பிரதமர் மோடியை எதிர்த்து களமிறங்கிய பெண் ஐ.பி.எஸ் அதிகாரி என்று டி.வி நடிகை ஒருவர் படத்தை சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

டி.வி நடிகை ஒருவரின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், "மோடியை எதிர்த்து களமிறங்கிய இந்த பெண் IPS அதிகாரிக்கு ஒரு சேர் செய்து ஆதரவளிக்கலாமே நண்பர்களே!" என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை ‎ஈரோட்டு வேந்தன் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Chandru Covai என்பவர் ஜூன் 7ம் தேதி பகிர்ந்துள்ளார். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதை ஷேர் செய்துள்ளனர்.

உண்மை அறிவோம்:

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது போலீஸ் அதிகாரி உடையில் பேட்டி அளித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் டி.வி நடிகை நிலானி. போலீஸ் அதிகாரி வேடத்தில் டி.வி சீரியலில் நடித்த அவர், அந்த உடையுடனே வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் போலீஸ் யூனிஃபார்ம் அணியவே உடல் கூசுகிறது என்று கண்ணீர் விட்டு பேசியிருந்தார். இதனால் பலரும் தமிழக போலீசை எதிர்த்த பெண் போலீஸ் அதிகாரி என்று கொண்டாடினர். அதன் பிறகுதான் அவர் டி.வி சீரியல் நடிகை என்பது தெரியவந்தது.

நடிகை நிலானி மீது பா.ஜ.க-வினர் போலீசில் புகார் செய்தனர். அவர் மீது ஆள் மாறாட்டம், தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வடபழனி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனால், நிலானி தலைமறைவானார். ஒரு மாத தேடலுக்குப் பிறகு அவர் போலீசில் சிக்கினார்.

dinamalar.comArchived Link 1
oneindia.comArchived Link 2

இந்த நிலையில் நிலானி படத்தை வைத்து மோடியை எதிர்த்த போலீஸ் அதிகாரி என்று சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இவர்கள் விளையாட்டாக இந்த பதிவை வெளியிட்டார்களா, அல்லது விவரம் தெரியாமல் செய்தார்களா என்று தெரியவில்லை. எப்படி செய்திருந்தாலும் தகவல் தவறானதுதான்.

சமீபத்தில் அல்லது எப்போதாவது பெண் ஐ.பி.எஸ் அதிகாரி யாராவது பிரதமர் மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்திருக்கிறார்களா என்று தேடிப் பார்த்தோம். அப்படி எந்த ஒரு தகவலும் நமக்கு கிடைக்கவில்லை.

படத்தில் இருப்பது நடிகை நிலானி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மோடியை எதிர்க்கும் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி என்று பகிரப்படும் இந்த பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:மோடியை எதிர்த்து களம் இறங்கிய பெண் போலீஸ் அதிகாரி!- ஃபேஸ்புக் வதந்தி

Fact Check By: Chendur Pandian

Result: False