காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக சவூதி இளவரசர் பேசினாரா?

அரசியல் உலகச் செய்திகள்

‘’காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவாகப் பேசிய சவூதி இளவரசர்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Link I Archived Link

I Live In J&K. என்ற ஃபேஸ்புக் ஐடி, இந்த பதிவை ஜூன் 7, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதில், அரச பரம்பரையை சேர்ந்தவர் அல்லது மதத் தலைவர் போன்ற ஒருவர், விருந்தினர்களின் கேள்விக்கு பதில் அளித்து ஆங்கிலத்தில் பேசுகிறார். அதில், ‘’காஷ்மீர் பிரச்னையில் எனது கருத்து என்னவெனில், பாகிஸ்தான் இதில் சரியான முறையில் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அவர்களுக்கு காஷ்மீரில் உரிமை இருப்பதாக நான் நினைக்கவில்லை. அது இந்துக்களின் நிலம் என நம்புகிறேன்,’’ எனக் கூறியுள்ளார். அவரை சவூதி இளவரசர் என நம்பி பலரும் வைரலாக இந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தியின் கமெண்டிலேயே அது உண்மை இல்லை, பொய் என்பதற்கான ஆதாரத்துடன் பலரும் தகவல் பகிர்ந்துள்ளனர். இருந்தும் குறிப்பிட்ட நபர் அந்த வீடியோ பதிவை நீக்காமல் சவூதி இளவரசர் காஷ்மீர் பற்றி பேசியதாகக் கூறி அப்படியே விட்டு வைத்துள்ளார்.

இதன்படி, மேற்கண்ட வீடியோவில் இருப்பவர் சவூதி இளவரசர் இல்லை, அவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இமாம் தவ்ஹிதி என தெரியவருகிறது. இதன்பேரில், அப்படி யாரேனும் உள்ளனரா என தகவல் தேடினோம். அப்போது உண்மை விவரம் கிடைத்தது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவரான தவ்ஹிதியை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இமாம்களுக்கான கவுன்சில் முஸ்லீம் தலைவராக அங்கீகரிக்கவில்லை. இருந்தபோதிலும், அவராகவே தன்னை இமாமாக அறிவித்துக் கொண்டு உலகம் முழுக்க இஸ்லாம் மதச் சீர்திருத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். ஈரானில் பிறந்த இவர் தற்போது ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்று வசிக்கிறார். ஷியா பிரிவைச் சேர்ந்த இமாம் தவ்ஹித் பல்வேறு விசயங்களிலும் சர்ச்சையான கருத்துகளை தெரிவிப்பது வழக்கமாகும். இதன்படியே, காஷ்மீர் விவகாரம் பற்றியும் கருத்து தெரிவித்திருக்கிறார்.

இதேபோல, இவர்கள் குறிப்பிடும் அந்த வீடியோ யூ டியுப்பில் கடந்த பிப்ரவரி 13, 2019 அன்று Imam Tawhidi in conversation with Rajiv Malhotra on Inter-Faith Dialogues எனும் தலைப்பில் வெளியிடப்பட்டதாகும்.

இதுதவிர, பின் சல்மான் காஷ்மீர் விவகாரம் பற்றி இதுவரை எதுவும் பேசவில்லை. அப்படி அவர் கருத்து வெளியிட்டிருந்தால் அது உலகளவில் விவாதிக்கப்படும் விசயமாக மாறியிருக்கும். மேலும், பின் சல்மான் வேறு, இந்த இமாம் தவ்ஹிதி வேறு. இவர்களை அடையாளம் தெரியாமல் ஒரே நபராக சித்தரித்து தவறான தகவல் பகிர்ந்துள்ளனர் என்று தெளிவாகிறது.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட ஃபேஸ்புக் வீடியோ செய்தி தவறான ஒன்று என உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் செய்தி தவறானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக சவூதி இளவரசர் பேசினாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •