
ஆந்திராவில் விபத்தில் இறந்த மனைவியின் நினைவாக அவரது மெழுகு சிலையை அமைத்து வீடு கிரகப்பிரவேசம் செய்த கணவன் என்று சமூக ஊடகங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

கர்நாடக மாநிலத்தில் மனைவியின் மெழுகு சிலையை உருவாக்கிய ஶ்ரீனிவாஸ் குப்தா குடும்ப புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஆந்திர மாநிலத்தில் ஓர் அருமையான மனிதர் தன் மனைவியை மெழுகுச் சிலையாக வடித்து தன் இல்ல கிரகப்பிரவேசத்திற்கு அனைவரையும் அழைத்து விழா நடத்திய அன்புக் கணவர். இவர் தன் மனைவியை 10 வருடங்களுக்கு முன் விபத்தில் இறந்துவிட்டார். தன் மனைவியின் தலைமையில்தான் நடக்க வேண்டும் என்று தத்ரூபமாக மெழுகுச் சிலையாக வடித்து விழா நடத்தி உள்ளார். நல்வாழ்த்துக்கள்….” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை, Santhanam Krishnamachari என்பவர் 2020 ஆகஸ்ட் 10ம் தேதி பகிர்ந்துள்ளார். இவரைப் போல பலரும் இந்த தகவலை பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சிலிகான் மெழுகு சிலை தத்ரூபமாக உள்ளதால் பலரும் இந்த தகவலைப் பரப்பி வருகின்றனர். இது உண்மையா என்று ஆய்வு செய்தபோது, இந்த மெழுகு சிலை ஆந்திர மாநிலத்தில் இல்லை கர்நாடகாவில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த பெண்மணி இறந்து 10 ஆண்டுகள் ஆகவில்லை, 2017ம் ஆண்டு உயிரிழந்தார் என்று தெரிந்தது. இதன் மூலம் சிலிகான் மெழுகு சிலை அமைக்கப்பட்டது உண்மை, அமைக்கப்பட்ட இடமும், அந்த பெண்மணி உயிரிழந்த காலம் தொடர்பான தகவல் தவறானது என்று தெரிந்தது.
மேலும் தேடியபோது ஏ.என்.ஐ வெளியிட்ட செய்தி கிடைத்தது. அதில், 2017ம் ஆண்டு அந்த பெண் மணி இறந்ததாகவும், கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் இந்த மெழுகு சிலை அமைக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதன் அடிப்படையில், மெழுகு சிலை, கர்நாடகா, கொப்பல் என கீ வார்த்தைகளை டைப் செய்து தேடினோம். அப்போது கர்நாடக ஊடகங்களில் வெளியான செய்திகள் நமக்குக் கிடைத்தன. அதில், கொப்பலில் இந்த சிலிகான் மெழுகு சிலை அமைக்கப்பட்டுள்ளது என்று கூறியிருந்தனர்.
மனைவியின் சிலையை உருவாக்கிய ஶ்ரீனிவாஸ் குப்தாவின் பேட்டியும் அதில் இருந்தது. கன்னடத்தில் அவர் பேசியதை கன்னடம் தெரிந்த நண்பர்களிடம் கொடுத்து மொழிபெயர்த்துத் தரக் கேட்டோம். அதில், “மெழுகு சிலையாக அமர்ந்திருப்பது என் மனைவி. அவர் ஆசைப்படி இந்த வீடு கட்டப்பட்டுள்ளது. அவரே இந்த வீட்டுக்கான வரைபடத்தை வரைந்தார். திருப்பதிக்கு சென்று வரும்போது விபத்தில் அவர் உயிரிழந்தார்.

அவருடைய நினைவாக இந்த இல்லத்தைக் கட்டினேன். அவர் எங்களுடனே இருக்க வேண்டும் என்பதற்காக மெழுகு சிலை அமைக்க நினைத்தேன். பெங்களூருவில் உள்ள மெழுகு சிற்பக்கலை நிபுணரின் உதவியோடு இந்த மெழுகு – சிலிக்கான் உருவச் சிலையை உருவாக்கியுள்ளேன். அவர்தான் மெழுகு சிலை அமைத்தால் அதை பராமரிப்பது கடினம் என்பதால் சிலிக்கான் மெழுகு சிலை அமைக்க பரிந்துரைத்தார். இதை பார்க்கும் அனைவரும் தத்ரூபமாக உள்ளது என்று சொல்கிறார்கள். என் மனைவி எங்களுடன் இருப்பது போன்ற நிறைவு கிடைக்கிறது” என்றார்.
அதன்பிறகு அவருடைய மகள் பேசினார். அதில், அம்மா இறந்து மூன்று ஆண்டுகள் ஆகிறது என்று கூறினார். இதன் மூலம் உயிரிழந்த மனைவிக்கு கணவன் மெழுகு சிலை அமைத்தது உண்மைதான். ஆனால், இது ஆந்திராவில் நடந்தது இல்லை. மேலும் அந்த பெண்மணி உயிரிழந்து 10 ஆண்டுகள் ஆகவில்லை என்பது உறுதியாகி உள்ளது. உண்மையாக நடந்த விஷயத்துடன் சிறிது தவறான தகவலும் கலந்து பகிரப்படுகிறது என்பது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு உண்மையான செய்தியுடன் சிறிது தவறான தகவல் சேர்த்து வெளியிடப்பட்டது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:ஆந்திராவில் மனைவியின் நினைவாக சிலிக்கான் மெழுகு சிலை வடித்த கணவன்?– ஃபேஸ்புக் குழப்பம்
Fact Check By: Chendur PandianResult: Partly False
