‘’திருப்பதி வெங்கடாஜலபதி ஒரு கருங்கல் பொம்மை என்று கனிமொழி விமர்சனம்,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

இந்த தகவலை வாசகர் ஒருவர், நமது வாட்ஸ்ஆப் (+91 9049053770) எண்ணிற்கு அனுப்பி, இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டார்.

இதன்பேரில், ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, நிறைய பேர் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம்.

Facebook Claim Link 1Archived Link 1
Facebook Claim Link 2Archived Link 2
Facebook Claim Link 3Archived Link 3

உண்மை அறிவோம்:
திமுக எம்பி., கனிமொழி இதுபோல பேசினாரா என்று தகவல் தேடினோம். முதலில், அவர் திருப்பதி கோயில் உண்டியல் பற்றியும், அதற்கு காவல் கண்காணிப்பு போடப்படுவது பற்றியும் விமர்சித்து பேசியதாக, செய்தி காணக் கிடைத்தது. இதன்பேரில், அவர் மீது கரீம் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகளில் கூறப்படுகிறது.

Hindu Tamil Link

செய்தி ஆதாரத்தை வைத்துப் பார்க்கும்போது, கடந்த 2018ம் ஆண்டு திருச்சியில் திராவிடர் கழகம் சார்பாக, உலக நாத்திக மாநாடு நடைபெற்றதாகவும், அதில், கனிமொழி பங்கேற்று திருப்பதி கோயிலை விமர்சித்து பேசியதாகவும் தெரியவருகிறது.

இதுதொடர்பாக, பல்வேறு ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. இதுபற்றி இந்து மக்கள் கட்சி சார்பாகவும் போலீசாரிடம் புகார் தரப்பட்டுள்ளது.

OneIndia Tamil Link

ஆனால், திருப்பதி ஏழுமலையான் ஒரு கருங்கல் என்று கனிமொழி பேசியதாக, இந்த செய்திகளில் எங்கேயும் குறிப்பிடவில்லை.

இதுபற்றி கனிமொழி தரப்பில் விசாரித்தபோது, ‘’திருப்பதி கோயில் உண்டியலுக்கு தரப்படும் பாதுகாப்பு பற்றியே அவர் விமர்சித்திருந்தார். ஊடகங்களில் இந்த செய்தி வெளியாகியிருக்கிறது. ஆனால், வெங்கடாஜலபதி ஒரு கருங்கல் என்று அவர் பேசவில்லை,’’ என்றனர்.

கனிமொழி, திராவிடர் கழகம் சார்பாக திருச்சியில் 2018ம் ஆண்டு நடத்தப்பட்ட உலக நாத்திகர் மாநாட்டில் பேசியதற்கான வீடியோ ஆதாரத்தையும் அவர்கள் நமக்கு அளித்தனர்.

‘’நாடாளுமன்ற எம்பி., எனும் முறையில் சிறப்பு தரிசனத்தில், திருப்பதி கோயிலுக்குச் சென்றேன். காசு கொடுத்தால், சிறப்பு தரிசனம் தருகிறார்கள். இல்லை எனில், நீண்ட வரிசையில் நிற்க வேண்டியதுதான். ஆனால், கடவுள் முன் அனைவரும் சமம் என்கிறார்கள். கருவறைக்கு அருகில் சென்றபோது, இது மிகவும் சக்திவாய்ந்த சாமி என்றனர். நான் கேட்டேன், ‘அப்புறம் எதற்கு, சாமியின் எதிரிலேயே உள்ள உண்டியலுக்கு துப்பாக்கி ஏந்திய ஆளை பாதுகாப்புக்கு வச்சிருக்காங்க,’ என்று…,’’ இப்படித்தான் கனிமொழி பேசுகிறார். ஏழுமலையான் ஒரு கருங்கல் பொம்மை என்று அவர் பேசவில்லை.

இதேபோல, அவரது பேச்சை குறிப்பிட்டு, ஆங்கில ஊடகங்களிலும் செய்தி வெளியாகியுள்ளது.

TheNewsMinute Link

தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் அவ்வப்போது பகிரப்படும் வதந்திகள் பற்றி ஏற்கனவே கனிமொழி போலீசில் புகார் கூட அளித்துள்ளார். அதுதொடர்பான செய்தியை கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2072638

எனவே, கனிமொழி நேரடியாக ஏழுமலையானை கருங்கல் என்று விமர்சிக்கவில்லை. திருப்பதி கோயிலில் கடவுள் பெயரில் நடக்கும் முறைகேடுகளை விமர்சித்துள்ளார். ‘’திருப்பதி ஏழுமலையான், சக்திவாய்ந்த கடவுள் எனும்போது, ஏன் அவர் கண் முன் உள்ள உண்டியலுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது,’’ என்றுதான் பேசியுள்ளார். ஆனால், அது அவரது கடவுள் நம்பிக்கை தொடர்பான பேச்சாக உள்ளது.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், கனிமொழி பேச்சில் கூடுதலாக ஒரு விசயத்தைச் சேர்த்து, பகிர்ந்துள்ளனர் என்று தெளிவாகிறது.

இதற்கு முன், கடவுளை விமர்சித்து கனிமொழி பேசியதாகக் கூறி பரவிய சில வதந்திகள் பற்றி உண்மை கண்டறிந்து, செய்தி வெளியிட்டிருக்கிறோம். அதன் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.

Fact Crescendo Tamil Link 1

Fact Crescendo Tamil Link 2

முடிவு:

தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் குறிப்பிட்ட தகவலில் முழு விவரம் இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:திருப்பதி வெங்கடாஜலபதி ஒரு கருங்கல் பொம்மை என்று கனிமொழி கூறினாரா?

Fact Check By: Pankaj Iyer

Result: Explainer