
ஆயுத பூஜை கொண்டாடுபவர்கள் யாரும் இனி தி.மு.க-வுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Link | Archived Link |
மு.க.ஸ்டாலின் படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “ஆயுதபூஜை கொண்டாடுபவர்கள் யாரும் இனி திமுகவிற்கு வாக்கு அளிக்க வேண்டாம். இது பெரியார் மண் அதனால்தான் ஆயுதபூஜை வாழ்த்துக்கள் சொல்லாமல் விடுமுறை தினம் என்று இந்துக்கள் பண்டிகையைப் புறக்கணிக்கிறோம். – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்” என்று உள்ளது.
இந்த பதிவை, Balu Murugesin என்பவர் 2019 அக்டோபர் 4ம் தேதி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நிலைத் தகவலில், “திமுக-வில் உள்ள இந்துக்கள் மானங்கெட்டவர்கள் என்பதற்கு இதைவிட என்ன சான்றிதழ் தேவை” என்று குறிப்பிட்டுள்ளார். இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், இந்து மதம் பற்றியும் இந்துக்களைப் பற்றியும் தவறாக பேசினார் என்று தொடர்ந்து பல பொய்யான தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. குறிப்பாக, இந்துக்கள் ஓட்டு வேண்டாம் என்று மு.க.ஸ்டாலின் கூறியதாகவும் அதனால் இந்துக்கள் தி.மு.க-வுக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும் திரும்பத் திரும்ப ஒரு வதந்தி அவ்வப்போது சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
இந்துக்கள் வாக்களித்துத்தான் வெற்றிபெற வேண்டுமென்றால் அப்படிப்பட்ட வெற்றி தேவையில்லை என்று மு.க.ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியதாக வதந்தி பரவியது. அது பொய்யானது என்று மு.க.ஸ்டாலின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனாலும், போலீசில் புகார் அளிக்கும் அளவுக்கு அது மிகவும் வேகமாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.
அதேபோல், கோவிலுக்கு செல்லும் யாரும் தி.மு.க-வுக்கு வாக்களிக்கத் தேவையில்லை. அப்படி கோவிலுக்கு செல்வோர் வாக்களித்துத்தான் வெற்றி பெற வேண்டும் என்றால் அப்படிப்பட்ட வெற்றி தேவையில்லை என்று மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்ததாக ஒரு வதந்தி பரவியது. அதுவும் பொய் என உறுதி செய்யப்பட்டது.
இந்துக்கள் பெரியார் சிலை மீது கை வைத்தால் இந்து கோயில்களைத் தகர்ப்போம் என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக ஒரு வதந்தி பரவியது. அதுவும் பொய்யானது என்று உறுதி செய்யப்பட்டது.
இந்துக்களின் வாக்கு வேண்டாம்: மு.க.ஸ்டாலின் பற்றி பரவும் போலி ட்வீட் |
இந்துக்களின் ஓட்டு பெறும் அளவுக்கு தி.மு.க தரம் தாழ்ந்துவிடவில்லை… |
இந்து கோயிலை இடிப்போம் என்றாரா ஸ்டாலின்? மீண்டும் பரவும் வதந்தி… |
இந்த நிலையில், ஆயுத பூஜையைக் கொண்டாடுபவர்கள் வாக்களிக்க வேண்டாம் என்று கூறியதாக புதுப்புரளி கிளம்பியுள்ளது. அந்த நியூஸ் கார்டை ஆய்வு செய்தபோது, இது புது புரளி இல்லை… ஓராண்டாக சமூக ஊடகங்களில் பரவி வருவதுதான் என்று தெரிந்தது. அந்த நியூஸ் கார்டில் 2018 அக்டோபர் 16 என்று தேதி குறிப்பிட்டு இருந்தனர்.
இந்த நியூஸ் கார்டு புதிய தலைமுறை வெளியிடும் நியூஸ் கார்டு போல இல்லை. பின்னணி டிசைனில் வெட்டி ஒட்டியது நன்றாகத் தெரிகிறது. தமிழ் ஃபாண்டிலும் வித்தியாசம் இருந்தது. மேலும் செய்தித் தொலைக்காட்சிகள் வெளியிடும் நியூஸ் கார்டில், பிரேக்கிங் நியூஸ், பிக் பிரேக்கிங் என்று ஏதாவது ஒரு தலைப்பு வைத்திருப்பார்கள். ஆனால், இந்த நியூஸ் கார்டில் அப்படி எதுவும் இல்லை. எனவே, இது போலியாக இருக்கலாம் என்று தெரிந்தது.
இருப்பினும் அதை உறுதி செய்ய, புதியதலைமுறை இணையதளத்தில், ஃபேஸ்புக் பக்கத்தில் இந்துக்களின் வாக்கு, ஆயுதபூஜை தொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியது தொடர்பாக செய்தி, புகைப்படம் கிடைக்கிறதா என்று தேடினோம். நமக்கு அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.
உண்மையில் மு.க.ஸ்டாலின் பேசினாரா, அது தொடர்பாக வேறு ஏதாவது ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளதா என்று கூகுளில் தேடினோம். அங்கும் நமக்கு எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.
PT Search Link | Google Search Link |
ஒரு ஆண்டுக்கு முந்தைய நியூஸ் கார்டை புதிய தலைமுறை ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடக பக்கங்களில் குறிப்பிட்ட தினத்துக்கு பின்னோக்கிச் சென்று தேடிக் கண்டுபிடிப்பது கடினமான காரியம் என்பதால் இந்த கார்டு நம்பகத்தன்மையை புதியதலைமுறை செய்திகள் டிஜிட்டல் குழுவுக்கு அனுப்பி சரிபார்த்துத் தரக் கேட்டோம். இது பொய்யானது, நாங்கள் வெளியிட்டது இல்லை என்று உறுதி செய்தனர்.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், ஆயுத பூஜை கொண்டாடுபவர்கள் தி.மு.க-வுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக போலியாக புதிய தலைமுறை நியூஸ் கார்டு உருவாக்கப்பட்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:ஆயுதபூஜை கொண்டாடுவோர் ஓட்டு தேவையில்லை: மு.க.ஸ்டாலின் பெயரில் பரவும் வதந்தி
Fact Check By: Chendur PandianResult: False
