குவைத்தைச் சேர்ந்த கோடீஸ்வரர் நாசி அல் கார்கி மரணம் அடைந்துவிட்டதாகவும், அவருடைய கோடிக் கணக்கான ரூபாய் மதிப்புடைய சொத்துக்களைப் பாருங்கள் என்று கூறி ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Kuwait 2.png
Facebook LinkArchived Link

சவப்பெட்டியில் வைக்கப்பட்டுள்ள ஒருவரின் புகைப்படம் மற்றும் சொகுசு விமானம், கப்பல், கார் உள்ளிட்டவற்றின் புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன. நிலைத் தகவலில்,

"ஆடி அடங்கும் வாழ்க்கையடா.. ஆறடி நிலமே சொந்தமடா...

குவைத்தில் பணக்காரர் நாசி அல் கார்கி காலமானார். அவரது புதையல் மற்றும் சொத்துக்கள் அனைத்தையும் பாருங்கள். அவருடன் ஒரு துரும்பையும் எடுத்துச் செல்ல முடியாது. இது நம் அனைவருக்கும் ஒரு கடுமையான நினைவூட்டல்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை, JB Venkatesan என்பவர் 2019 அக்டோபர் 31ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்துள்ளனர்.

உண்மை அறிவோம்:

குவைத்தின் மிகப்பெரிய கோடீஸ்வரர் நாசி அல் கார்கி என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால், சவப்பெட்டியில் உள்ளவர் கழுத்தில் மிகப்பெரிய சிலுவை உள்ளது. கண்காட்சி படங்களை எல்லாம் வைத்து பதிவிட்டது போல உள்ளது. எனவே, உண்மை அறிய இறந்து கிடப்பவரின் படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம்.

Kuwait 3.png
Search Link

நம்முடைய தேடலில் இறந்து கிடப்பவர்கள் குவைத் நாட்டைச் சேர்ந்த நாசி அல் கார்கி இல்லை என்பது தெரிந்தது. இறந்து கிடப்பவர் அமெரிக்காவின் கரீபியன் தீவு பகுதியில் உள்ள டிரினிடாட் மற்றும் டொபாகோ என்ற தீவு நாட்டைச் சேர்ந்தவர் என்பதும் இவரது பெயர் Sheron Sukhdeo என்றும் தெரியவந்தது. ரியல் எஸ்டேட், பயன்படுத்தப்பட்ட கார்களை விற்பனை என்று பல தொழில்களை இவர் செய்து வந்தார் என்றும் மிகப்பெரிய மாஃபியா போதை மருந்து கடத்தல்காரர் என்றும் இவரைப் பற்றி பல செய்திகள் இணையத்தில் நமக்குக் கிடைத்தன. இவர் கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் சுட்டுக்கொல்லப்பட்டார். இவருடைய இறுதிச் சடங்கின்போது இவரது உடலின் மீது ஒரு லட்சம் டாலர் மதிப்புடைய நகைகள் அணிவிக்கப்பட்டு இருந்தது என்று செய்திகள் வெளியாகி இருந்தன.

Kuwait 4.png
dailymail.co.ukArchived Link 1
trinidadexpress.comArchived Link 2

குவைத்தில் நாசி அல் கார்கி என்று கோடீஸ்வரர்கள் யாராவது உள்ளார்களா என்று தேடினோம். ஆனால், அந்த பெயரில் கோடீஸ்வரர்கள் இருப்பது போன்ற செய்திகள் நமக்கு கிடைக்கவில்லை. நாசர் அல் கராஃபி என்ற பெயரில் ஒருவர் இருந்ததும் அவர் 2011ம் ஆண்டு மரணம் அடைந்ததும் தெரியவந்தது.தொடர்ந்து தேடியபோது, இந்த பதிவு சமூக ஊடகங்களில் தொடர்ந்து பகிரப்பட்டு வருவதும், அதன் அடிப்படையில் ஏ.எஃப்.பி நிறுவனம் உண்மை கண்டறியும் ஆய்வு நடத்தி இந்த தகவல் தவறானது என்று உறுதி செய்திருப்பதும் தெரியவந்தது.

Kuwait 5.png

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் குவைத்தின் மிகப்பெரிய பணக்காரர் மரணம் என்று பகிரப்பட்டுள்ள படம் மற்றும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:குவைத் பணக்காரர் நாசி அல் கார்கி மரணம்?

Fact Check By: Chendur Pandian

Result: False