
கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கும் போது கருணாநிதி, வைகோ எதிர்க்கவில்லை என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் மறைந்த பா.ஜ.க தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி படத்துடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “நன்றிகெட்ட தமிழா தெரிந்துகொள். இந்திராகாந்தி கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்த போது அதை கருணாநிதியோ, எம்ஜிஆரோ, வைகோவோ எதிர்க்கவில்லை. பாராளுமன்றத்திலேயே கடுமையாக எதிர்த்தவர் வாஜ்பாய். கச்சத்தீவு தாரைவார்ப்பை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தவர் அப்போதைய பாஜக தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை தாய் மதம் திரும்பியவன் என்ற ஃபேஸ்புக் ஐடி நபர் ஆகஸ்ட் 16, 2020 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர். இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
தமிழகத்தின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவு இந்தியாவின் பிரதமராக இந்திரா காந்தி இருந்த போது 1974-75ம் ஆண்டுகளில் இலங்கைக்கு கொடுக்கப்பட்டது. அப்போது தமிழகத்தில் தி.மு.க ஆட்சியில் இருந்தது. கச்சத்தீவு நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படாமல் இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது.
இந்தியா, இலங்கை என இரு நாடுகளும் கச்சத்தீவு தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு அந்த ஒப்பந்தத்தின் நகல் மட்டுமே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான விவாதத்தில் தி.மு.க, பார்வர்டு பிளாக், அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. 1974ல் தமிழக சட்டப் பேரவையில் கச்சத்தீவு தமிழகத்துக்கு சொந்தம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது பற்றி கருணாநிதி பல முறை தெரிவித்துள்ளார். இதற்கான ஆதாரங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தின் ஒப்புதலையே பெறாமல் கச்சத்தீவு தொடர்பாக இந்தியா – இலங்கை ஒப்பந்தம் போடப்பட்டது. அப்படி இருக்கும்போது, தமிழக அரசின் எதிர்ப்பை மட்டும் எப்படி மத்திய அரசு கேட்டுவிடப் போகிறது. இன்று நீட் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு நேர்ந்த கதியை நாம் பார்த்து வருகிறோம்.
கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியதை எதிர்த்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது, அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை போதுமானதாக இல்லை என்று வேண்டுமானால் கூறலாமே தவிர, எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது ஏற்புடையது இல்லை.

கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்ட போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்தது கருணாநிதி. தமிழகத்தின் ஒருங்கிணைந்த பகுதியை இலங்கைக்கு தாரை வார்க்கும்போது அது தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் ஒப்புதல் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. அந்த காலகட்டத்தில் வலிமையான எதிர்க்கட்சியாக உருவெடுத்து வந்தது எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க. இந்த இரண்டு கட்சிகளுமே நாடாளுமன்றத்தில் எதிர்ப்பை பதிவு செய்து வந்துள்ளன.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சார்பில் கச்சத்தீவு தாரை வார்ப்புக்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கச்சத்தீவு விவகாரத்தில் தி.மு.க, அ.தி.மு.க இரண்டுமே தவறு செய்துள்ளன என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருவதையும் மறுத்துவிட முடியாது.

இந்தக் காலகட்டத்தில் தி.மு.க-வின் இரண்டாம் நிலை நிர்வாகியாக இருந்தவர் வைகோ. அவர் 1970ல் கலிகப்பட்டி பஞ்சாயத்துத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1978ம் ஆண்டுதான் முதன் முதலாக மாநிலங்களவை உறுப்பினரானார். அப்படி இருக்கும் போது அவர் எதிர்க்கவில்லை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
நாடாளுமன்றத்தில் இந்த ஒப்பந்த நகல் தாக்கல் செய்யப்பட்ட போது வைகோ எம்.பி-யாக இல்லை. கச்சத் தீவை மீட்க வேண்டும் என்று தொடர்ந்து போராடி வரும் தலைவர்களுள் வைகோவும் ஒருவர். மாநிலங்களை உறுப்பினர் சுய குறிப்பில் வைகோ பற்றி குறிப்பிடப்பட்டுள்ள தகவல்.

தொடர்ந்து தேடியபோது தி.மு.க வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணனின் பிளாக் பக்கத்தில் 1974ம் ஆண்டு வெளியான செய்தித்தாளின் படங்கள் இணைக்கப்பட்டிருந்தன. அதில், கச்சத்தீவு தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டம், பாரதிய ஜனதா கட்சியின் முந்தைய வடிவமான பாரதிய ஜன சங்கம் எதிர்ப்பு, ரிட் மனு தாக்கல் செய்யப்படும் என்று வாஜ்பாய் அறிவித்தது, அப்போதைய முதல்வர் கருணாநிதி எதிர்ப்பு, தி.மு.க தமிழகம் முழுவதும் நடத்திய கூட்டங்கள் எனப் பல தகவல் கிடைத்தன.

கச்சத்தீவு தாரை வார்க்கும் போது பாரதிய ஜனதா கட்சி என்ற ஒரு கட்சி இல்லை. அதற்கு முன்பு பாரதிய ஜன சங்கம் என்றுதான் இருந்தது. பாரதிய ஜன சங்கம் ஜனதா கட்சியுடன் இணைந்து. பின்னர் 1980 ஏப்ரல் 6ம் தேதிதான் பாரதிய ஜனதா கட்சி தொடங்கப்பட்டது. ஜனா கிருஷ்ண மூர்த்தி அப்போது பாரதிய ஜன சங்க மாநில தலைவர். அவர் வழக்கு தொடர்ந்தது உண்மை.
கச்சத் தீவு தமிழகத்துக்கு சொந்தமானது என்பதை உறுதிபடுத்தும் ஆவணங்கள் அனைத்தும் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில் ஜனா கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆவணங்கள் மத்திய அரசு திருப்பி அளிக்கவில்லை. தமிழக அரசாலும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியவில்லை. இதனால், அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாக செய்திகள் கிடைக்கின்றன.

இதன் மூலம் கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்த போது கருணாநிதி, எம்.ஜி.ஆர், வைகோ எதிர்க்கவில்லை என்று கூறப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது. அதே நேரத்தில் கச்சத்தீவை தாரை வார்க்க பாரதிய ஜன சங்கம் எதிர்ப்பு தெரிவித்ததும், பாரதிய ஜன சங்கத்தின் தமிழக தலைவராக இருந்த ஜனா கிருஷ்ணமூர்த்தி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டதும் உண்மை என்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் உண்மையும் தவறான தகவலும் சேர்த்து இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளதாக, தெரியவருகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு உண்மையுடன் தவறான தகவலும் சேர்த்து பகிரப்பட்டுள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:கச்சத் தீவை இலங்கைக்கு வழங்கியபோது கருணாநிதி, வைகோ எதிர்க்கவில்லையா?
Fact Check By: Chendur PandianResult: Partly False

காமராஜர் எதிர்த்தாரா..?