காஷ்மீரில் சொத்து வாங்க மாட்டேன் என்று உங்கள் தலைவர் உறுதி அளிப்பாரா?- அமித்ஷா பேச்சு உண்மையா?

அரசியல் சமூக ஊடகம்

நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின்போது, “காஷ்மீரில் எந்த சொத்துக்களையும் வாங்க மாட்டோம் என்று உங்கள் தலைவர் உறுதி அளிப்பாரா?” என்று அமித்ஷா கேள்வி கேட்டதாகவும் அதற்கு பதில் சொல்ல முடியாமல் டி.ஆர்.பாலு அமர்ந்ததாகவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

TR BALU 2.png

 Facebook Link I Archived Link

அமித்ஷா, டி.ஆர்.பாலு மோதல் என்று இருவர் படத்தையும் இணைத்து பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “டி.ஆர்.பாலு கப்சிப் ஆன கதை” என்று சிறு உரையாடலைப் பகிர்ந்துள்ளனர். அதில் உள்ளது அப்படியே…

“#TR_பாலு :- எந்த சட்டத்தின் படி காஷ்மீர் மாநிலம் யூனியன் பிரதேசமாக மாற்றினீர்கள்?

#அமித்ஷா:- உங்கள் கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்படும் காஷ்மீரில் எந்த சொத்துக்களையும் வாங்க மாட்டோம் என்று உங்கள் தலைவர் உறுதி அளிப்பாரா?

உடனே #TRபாலு கப்சிப் என அமர்ந்தார்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை, மாவு பாக்கெட் 3.0 என்ற ஃபேஸ்புக் பக்கம் 2019 ஆகஸ்ட் 7ம் தேதி வெளியிட்டுள்ளது. பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மாநில சட்டமன்றத்தை முடக்கிவைத்துவிட்டு, நாடாளுமன்றத்தில் காஷ்மீர் மாநிலத்தை பிரிக்கும் சட்டத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றியதை காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட சில கட்சிகள் எதிர்த்தன. ஐக்கிய ஜனதா தளம் தவிர்த்த பா.ஜ.க-கூட்டணிக் கட்சிகள் ஆதரித்தன. அது மட்டுமின்றி பா.ஜ.க கூட்டணியில் இல்லாத தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், பகுஜன் சமாஜ், டி.ஆர்.எஸ் உள்ளிட்ட கட்சிகளும் இந்த சட்டத்திருத்தத்தை ஆதரித்தன.

இந்த நிலையில், மக்களவையில் காஷ்மீர் மறுசீரமைப்பு சட்ட மசோதா ஆகஸ்ட் 6ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக தி.மு.க சார்பில், தி.மு.க மக்களவை உறுப்பினர் குழு தலைவர் டி.ஆர்.பாலு பேசினார். அவர் பேசும்போது குறுக்கிட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “உங்கள் கேள்விக்கு பதில் அளிக்கப்படும். அதே நேரத்தில், காஷ்மீரில் எந்த சொத்துக்களையும் வாங்க மாட்டேன் என்று உங்கள் தலைவர் உறுதி அளிப்பாரா?” என்று கேட்டதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா? அப்படி அமித்ஷா கேள்வி எழுப்பியது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று தேடினோம்.

டி.ஆர்.பாலு பேச்சு பற்றி தமிழ், ஆங்கிலம் என எல்லா மொழி நாளிதழ்கள், இணைய ஊடகங்களிலும் செய்தி வெளியாகி உள்ளது. எந்த ஒரு செய்தியிலும் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டது போன்று உரையாடல் நடந்ததாகவும் டி.ஆர்.பாலு பேச முடியாமல் அமர்ந்ததாகவும் குறிப்பிடவில்லை.

பிபிசி தமிழ்

ஒன் இந்தியா தமிழ்

தி நியூஸ் மினிட்

scroll.in

தி.மு.க தலைவர் காஷ்மீரில் சொத்து வாங்கமாட்டேன் என்று உறுதி அளிக்க முடியுமா என்று அமித்ஷா கேள்வி எழுப்பினாரா, அது பற்றி செய்தி வெளியாகி உள்ளதா என்று கூகுளில் தேடினோம். ஆனால், அது போல் எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை. 

டி.ஆர்.பாலுவின் நாடாளுமன்ற உரையைத் தேடினோம். அப்போது, டி.ஆர்.பாலுவின் சிறந்த பேச்சு, பவர்ஃபுல் பேச்சு என்று தெலுங்கு ஊடகங்கள் கூட அந்த பேச்சை அப்படியே தங்கள் யூடியூப் பக்கங்களில் வெளியிட்டது கிடைத்தது.

Archived Link

அந்த பேச்சை கேட்டோம். “அரசியலமைப்புச் சட்ட திருத்த மசோதாவை என்னுடைய நண்பர் உள்துறை அமைச்சர் கொண்டுவந்துள்ளார். நான் என்ன பேசினாலும் அதற்கு அவர் பதில் அளித்துவிடுவார். அவருக்கு அதிக திறன் உள்ளது. அவர் மலையை மடுவாக்குவார், மடுவை மலையாக்குவார். ஐந்து நீதிபதிகள் அளித்த தீர்ப்பைக் குறிப்பிட விரும்புகிறேன்” என்று கூறி அந்த தீர்ப்பை வாசிக்கிறார்.

அதைத் தொடர்ந்து, “மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதன் அடிப்படையில் சட்டம் கொண்டுவர வேண்டும்” என்று சொல்லும்போது உள்துறை அமைச்சர் அமித்ஷா குறுக்கிட்டார். இந்தியில் பேசிய அந்த பேச்சை நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ இந்தி பிரிவுக்கு அனுப்பி என்ன சொன்னார் என்று கேட்டோம். அவர் பேசியது தெளிவாக இல்லை. ஆனால், ஒரு மாதத்துக்கு முன்பே அளித்துவிட்டோம் என்ற வகையில் குறிப்பிடுகிறார், சொத்து வாங்குதல் பற்றி எதையும் அவர் கூறவில்லை என்றனர்.

அதைத் தொடர்ந்து டி.ஆர்.பாலு பேசுகிறார். அமித்ஷா பதிலைக் கேட்டு அமர்ந்துவிடவில்லை. அவர் பேசும்போது, “பிறகு பேசுங்கள், நான் ஒப்புக்கொள்கிறேன்… என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும்” என்கிறார். தொடர்ந்து டி.ஆர்.பாலு பேசும்போது குறுக்கீடு எழுந்தது. அதற்கு டி.ஆர்.பாலு சபாநாயகரைப் பார்த்து, “என்னுடைய நண்பர் எனக்கு பதில் அளிக்கும் நேரம் இது இல்லையே… அவர்களுக்கு எப்போதும் பேசுவதற்கான வாய்ப்பு உள்ளது. எனக்கு அப்படி இல்லையே… பேசாதே, பேச்சை முடி என்று என்னைத்தான் கூறுகின்றீர்கள். அவர்கள் எனக்கு எதிரிகள் இல்லை. நாங்கள் ஒன்றாக வேலை செய்தவர்கள்தான். அதனால் இந்த உரையாடல்கள் பற்றிக் கவலைப்படாதீர்கள். நாங்கள் அவர்களுடன் சண்டை போடவில்லை, நாங்கள் நல்ல நண்பர்கள். அதே நேரத்தில் அவர்கள் எங்களை எதிரிகளைப் போல நடத்துகிறார்கள்… ஒரு பிரச்னையும் இல்லை” என்று கூறி தன்னுடைய பேச்சைத் தொடர்ந்தார்.

வீடியோவின் 8.45வது நிமிடத்தில் அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் குறுக்கிட்டு பேசுகிறார். அப்போது அவர், “வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில், நாம் அமைச்சர்களாக இருந்த போது, நிறைய மசோதாக்கள் இப்படி நிறைவேற்றப்பட்டன… அப்போது நீங்கள் கொண்டுவந்த மசோதாவும் இதேபோன்ற முறையில் நிறைவேற்றப்பட்டது என்பதை நினைவில்கொள்ளுங்கள்” என்றார்.

TR BALU 3.png

அதைத் தொடர்ந்து டி.ஆர்.பாலு பேசினார். “வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் என்பதை மட்டும் குறித்துக்கொள்ளுங்கள்… அதைப் பற்றி வேறு பேச விரும்பவில்லை” என்று கூறினார்.

மொத்தம் 17 நிமிடங்கள் டி.ஆர்.பாலு பேசுகிறார். தொடக்கத்தில் குறுக்கிட்டதைத் தவிர வேறு எந்த ஒரு இடத்திலும் அமித்ஷா குறுக்கிட்டு எதையும் கூறவில்லை. நடுவில் அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத் குறுக்கிட்டார். அதைத் தொடர்ந்து அ.தி.மு.க உறுப்பினர் ரவிந்திரநாத் குமார் குறுக்கிட முயன்றார். அவருக்கு டி.ஆர்.பாலு பதிலடி கொடுத்தது எல்லா ஊடகங்களிலும் வந்துள்ளது. விகடன் வெளியிட்ட செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

நம்முடைய ஆய்வில், 

டி.ஆர்.பாலு பேச்சு தொடர்பாக தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்களில் வந்த செய்தி கிடைத்துள்ளது.

தி.மு.க தலைவர் காஷ்மீரில் சொத்து வாங்க மாட்டார் என்று உறுதி மொழி அளிக்க முடியுமா என்று அமித்ஷா கேள்வி எழுப்பியதாக எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை.

டி.ஆர்.பாலுவின் பேச்சு முழுவதும் நமக்கு கிடைத்துள்ளது. அதில் அமித்ஷா குறுக்கிட்டு பேசியதால், பதில் சொல்ல முடியாமல் டி.ஆர்.பாலு அமர்ந்தது போன்ற நிகழ்வு நடைபெறவில்லை.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், டி.ஆர்.பாலு கப்சிப் ஆன கதை என்று பகிரப்பட்டு வரும் ஃபேஸ்புக் பதிவு பொய்யானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:காஷ்மீரில் சொத்து வாங்க மாட்டேன் என்று உங்கள் தலைவர் உறுதி அளிப்பாரா?- அமித்ஷா பேச்சு உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •