இந்து கோயில் கும்பாபிஷேகத்தில் சாப்பிட்ட அபுதாபி மன்னர்- ஃபேஸ்புக் கட்டுக்கதை!

உலகச் செய்திகள் | World News சமூக ஊடகம் | Social

‘’இந்து கோயில் கும்பாபிஷேகத்தில் சாப்பிட்ட அபுதாபி மன்னர்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்ட ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim Link Archived Link

Arunachalam R என்பவர் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை டிசம்பர் 11, 2019 அன்று வெளியிட்டுள்ளார். இதில், அரபு பாரம்பரிய உடை அணிந்த சிலர் வாழை இலையில் சாப்பிடும் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’ அபுதாபியில் இந்துக்கோவில் கட்ட இடம் ஒதுக்கி கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டு சிறப்பித்த மன்னரின் #மதசார்பின்மை,’’ என எழுதப்பட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள புகைப்படத்தை, கூகுளில் பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, இது உண்மையான தகவல் இல்லை என்றும், இது அபு தாபியில் நிகழ்ந்த ஓணம் விருந்து ஒன்றில் எடுக்கப்பட்ட புகைப்படம், அபு தாபியில் இந்து கோயில் கிடையாது எனவும் கூறி சிலர் தகவல் பகிர்ந்ததை காண நேரிட்டது. 

Archived Link

இதையடுத்து, நமக்கும் மேற்கண்ட புகைப்படத்தை பார்த்ததில் சில சந்தேகங்கள் எழுந்தன. ஆம், அரபு ஷேக்குகள் சாதாரணமாக அணியக்கூடிய உடையைத்தான் இந்த புகைப்படத்தில் இருப்பவர்கள் அணிந்துள்ளனர். அத்துடன், அரச குடும்பத்தினர் என்றால் அவர்களின் உடை, அரேபிய நாடுகளில் வித்தியாசமானதாக இருக்கும்.

எனவே, உண்மையாக, அபு தாபியில் உள்ள அரச குடும்பர் யாரென்ற விவரம் தேடினோம். இதன்படி, அபு தாபி என்பது ஐக்கிய அரபு அமீரகத்தில் அங்கம் வகிக்கும் மன்னர் ஆட்சிப் பகுதி என தெளிவானது. 

Image Courtesy: https://www.bayut.com/mybayut/royal-families-uae/

இதில், அபு தாபியை ஆட்சி செய்வது Al Nahayan எனும் மன்னர் பரம்பரையாகும். அந்த குடும்பத்தினர் எப்படி இருப்பார்கள் என்பதற்கான புகைப்பட ஆதாரம் கீழே தரப்பட்டுள்ளது.

Image Courtesy: oxgaps.wordpress.com

இதை வைத்துப் பார்க்கையில் மேற்கண்ட அபு தாபி மன்னர் மற்றும் அரச குடும்பம் என்பது வேறு, புகைப்படத்தில் வாழை இலை போட்டு சாப்பிடுபவர்கள் வேறு என்று தெளிவாகிறது.

இதுதவிர அபு தாபி நாட்டில் தமிழர்கள், கேரள மக்கள்தான் அதிகளவில் வசிக்கின்றனர். அவர்கள் தமது பாரம்பரிய பண்டிகைகளை கொண்டாடுவதும், அதில் அபு தாபி மக்கள் பங்கேற்பதும் வழக்கமான நிகழ்வுதான். இதன்படியே, ஆண்டுதோறும் ஓணம் பண்டிகை அபுதாபியில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அதுபற்றி நிறைய செய்திகளையும் காண முடிகிறது.

Khaleejtimes.com LinkGulfNews.com Link 

மேலும், அபு தாபியில் இந்து கோயில் எதுவும் உள்ளதா என விவரம் தேடினோம். அப்போது, கோயில் எதுவும் இல்லை, தற்போதுதான் முதல்முறையாக, இந்தியா பங்களிப்புடன் இந்து கோயில் கட்டும் பணிகள் தொடங்கியுள்ளன, இதற்கு பிரதமர் மோடி நேரில் சென்று அடிக்கல் நாட்டியுள்ளார் என தெரியவந்தது. அபு தாபி மட்டுமல்ல, ஐக்கிய அரபு அமீரக நாடுகளிலேயே இதுதான் முதல் இந்து கோயிலாகும். அதற்கு BAPS Hindu Mandir எனப் பெயரிடப்பட்டுள்ளது. 

TheNational.ae Link Mandir.ae Official Link 

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த விவரம்,

1) அபு தாபியில் நிகழ்ந்த ஓணம் பண்டிகை விருந்தில் அரேபிய உடையில் சிலர் உணவருந்தியுள்ளனர்.
2) அபு தாபி மன்னர் மற்றும் அவரது குடும்பம் வேறு.
3) அபு தாபியில் இந்து கோயில் கும்பாபிஷேகம் எதுவும் இதுவரை நடைபெறவில்லை. தற்போதுதான் இந்து கோயில் கட்டும் பணிகள் இந்தியா பங்களிப்புடன் தொடங்கியுள்ளது. இந்த கோயில் 2020ம் ஆண்டில் கட்டி முடிக்கப்படலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
4) சாதாரண அரேபியர்களுக்கும், அரேபிய நாடுகளில் உள்ள மன்னர் குடும்பத்தினருக்கும் இடையே உடை வித்தியாசம் உள்ளது. அதை வைத்தே ஒருவர் யாரென எளிதாகச் சொல்லிவிட முடியும்.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் செய்தி தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:இந்து கோயில் கும்பாபிஷேகத்தில் சாப்பிட்ட அபுதாபி மன்னர்- ஃபேஸ்புக் கட்டுக்கதை!

Fact Check By: Pankaj Iyer 

Result: False