இனி கைலாஷ் யாத்திரை செல்ல சீனாவின் அனுமதி தேவையில்லை?- ஃபேஸ்புக்கில் பரவும் உளறல்

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

இனி கைலாஷ் யாத்திரை செல்ல சீனாவின் அனுமதி தேவையில்லை என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

கைலாஷ் மானசரோவர் புகைப்படத்துடன் கூடிய பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “இனி கைலாஷ் யாத்திரை செல்ல சீன அனுமதி தேவையில்லை… டெல்லியில் இருந்து கைலாஷ் மானஸ்ரோவர் இனி 750 கிலோமீட்டர் மட்டுமே. இந்துக்களின் கனவுத்திட்டத்தை நனவாக்கியது இந்திய இராணுவம். ஹெலிகாப்டரில் பாட்டன் டேங்கிகளையும், பீரங்கிகளையும் கயிறு கட்டி மலை உச்சிக்கு எடுத்து சென்று பாறைகளை உடைத்து பளிங்கு போன்று சாலை அமைத்து விட்டது இந்திய இராணுவம். 

இனி தில்லியில் இருந்து சொந்த காரிலேயே லிபுலேக் (654 KM )வரை சல்லுன்னு sorry சில்லுனு போய்விடலாம்… அங்கிருந்து மானஸ்ரோவர்க்கு திபெத் வாகனத்தில் வெறும் 97 கி.மீ பயணம் செய்தாலே போதும் ..ஈசனை தரிசித்து விடலாம். ஒவ்வொரும் இந்தியரும் இராணுவத்திற்கு நன்றி தெரிவியுங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை, 🔱ஓம் சிவ சிவ ஓம் 🔱 என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Marimuthu என்பவர் 2920 மே 14ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கைலாஷ் மானசரோவர் எங்கிருக்கிறது என்ற அடிப்படை புரிதல் கூட பதிவை வெளியிட்டுள்ளனர். இந்திய எல்லை வரை சென்றுவிட்டால், அங்கிருந்து திபெத் வாகனத்தில் சென்றுவிடலாம் என்று பதிவிட்டவருக்கு திபெத் என்பது சீன அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி என்றுகூட தெரியாதது வியப்பை அளிக்கிறது.

இந்தியாவில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக் கணக்கானவர்கள் கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு சென்று வருகின்றனர். சிக்கிம், நேபாளம் வழியாக, கிட்டத்தட்ட 80 சதவிகித பயண தூரம் சீன எல்லைக்குள் இருக்கும் வகையில் இந்த யாத்திரை உள்ளது. இரண்டு முதல் மூன்று வாரத்துக்கும் மேலாக பயணம் மேற்கொண்டால் மட்டுமே கைலாஷ் மானசரோவரை அடைய முடியும்.

மேலும் இந்த பாதை மிகவும் ஆபத்தானது, மிக உயர்ந்த மலைச் சிகரங்களைக் கடந்து செல்ல வேண்டும். இதனால், வயதானவர்களுக்கு மிகப்பெரிய பிரச்னையாக இந்த பாதை இருந்து வந்தது. தற்போது இந்தியா புதிதாக சீன எல்லை வரை லிப்பு லேக்பாஸ் என்ற கணவாய் வரை 80 கி.மீ தூரத்துக்கு இணைப்புச் சாலை ஒன்றை உருவாக்கியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தின் தர்ச்சுலா என்ற இடத்தில் இருந்து 80 கி.மீ தொலைவில் இந்த எல்லைப் பகுதி அமைந்துள்ளது. இதை சமீபத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார். இதன் மூலம் இனி கைலாச யாத்திரை என்பது 86 சதவிகிதம் இந்திய நிலப் பரப்பிலும், 16 சதவிகிதம் மட்டுமே சீன பரப்பிலும் செல்லும் வகையில் மாறியுள்ளது என்று குறிப்பிட்டிருந்தனர். இதன் அடிப்படையில் இந்த தகவல் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருவது தெரிகிறது.

thehindu.comArchived Link 1
tamil.drivespark.comArchived Link 2

இந்திய அரசு இந்திய எல்லை வரை ராணுவம் எளிதாக சென்று சேர சாலை அமைத்திருப்பது உண்மைதான். ஆனால், அதன் பிறகு சீனாவுக்குள் 5 கி.மீ தூரத்துக்கு மலையேற்றம் செய்து வாகன போக்குவரத்து வசதி உள்ள இடத்தை அடைய வேண்டும். அங்கிருந்து வாகனம் மூலம் கைலாஷ் மானசரோவரை அடையலாம். இதன் மூலம் ஐந்து நாள் பயண நேரம் மிச்சமாகும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

கைலாஷ் மானசரோவர் சீனாவில்தான் உள்ளது என்பதை கூகுள் மேப் மூலம் உறுதி செய்ய முடியும். இந்திய எல்லையில் இருந்து வெகு தொலைவில் அது உள்ளது. மேலும், கடந்த ஆண்டு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசமாக பிரித்தபோது வெளியான சில தகவல் கிடைத்தது. அதில், மானசரோவர் செல்ல சீனாவிடம் இருந்து விசா பெற வேண்டும் என்ற தகவல் நமக்கு கிடைக்கிறது.

உத்தரகாண்ட் சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ள தகவலில், கைலாஷ் – மானசரோவர் சீன ஆக்கிரமிப்பு செய்த திபெத் பகுதியில் அமைந்துள்ளது என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

கைலாஷ் – மானசரோவர் யாத்திரைக்கு தேவையான ஆவணங்கள் பற்றித் தேடியபோது, திபெத் நிலப்பரப்புக்குள் நுழைய கைலாஷ் யாத்ரிகர்கள் மட்டுமின்றி, எந்த ஒரு வெளிநாட்டைச் சார்ந்தவரும் சீனாவின் விசா வாங்குவது கட்டாயம் என்று செய்தி கிடைத்தது. 

இதன் அடிப்படையில்,

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் சீனாவின் எல்லை வரை புதிதாக சாலை அமைக்கப்பட்டு, அதை சமீபத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்த செய்தி கிடைத்துள்ளது.

இதன் மூலம் கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கான பயண நாட்கள் குறையும் என்பது தெரியவந்துள்ளது.

கைலாஷ் – மானசரோவர் சீனாவின் திபெத் பகுதியில் அமைந்துள்ளது.

சீனாவின் எல்லைக்குள் நுழைய விசா கட்டாயம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

கைலாஷ் யாத்திரை பயண தூரத்தை குறைக்கும் வகையில் புதிய சாலை திறந்த இந்தியா என்ற செய்தியுடன் கூடுதலாக இதன் மூலம் இனி கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு சீனாவின் அனுமதி தேவையில்லை என்ற தவறான தகவல் சேர்த்து இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இது உண்மையும் தவறான தகவலும் கலந்த பதிவு என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு உண்மையுடன் தவறான தகவலும் கலந்தது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை பார்த்தால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்புங்கள். அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:இனி கைலாஷ் யாத்திரை செல்ல சீனாவின் அனுமதி தேவையில்லை?- ஃபேஸ்புக்கில் பரவும் உளறல்

Fact Check By: Chendur Pandian 

Result: Partly False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •