
நாடாளுமன்றத்தில் பேசிய லடாக் பா.ஜ.க எம்.பி, லடாக் எங்கே இருக்கிறது என்று தெரியுமா என்று கனிமொழியிடம் கேட்டதாகவும், அதனால் தலைகுனிந்த கனிமொழி, தலையை நிமிர்த்தவே இல்லை என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

லடாக் பா.ஜ.க எம்.பி ஜாம்யாங் ஸெரிங் நாம்க்யால் படத்துடன் யாரோ வெளியிட்ட பதிவை அப்படியே ஸ்கிரீன் ஷாட் எடுத்து போன்ற படத்தைப் பகிர்ந்துள்ளனர்.
அந்த படத்தில், லடாக் எம்பி ஜம்யாங் தி.மு.க எம்.பி கனிமொழியைப் பார்த்து காஷ்மீர் லடாக் எங்கே இருக்கிறது தெரியுமா என்று கேட்டார். 15 நிமிடம் தலைகுனிந்த கனிமொழி கடைசிவரை வாய்திறக்கவே இல்லை.
டி.ஆர்.பாலுவைப் பார்த்து சிறுபான்மையினர் ஓட்டுக்காக எங்கள் துயரங்களில் தலையிடாதீர்கள். இதையெல்லாம் உங்கள் ஊரில் வைத்துக்கொள்ளுங்கள் என செவிலில் அரையும் வண்ணம் பதிலடி கொடுத்தார்” என்று குறிப்பிட்டிருந்தனர்.
இந்த பதிவை, படித்ததில் பிடித்தது என்ற ஃபேஸ்புக் பக்கத்தில், Velu Raghupathy என்பவர் 2019 ஆகஸ்ட் 7ம் தேதி வெளியிட்டுள்ளார்.
உண்மை அறிவோம்:
மாநில சுயாட்சிக்காகத் தொடர்ந்து குரல் எழுப்பி வரும் கட்சி தி.மு.க. ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தின் ஒப்புதல் இன்றி அம்மாநிலத்தை இரண்டாகப் பிரித்து யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டதற்கும், அரசியலமைப்புச் சட்டம் 370வது பிரிவை நீக்கியதற்கும் கண்டனம் தெரிவித்தது. காஷ்மீர் சட்டமன்றத்தின் ஒப்புதலின்றி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை நாளை மற்ற மாநிலங்களிலும் தொடர வாய்ப்புள்ளதாக எதிர்க்கட்சிகள் அச்சத்தை தெரிவித்திருந்தன.
இருப்பினும், காஷ்மீர் இந்தியாவுடன் தற்போதுதான் இணைக்கப்பட்டதாக தொடர்ந்து சமூக ஊடகங்களில் ஆதரவு குரல்கள் எழுந்தவண்ணம் உள்ளன. அந்த விவகாரங்களுக்குள் நாம் செல்லவில்லை.
தி.மு.க எம்.பி-க்கள் கனிமொழி மற்றும் டி.ஆர்.பாலுவைப் பார்த்து லடாக் தொகுதி உறுப்பினர் சில கருத்துக்களைத் தெரிவித்ததாக சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு, நாடாளுமன்றத்தில் எட்டு வழிச் சாலைக்கு ஆதரவாக பேசிய தயாநிதி மாறன் என்று ஒரு வதந்தி பரவியது. அவர் கூறாத தகவலை எல்லாம் நிலைத்தகவலாக எழுதி பகிர்ந்தனர். அது வெறும் வதந்தி என்று நிரூபிக்கப்பட்டது.
அதேபோல், காஷ்மீர் விவகாரத்தில் உங்கள் கட்சித் தலைவர் காஷ்மீரில் நிலம் வாங்க மாட்டேன் என்று உறுதிமொழி அளிப்பாரா என்று அமித்ஷா கேட்டதாகவும் இதனால் பதில் பேச முடியாமல் டி.ஆர்.பாலு அமர்ந்ததாகவும் தகவல் பரவியது. அதுவும் வெறும் வதந்தி என்று உறுதி செய்யப்பட்டது.
அந்த வகையில், நாடாளுமன்றத்தில் கனிமொழி, டி.ஆர்.பாலுவிடம் லடாக் எம்.பி கேள்வி எழுப்பியது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம்.
லடாக் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் மிகச் சிறப்பாக ஜாம்யாங் ஸெரிங் நாம்க்யால் பேசினார். அவரது பேச்சைப் பிரதமர் மோடி வரவேற்று ட்விட்டரிலேயே வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார். அது தொடர்பான செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
தி.மு.க எம்.பி கனிமொழி, டி.ஆர்.பாலுவிடம் கேள்வி எழுப்பியது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று தேடினோம். ஆங்கிலத்தில் தேடியபோது அது தொடர்பாக எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை. ஆங்கிலத்தில் வெளியான செய்தியைப் பார்த்தோம். அதில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் இடம் பெற்றது போன்ற தகவல் இல்லை. இது தொடர்பான செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
தமிழில் தேடியபோது தினத்தந்தி, தினமலர், நக்கீரன் என்று பலரும் வெளியட்டிருந்த செய்தி கிடைத்தது.
தினமலர் செய்தியைப் படித்துப் பார்த்தோம். ஆகஸ்ட் 7, 2019 “தேதி பிரிவு 370: இரண்டே குடும்பங்களுக்குத் தான் பாதிப்பு… லடாக், எம்.பி., ஜாம்யாங் ஸெரிங் நாம்க்யால் சரவெடி பேச்சு” என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தனர். அதில், ஜாம்யாங்கின் முழு பேச்சையும் வெளியிட்டு இருந்தனர்.
“கடந்த சில தினங்களாக நடந்த விவாதத்தில், லடாக்கின் பெயர் அதிகம் உச்சரிக்கப்படுகிறது. அதில் எனக்கு மகிழ்ச்சி தான். ஆனால், லடாக்கை பற்றிப் பேசுபவர்கள் யாருக்காவது, உண்மையிலேயே லடாக்கை பற்றி தெரியுமா? எங்களை, 71 ஆண்டுகளாக கண்டு கொள்ளாமல் ஒதுக்கி வைத்திருந்தனர். இதே அவையில் தான், ‘லடாக் புல் கூட முளைக்காத பஞ்சப் பிரதேசம்’ என, காங்கிரசார் முன்பு வர்ணித்து உள்ளனர்” என்று தொடங்கி அவர் பேசியதாக குறிப்பிட்டு இருந்தனர்.
கனிமொழி, டி.ஆர்.பாலுவைப் பார்த்து கேட்டதாகவோ, சிறுபான்மையினர் ஓட்டு அரசியல் செய்யாதீர்கள் என்று குறிப்பிட்டதாகவே எதுவும் இல்லை. தினமலர் வெளியிட்ட செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
நக்கீரன் வெளியிட்டிருந்த செய்தியில், “லடாக்னா என்னவென்று தெரியுமா… திமுக, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோபப்பட்ட லடாக் எம்.பி!” என்று செய்தி வெளியிட்டிருந்தனர். அதைப் படித்துப் பார்த்தோம்.
“பதிலடி கொடுக்கும் வகையில் லடாக் பகுதியைச் சேர்ந்த இளம் எம்.பி ஜம்யங்-நாம்கி நேற்று பாராளுமன்றத்தில் பேசினார். காஷ்மீர் மற்றும் லடாக்கை பிரித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பலர் லடாக்கிற்கு இதற்கு முன் வந்திருக்கிறார்களா? லடாக் என்றால் என்ன என்று தெரியுமா ? என்று ஆவேசமாக பேசினார். இவர் பேசும் போது எதிர்க்கட்சிகள் அமைதியாக இவர் பேசுவதை கவனித்து கொண்டிருந்தனர். லடாக் பகுதியை இதுவரை யாரும் கண்டுகொண்டதில்லை, லடாக் பகுதியில் பள்ளிகள் இல்லை, மருத்துவமனைகள் இல்லை மற்றும் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் இருக்கின்றனர். அந்த வலி எங்களுக்குத் தான் தெரியும் என்றார். மத்திய அரசின் இந்த முடிவை ஒவ்வொரு லதாக் மக்களும் கொண்டாடுகின்றனர் என்று கூறினார்.” என்று அதில் இருந்தது.
மத்திய அரசு கொண்டுவந்த சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் அனைவருக்குமான கேள்வியாகவே அது இருந்தது. யாரையும் குறிப்பிட்டு அவர் கேள்வி எழுப்பியதாக அதில் இல்லை. நக்கீரன் வெளியிட்ட செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
நாம் பார்த்த ஆங்கில செய்திகள், தமிழ் செய்திகளில் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டது போன்று எந்த ஒரு தகவலும் இல்லை. இதனால், லடாக் எம்.பி-யின் பேச்சை ஆய்வு செய்தோம்.
லடாக் எம்.பி-யின் பேச்சை ராஜ்யசபா டி.வி தன்னுடைய அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு இருந்தது. இந்த வீடியோவை லோக்சபா டி.வி எடுத்திருந்தது. அதைப் பார்த்தோம். லடாக் எம்.பி-யின் பேச்சு இந்தியிலிருந்தது. 20 நிமிடங்கள் அவருடைய பேச்சு பதிவாகி இருந்தது. அதில் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டபடி, கனிமொழி, டி.ஆர்.பாலுவைப் பார்த்து அல்லது பார்க்காமலேயே அந்த கேள்விகளை எழுப்பினாரா என்று நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ இந்திப் பிரிவிடம் கேட்டோம்.
வீடியோவைப் பார்த்த அவர்கள், யாரையுடைய பெயரையும் குறிப்பிட்டு அவர் பேசவில்லை. அவருடைய பேச்சில், “லடாக்கை பற்றி பேசுபவர்கள் யாருக்காவது, உண்மையிலேயே லடாக்கை பற்றித் தெரியுமா? லடாக் எங்கே இருக்கிறது என்று தெரியுமா? லடாக் என்பது புல் பூண்டு கூட முளைக்காத பகுதி என்று இந்த அவைக்கு சொல்லப்பட்டு வருகிது. அப்படி இருக்கும்போது இவர்களால் லடாக்கின் சூழலை புரிந்துகொள்ள முடியுமா? புத்தகங்களில் படித்ததை வைத்து பேசுகிறார்கள்” என்று பொதுவாக எல்லா உறுப்பினர்களையும்தான் கேள்வி எழுப்பினார். “சிறுபான்மையினர் வாக்குக்காக பேசுவதை உங்கள் ஊரில் வைத்துக்கொள்ளுங்கள்” என்று எல்லாம் பேசவில்லை என்றனர்.
அந்த வீடியோவை நாமும் முழுமையாகப் பார்த்தோம். வீடியோவின் முதல் மற்றும் கடைசிப் பகுதியில்தான் அவை முழுவதையும் காட்டினர். அவ்வப்போது சோனியா காந்தியை காட்டினார்கள். தொடக்கத்தில் அவை முழுவதையும் காட்டும்போது அதில் கனிமொழி இருந்தார். ஆனால், டி.ஆர்.பாலு இருந்தது போல தெரியவில்லை. கடைசியில் காட்டும்போது கனிமொழி நிமிர்ந்து உட்கார்ந்திருந்ததைக் காண முடிந்தது. அந்த நேரத்தில் அவையில், டி.ஆர்.பாலு இல்லை என்பதும் தெரிந்தது.

மக்களவையில் நடந்ததை ஒன்று நேரில் பார்க்க வேண்டும், நேரில் பார்த்தவர்கள் சொல்ல வேண்டும் அல்லது அனைவருக்கும் இருக்கும் ஒரே ஆதாரம் லோக்சபா டி.வி நேரடி ஒளிபரப்பு மற்றும் வீடியோதான். சபையில் இப்படி நடந்தது என்று யாரும் கூறவில்லை. இந்த விவாதத்தின்போது சபையில் நான் இருந்தேன் என்று பதிவிட்டவரும் கூறவில்லை. வீடியோவில் அப்படி ஒரு சம்பவம் நடந்ததாக இல்லை. பிறகு, எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இந்த தகவலை பரப்புகிறார்களோ தெரியவில்லை.
நம்முடைய ஆய்வில்,
லடாக் பா.ஜ.க எம்.பி ஜாம்யாங் பேச்சின் ஆங்கில செய்திகள் கிடைத்துள்ளன.
தினமலர் வெளியிட்ட ஜாம்யாங் பேச்சின் முழு விவரம் நமக்கு கிடைத்துள்ளது.
பொதுவாக தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட காஷ்மீர் விவகாரத்தில் எதிர்த்துப் பேசிய கட்சி உறுப்பினர்களைப் பார்த்து ஜாம்யாங் கோபமாக கேள்வி எழுப்பினார் என்ற நக்கீரன் செய்தி கிடைத்துள்ளது.
ஜாம்யாங் பேச்சு வீடியோ கிடைத்துள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், “லடாக் எங்கே இருக்கிறது என்று தெரியுமா?” என்று தன்னுடைய பேச்சில் ஜாம்யாங் கேட்டது உண்மைதான். ஆனால், அதை அவர் கனிமொழியை பார்த்து கேட்டார் என்பதற்கோ, அதனால் அவர் தலைகுனிந்தார் என்பதற்கோ எந்த ஆதரமும் இல்லை. பொதுவாக எல்லா உறுப்பினரையும் பார்த்துத்தான் கேட்டுள்ளார்.
சிறுபான்மையினர் வாக்கு பற்றி டி.ஆர்.பாலுவிடம் கேட்டதாக கூறுவதில் உண்மை இல்லை என்பது உறுதியானது. இதன் அடிப்படையில், உண்மையும் பொய்யும் கலந்து இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு உண்மையும் பொய்யான தகவலும் சேர்த்து வெளியிடப்பட்டது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:லடாக் எம்.பி கேள்வியால் தலைகுனிந்த கனிமொழி – ஃபேஸ்புக் பதிவு உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
