத்தை கொலாஜ் செய்துள்ளனர். இதனுடன், டெல்லி மாணவிகள் படங்களையும் பகிர்ந்துள்ளனர்.

நிலைத் தகவலில், “புரிந்ததா? தெரிந்ததா? போராட்டம் யார் தூண்டுதல்” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை Sri Selva என்பவர் 2019 டிசம்பர் 17ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சில நாட்களுக்கு முன்பு கேரள மாநிலம் வயநாட்டில் ராகுல்காந்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, அவருடைய பேச்சை அரசுப் பள்ளி மாணவி ஒருவர் மலையாளத்தில் மொழி பெயர்த்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அந்த மாணவியின் படத்தை டெல்லியில் உள்ள கல்லூரி மாணவி என்று பகிர்ந்ததுடன், கலவரத்தை தூண்டிவிட்டது ராகுல் காந்தி என்ற வகையில் பதிவிட்டிருந்தனர். உண்மையில் இந்த மாணவி கேரளாவைச் சேர்ந்தவரா அல்லது கேரளாவிலிருந்து போராட்டம் நடைபெறும்போது டெல்லி சென்றாரா என்று ஆய்வு செய்தோம்.

College Girls 3.png
Search Link

மாணவி ராகுல் காந்தியுடன் இருக்கும் படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த படத்தை 2019 டிசம்பர் 5ம் தேதி daijiworld.com என்ற இணையதளத்தில் இந்த படம் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிந்தது. அதில், “காங்கிரஸ் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அரசுப் பள்ளி ஒன்றுக்கு ஆய்வுக்கூடம் கட்டப்பட்டிருந்தது. அதன் திறப்பு விழாவில் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசியபோது, அவருடைய பேச்சை யாராவது மொழியாக்கம் செய்ய முடியுமா என்று கேட்டுள்ளனர். அதற்கு சஃபா ஃபெபின் என்ற மாணவி தன்னால் முடியும் என்று கைத் தூக்கியுள்ளார். பிறகு, அந்த மாணவி ராகுல் காந்தியின் பேச்சை அப்படியே அசத்தலாக மொழியாக்கம் செய்தார். அவரை ராகுல் காந்தி பாராட்டினார்” என்று குறிப்பிட்டிருந்தனர்.

daijiworld.comArchived Link 1
tamil.oneindia.comArchived Link 2

அடுத்ததாக பத்திரிகையாளர் பர்க்கா தத் உடன் மாணவிகள் இருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ளனர். இந்த மாணவிகள் டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக் கழக தாக்குதலின்போது போலீசார் பிடியிலிருந்து தங்கள் ஆண் நண்பரைக் காப்பாற்றிய பெண்கள் ஆவர். இந்த பெண்களில் ஒருவர் பார்க்க கேரள மாணவி போல உள்ளார். உண்மையில் அவர் கேரள மாணவி சஃபா ஃபெபின்தானா, பர்கா தத் என்ன சொல்கிறார் என்பதை அறிய அவருடைய ட்விட்டர் பக்கத்தை ஆய்வு செய்தோம்.

அப்போது, ட்விட்டரில் பர்க்கா தத் வெளியிட்டிருந்த பதிவு நமக்குக் கிடைத்தது. அதில், ஜாமியா வைரல் வீடியோவில் இரண்டு இளம் பெண்கள் தங்கள் ஆண் நம்பரை போலீஸ் லத்தியிலிருந்து பாதுகாக்கின்றனர். இதே பெண்கள் கூரை மீது நின்று கையை உயர்த்தி போராடும் வைரல் படத்தையும் கண்டோம். அந்த பெண்கள் லதீதா ஃபர்சானா, ஆய்ஷா ரீனா ஆகியோரையும் அவர்கள் காப்பாற்றிய அந்த இளைஞர் ஷாஹீன் ஆகியோரையும் சந்தித்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இவர் இந்த ட்வீட்டை டிசம்பர் 16ம் தேதி வெளியிட்டிருந்தார்.

இதன் மூலம் ராகுல் காந்தியுடன் இருக்கும் கேரள மாணவி டெல்லியில் நடந்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்பதும், டெல்லியில் போராட்டத்தில் கலந்துகொண்டு வைரல் வீடியோவில் இடம் பெற்ற பெண்களின் பெயர் லதீதா ஃபர்சானா, ஆய்ஷா ரீனா என்பதும் உறுதியாகி உள்ளது.

Archived Link

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில், மற்றொரு கொலாஜ் செய்த படம் பகிரப்பட்டுள்ளது. அதில், பர்க்கா தத் உடன் இருக்கும் படம் டிசம்பர் 12ம் தேதி எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தனர். அந்த போட்டோவை பர்க்கா தத் டிசம்பர் 16ம் தேதிதான் வெளியிட்டுள்ளார். அப்படி இருக்கும்போது, இவர்களுக்கு 12ம் தேதி எடுக்கப்பட்டது என்று எப்படி தெரியவந்தது என்று தெரியவில்லை. மேலும் காயம் பட்ட இளைஞரும் அந்த படத்தில் உள்ளார். இதன் அடிப்படையில் இந்த படம் 12ம் தேதி எடுக்கப்பட்டது என்று பகிரப்படுவது தவறான தகவல் என்பது உறுதியாகிறது. 

College Girls 4.png
Search Link

இரண்டாவதாக, கூரை மீது ஏறி நிற்கும் புகைப்படம் டிசம்பர் 13ம் தேதி உத்தரப்பிரதேசத்தில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளனர். அது உண்மையா என்று ஆய்வு செய்தோம். நம்முடைய தேடலில் இந்த படத்தை பலரும் வெளியிட்டிருந்தனர். ஆனால், அவுட் லுக் இந்தியா இதழில் மட்டுமே ஏழு நாட்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது என்று குறிப்பிட்டிருந்தனர். அதன் அடிப்படையில் அந்த செய்தியை பார்த்தோம். 

College Girls 5.png
outlookindia.comArchived Link

அந்த செய்தி டிசம்பர் 14ம் தேதி வெளியாகி இருந்தது. அதில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஜாமியா மில்லியா இஸ்லாமியாவில் மூன்று பெண்கள் போராட்டம் என்று செய்தி வெளியிட்டிருந்தனர். இதன் மூலம் இந்த போராட்டம் உத்தரப்பிரதேசத்தில் நடக்கவில்லை, டெல்லியில்தான் நடந்துள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுகிறது.

மூன்றாவதாக பெண் ஒருவர் உதட்டுக்கு அருகே விரல் வைத்து ஏதோ சொல்லும் படம் டிசம்பர் 14ம் தேதி மேற்கு வங்கத்தில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தனர். மேற்கு வங்க போலீசில் வெள்ளை மற்றும் காக்கி நிற சீருடை பயன்படுத்தப்படுகிறது. இவர்கள் சீருடை உள்ளிட்டவற்றைப் பார்க்கும்போது இவர்கள் மேற்கு வங்க போலீஸ் போல தெரியவில்லை. படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். 

College Girls 6.png
Search Link
mumbaimirror.indiatimes.comArchived Link

பல பத்திரிகைகளில் இந்த புகைப்படம் வெளியாகி இருந்தது தெரிந்தது. மும்பை மிரர் இந்தியா டைம்ஸ் இதழில் இந்த புகைப்படம் ஜாமியா மில்லியா பல்கலைக் கழகத்தில் எடுக்கப்பட்டது என்றே குறிப்பிட்டிருந்தனர். மேலும் இந்த புகைப்படத்தை பிடிஐ செய்தி நிறுவனம் எடுத்திருப்பதும் தெரிந்தது. அந்த செய்தியில் டெல்லி ஜாமியா மில்லியா மாணவர்கள் 42 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர் என்று இருந்தது.

நம்முடைய ஆய்வில்,

ராகுல் காந்தியுடன் இருக்கும் மாணவி கேரளாவைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளா மாணவியும் டெல்லி ஜாமியா மில்லியா மாணவியும் வேறு வேறு நபர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

போராட்டத்துக்கு முன்பே பத்திரிகையாளர் பர்க்கா தத் டெல்லி ஜாமியா மில்லியா மாணவிகளை சந்தித்தார் என்ற தகவல் தவறானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரே மாணவிகள் உத்தரப்பிரதேசம், கேரளா, மேற்கு வங்கத்தில் நடந்த போராட்டங்களில் பங்கேற்றார்கள் என்ற தகவல் தவறானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், ஒரே மாணவிகள் நாட்டின் பல பகுதிகளில் நடந்த போராட்டங்களில் கலந்து கொண்டார்கள், அவர்களை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் பத்திரிகையாளர் பர்க்கா தத் ஆகியோர் தூண்டிவிட்டார்கள் என்று பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:ராகுல் காந்தியுடன் இருப்பது டெல்லி மாணவியா?- ஃபேஸ்புக் பதிவின் உண்மை அறிவோம்!

Fact Check By: Chendur Pandian 

Result: False