"என் மீது வெறுப்புக்கொள்வது உங்கள் விருப்பம். ஆனால் ஜெர்மனியை வெறுக்காதீர்கள்" என்று ஹிட்லர் கூறியதை அப்படியே மாற்றி “இந்தியாவை வெறுக்காதீர்கள்” என்று மோடி பேசியதாக சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Hitler 2.png
Facebook LinkArchived Link 1Archived Link 2

ஹிட்லர் மற்றும் பிரதமர் மோடி பேசிய வீடியோ காட்சிகள் ஒன்று சேர்க்கப்பட்டு பதிவிடப்பட்டுள்ளது. இருவருடைய பேச்சும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு சப்-டைட்டிலாக போடப்பட்டுள்ளது. ஹிட்லர் தன்னுடைய பேச்சில், "என்னை வெறுப்பவர்கள் யார் என்று எனக்குத் தெரியும். என் மீது வெறுப்புகொள்வது உங்களின் விருப்பம். ஆனால் ஜெர்மனியை வெறுக்காதீர்கள்" என்று கூறுகிறார். தொடர்ந்து மோடி இந்தியில் பேசியது வருகிறது. அதில் மோடி, "உங்களுக்கு என்னை வெறுக்க வேண்டும் என்று தோன்றுகிறதா வெறுங்கள். ஆனால், இந்தியாவை வெறுக்காதீர்கள். என்னுடைய உருவ பொம்மையை எரியுங்கள். ஆனால், ஏழை மக்களின் சொத்துக்களை எரிக்காதீர்கள்" என்று கூறுகிறார்.

நிலைத் தகவலில் "Hitler vs Modi. Best performance goes to..." என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வீடியோ பதிவை Marina Memes என்ற பக்கம் டிசம்பர் 23, 2019 அன்று வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பெரும்பாலான தமிழர்களுக்கு இந்தி, ஜெர்மனி இரண்டுமே தெரியாது என்பதை சாதகமாக வைத்துக்கொண்டு இந்த பதிவு உருவாக்கப்பட்டது போல இருந்தது. உண்மையில் ஹிட்லர் அப்படிப் பேசினாரா என்று ஆய்வு நடத்தினோம். ஜெர்மன் மொழி பெயர்ப்பு இணையதளங்கள் பல இருந்தாலும் அவை எழுத்துக்களை மொழிபெயர்க்கக் கூடியவையாக இருந்தன. பேச்சை மொழி பெயர்க்கும் வகையில் அவை இல்லை. இதனால், வேறு ஆதாரங்கள் கிடைக்கிறதா என்று பார்த்தோம்.

Hitler 3.png

ஹிட்லர் வீடியோவில் British Pathé என்ற லோகோ இருந்தது. அதை அடிப்படையாக வைத்து British Pathé யூடியூப் பக்கத்தில் ஹிட்லர் என்று டைப் செய்து தேடினோம். அப்போது, நம்முடைய ஃபேஸ்புக் பதிவில் உள்ளது போன்று பின்னால் ராணுவ அதிகாரிகள் அமர்ந்திருக்கும் வகையில் ஹிட்லரின் மேடை பேச்சு வீடியோ கிடைத்தது. 1936ம் ஆண்டு பேசியதாக அதில் குறிப்பிட்டிருந்தனர். அதை பார்த்தபோது, இதில் இருந்துதான் அந்த வீடியோவை கட் செய்து எடுத்திருப்பது தெரிந்தது. அதில் எந்த ஒரு சப் டைட்டிலும் இல்லை. அந்த வீடியோவில் ஹிட்லர் பின்னால் Winterhilfswerk 1936-37 என்று எழுதப்பட்டு இருந்தது. ஆனால், எந்த தேதியில் இதை ஹிட்லர் பேசினார் என்பது அதில் குறிப்பிடவில்லை. ஆனால், பல உண்மை கண்டறியும் ஆய்வு நடத்திய நிறுவனங்கள் 1937ல் ஹிட்லர் பேசியது என்று குறிப்பிட்டிருந்தது குழப்பத்தை தந்தது.

Archived Link

தொடர்ந்து தேடியபோது ஒரு நுழைவு சீட்டின் படம் கிடைத்தது. அதில், Winterhilfswerk 1937-38ன் தொடக்க விழா என்று குறிப்பிட்டிருந்தனர். இந்த நிகழ்வு 1937ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி நடப்பதாக குறிப்பிட்டிருந்தனர். 1937-38ம் ஆண்டுக்கான தொடக்க விழா 1937ம் ஆண்டு நடைபெறுகிறது என்றால், 1936-37ம் ஆண்டுக்கான தொடக்க விழா 1936 அக்டோபரில் நடந்திருக்க வேண்டும். நமக்கு கிடைத்த வீடியோவும் 1936 என்றே குறிப்பிடுகிறது. அதனால், 1936 அக்டோபரில் ஹிட்லர் கலந்துகொண்ட நிகழ்ச்சிகள் பற்றி ஆய்வு செய்தோம்.

Winterhilfswerk 1936-37 என்று டைப் செய்து தேடியபோது கெட்டி இமேஜ் வெளியிட்ட ஹிட்லர் படம் ஒன்று கிடைத்தது. அதுவும், நமக்கு கிடைத்த வீடியோவில் இருந்த காட்சியும் ஒத்துப்போயின. அதில் 1936 அக்டோபர் 6ம் தேதி அந்த கூட்டம் நடந்தது என்று குறிப்பிட்டிருந்தனர்.

அந்த கூட்டத்தில் ஹிட்லர் என்ன பேசினார் என்று ஆய்வு செய்தோம். ஹிட்லர் பேசியதன் அசல் ஜெர்மன் வடிவம் மற்றும் அதன் மொழியாக்கத்தையும் கண்டறிய நம்முடைய மராத்தி ஃபேக்ட் கிரஸண்டோ முயற்சித்தது. அதன் விளைவாக, ஜெர்மன் மொழிபெயர்ப்பாளர்கள் உதவுயுடன் 23 விநாடி பேச்சு மொழி பெயர்க்கப்பட்டது.

ஹிட்லர் ஜெர்மனியில் பேசியது, "Es ist wirklich etwas Wunderbares, die Volksgemeinschaft so aufzufassen, nicht in einer Vereinsrede von einem Volk von Brüdern zu sprechen, sondern hineinzugehen in das Volk, alle feine Vorurteile allmählich zu überwinden und dann zu helfen und immer wieder zu helfen.”

இதை தமிழில் மொழி பெயர்த்தபோது, "தேசிய சமூகத்தை இந்த வழியில் புரிந்துகொள்வது உண்மையில் ஒரு அற்புதமான விஷயம். ஒரு கூட்டத்தில் உரைநிகழ்த்தும்போது சகோதரர்களை மக்களைப் பற்றி பேசும் பேச்சு அல்ல, ஆனால் மக்களிடம் செல்வது, படிப்படியாக அனைத்து தப்பெண்ணங்களையும் முறியடிப்பது, பின்னர் அவர்களுக்கு மீண்டும் மீண்டும் உதவுவது..." என்ற வகையில் சென்றது.

1936ம் ஆண்டு ஹிட்லர் இதை பேசினாரா என்று ஒப்பிட்டுப் பார்க்க ஆய்வு செய்தோம். நியூயார்க் டைம்ஸ் ஆவணகாப்பக பக்கங்களில் ஹிட்லரின் 1936 அக்டோபர் 6ம் தேதியில் பேசிய பேச்சு இருந்தது. அது ஆங்கில மொழி பெயர்ப்பாகவே இருந்தது. ஜெர்மனியிலேயே இது கிடைக்கிறதா என்று ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, ஹிட்லரின் நாசி கட்சி ஆட்சியின்போது ஹிட்லர் பேச்சுக்கள் எல்லாம் ஆவணப்படுத்தப்பட்ட விவரம் கிடைத்தது. அதில் 1936ம் ஆண்டு அக்டோபரில் நடந்த Winterhilfswerk தொடக்க விழா பதிவுகள் உள்ளதா என்று தேடினோம். அப்போது அது கிடைத்தது. ஜெர்மன் மொழிபெயர்ப்பாளர் நமக்கு ஹிட்லரின் பேச்சு என்று கொடுத்த பகுதி அந்த பேச்சுடன் ஒத்துப்போனதை காண முடிந்தது. இதன் மூலம், என்னை வெறுங்கள், ஜெர்மனியை வெறுக்காதீர்கள் என்று ஹிட்லர் கூறியதாக பகிரப்படும் வீடியோ தகவல் தவறானது என்று உறுதியானது.

Archived Link

அடுத்து என் மீது வெறுப்புக்கொள்ளுங்கள், இந்தியாவை வெறுக்காதீர்கள் என்று மோடி பேசியது உண்மையா என்று ஆய்வு நடத்தினோம். அப்போது, சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் நடந்த பேரணியில் மோடி பொது சொத்துக்களை சேதப்படுத்தாதீர்கள், என்னுடைய உருவ பொம்மையை வேண்டுமானால் எரியுங்கள் என்று பேசியிருந்தார். அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று உள்ளதா என்று தேடினோம். அப்போது, பல ஊடகங்களில் மோடி பேசியது பற்றிய செய்தி கிடைத்தது.

அதில், "வெறுக்க வேண்டும் என்று தோன்றுகிறதா என்னை வெறுங்கள். ஆனால், இந்தியாவை வெறுக்காதீர்கள்" என்று மோடி பேசினார் என்று குறிப்பிட்டிருந்தனர். ஆங்கிலம் மாத்ருபூமியில் "என்னை வெறுக்க வேண்டுமா செய்யுங்கள், ஆனால் இந்தியாவை வெறுக்காதீர்கள். என்னுடைய உருவ பொம்மையை எரியுங்கள். ஆனால் ஏழை மனிதனின் ஆட்டோ ரிக்‌ஷாவை எரிக்காதீர்கள்" என்று கூறியதாகக் குறிப்பிட்டிருந்தனர்.

mathrubhumi.comArchived Link

பல முன்னணி ஆங்கில ஊடகங்களும் மோடியின் இந்தி பேச்சை மொழி பெயர்த்து வெளியிட்டிருந்தன. உண்மையில் மோடி அவ்வாறு பேசனாரா, எந்த இடத்தில் அப்படி பேசினார் என்று நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ இந்தி பிரிவின் உதவியை நாடினோம். உண்மையில், மோடி "என்னை எதிர்ப்பவர்கள், என்னை வெறுக்கின்றீர்களா என்னுடைய உருவ பொம்மையை எரியுங்கள், ஆனால் ஏழைகளின் சொத்துக்களை குறிவைத்து தாக்காதீர்கள்" என்ற அர்த்தத்தில்தான் பேசினார் என்றனர். பாரதிய ஜனதா கட்சி தன்னுடைய யூடியூப் பக்கத்தில் வெளியிட்ட மோடி பங்கேற்ற அந்த நிகழ்ச்சியின் வீடியோவையும் நமக்கு அளித்தனர். மேலும் இந்தியா டுடே உள்பட பல ஊடகங்கள் தவறான மொழிபெயர்ப்பை வெளியிட்டதாகவும் கூறினர்.

Youtube LinkArchived Link

பிரதமர் மோடியை ஹிட்லருடன் தொடர்புபடுத்தி பலரும் கருத்து பகிர்ந்து வருகின்றனர். இதனால், யாருக்குத் தெரியப் போகிறது என்று நினைத்து மோடியின் பேசினார் என்று முன்னணி ஊடகங்களில் வெளியான ஒற்றை வரியை, ஹிட்லரின் வீடியோவோடு தொடர்புபடுத்தி வெளியிட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

நம்முடைய ஆய்வில்,

என் மீது வெறுப்புக்கொள்ளுங்கள், ஜெர்மனியை வெறுக்காதீர்கள் என்று ஹிட்லர் பேசியதாக பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட அந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது, என்ன பேசினார், அதன் மொழி பெயர்ப்பு என்ன என்பது கண்டறியப்பட்டுள்ளது.

என் மீது வெறுப்புகொள்ளுங்கள், இந்தியாவை வெறுக்காதீர்கள் என்று மோடி பேசவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவை வெறுக்காதீர்கள் என்று மோடி பேசியதாக ஊடகங்கள் தவறான மொழிபெயர்ப்பை வெளியிட்டுள்ளன என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹிட்லர் பேச்சு என்று சப்-டைட்டில் போட்ட தகவல் தவறானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹிட்லர், மோடி என இருவருமே பேசாத விஷயத்தை வைத்து அவர்கள் அவ்வாறு பேசினார்கள் என்று வீணாக வதந்தி உருவாக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், ஹிட்லர் பேசியதை போலவே மோடி பேசினார் என்று பகிரப்படும் தகவல் முழுக்க முழுக்க தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:ஹிட்லர் பேசியதை காப்பியடித்தாரா மோடி?

Fact Check By: Chendur Pandian

Result: False