பீகாரில் ரூ.264 கோடியில் கட்டிய பாலம் 29 நாளில் விழுந்ததா?

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

பீகாரில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி ஆட்சியில் ரூ.264 கோடியில் கட்டப்பட்ட பாலம் 29 நாளில் இடிந்து விழுந்தது என்று குறிப்பிட்டு ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

சமீபத்தில் பீகாரில் பாலம் இடிந்து விழுந்ததாக செய்திகள் வெளியானது. அந்த புகைப்படத்துடன் மோடி படத்தை இணைத்து பதிவிட்டுள்ளனர். படத்தின் மீது, “பீகாரில் பாஜக கூட்டணி மெகா ஊழல். ரூ.264 கோடியில் கட்டி 29 நாட்களில் இடிந்து விழுந்த பாலம்!” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிலைத்தகவலில் “திறந்த 29 நாளில் இடிந்து விழுந்த 264 கோடி ரூபாயில் கட்டிய பாலம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை Troll Mafia என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 ஜூலை 16ம் தேதி வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பீகாரில் பல நூறு கோடி ரூபாயில் கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்ததாக இந்தியாவின் எல்லா ஊடகங்களிலும் செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட தகவல் அடிப்படையில் எல்லா ஊடகங்களும் செய்தி வெளியிட்டன.

அதன்பிறகு அதில் ஏற்பட்ட மாறுதல்களை முன்னேற்றங்களை ஊடகங்கள் கவனிக்கத் தவறிவிட்டது தெரிகிறது. இதன் விளைவாக பாலம் இடிந்து விழுந்தது தொடர்பான பல பதிவுகள் சமூக ஊடகங்களில் வலம் வருகின்றன.

dinamalar.comArchived Link 1
indianexpress.comArchived Link 2

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் ரூ.264 கோடியில் கட்டப்பட்ட பாலம் என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால் படத்தைப் பார்க்கும்போது சில கோடி செலவில் கட்டப்பட்ட சிறு பாலம் போல தெரிகிறது. இதைக் கட்டவா ரூ.264 கோடி செலவானது என்ற கேள்வி எழுந்தது. மேலும் படத்தைப் பார்க்கும்போது பாலம் இடிந்து விழுந்தது போல இல்லை. பாலம் உறுதியாக உள்ளது. இணைப்பு பகுதி மட்டும் அடித்துச் செல்லப்பட்டது போல உள்ளது. எனவே, இது தொடர்பாக என்ன நடந்தது என்று ஆய்வு செய்தோம்.

பீகார் பாலம் இடிந்து விழுந்தது என்று ஆங்கிலத்தில் டைப் செய்து தேடியபோது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியது மற்றும் அதற்கு அமைச்சர் விளக்கம் எனத் தகவல் கிடைத்தது.

பீகார் மாநில சாலை கட்டுமானத் துறை அமைச்சர் நந்து கிஷோர் யாதவ் பேட்டியை இந்து நாளிதழ் வெளியிட்டிருந்தது. அதில், “ஊழல் பற்றி பேச ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கு தார்மீக ரீதியில் உரிமை இல்லை. சத்தார்காட் பாலம் இடிந்து விழவில்லை. இது வேறு ஒரு சிறு பாலத்தின் தரைப்பகுதி இணைக்கப்படும் இடம் பாதிக்கப்பட்டுள்ளது.  பாலம் உறுதியாகவே உள்ளது. இந்த பாதிப்பையும் தண்ணீர் வடிந்த பிறகு சரி செய்துவிடுவோம்” என்று கூறியதாகக் குறிப்பிடப்பட்டு இருந்தது.

thehindu.comArchived Link

இதுதொடர்பாக வேறு ஏதும் செய்தி கிடைக்கிறதா என்று அவருடைய ட்விட்டர் பக்கத்தை தேடிப் பார்த்தோம். அதில் பாலத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை அமைச்சர் பகிர்ந்திருந்தார். மிக நீளமான பாலமாக அது இருந்தது.

அந்த பதிவில், ‘’எதிர்க்கட்சித் தலைவர்கள் தவறான தகவலை பகிர்ந்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் உண்மை என்ன என்றால், சத்தார்காட் பிரதான பாலத்தில் இருந்து இரண்டு கி.மீ தொலைவில் இந்த சிறு பாலம் அமைந்துள்ளது. இதன் நீளம் 18 மீட்டர்தான். உண்மையில் சத்தார் காட் பாலம் 1.6 கி.மீ நீளம் கொண்டது” எனக் குறிப்பிட்டிருந்தார்.

Archived Link

இந்த தகவல் உண்மைதானா என்று அறிய வேறு ஆதாரம் கிடைக்கிறதா என்று பார்த்தோம். கூகுள் மேப்பில் குறிப்பிட்ட பாலத்தைத் தேடி எடுத்தோம். அது மிக நீளமானதாக இருந்தது. அதில் தற்போது உடைந்ததாக கூறப்பட்ட சிறிய பாலத்தின் படத்தை சிலர் பதிவிட்டிருந்தனர். பார்க்கும்போது மிகச் சிறியதாக தெரிந்தது.

சத்தார்காட் பாலத்தின் பக்கவாட்டு பகுதியில் மூன்று குறுக்கு சட்டத்தால் பாதுகாப்பு அமைக்கப்பட்டிருந்தது. உடைந்து விழுந்த பாலத்தில் இரண்டு குறுக்குச் சட்டம் மட்டுமே உள்ளது. 

Google Map

இதன் மூலம் ரூ.264 கோடி செலவில் கட்டப்பட்டு சமீபத்தில் திறக்கப்பட்ட பாலம் வேறு, இந்த சிறு பாலம் வேறு என்பது தெரிந்தது.

இந்த சிறுபாலமும் உடைந்து விழவில்லை. இணைப்பு பகுதி மட்டுமே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் இந்த சிறு பாலமும் தற்போது கட்டப்பட்டது போலவே உள்ளது. சாலையோடு இணைப்புப் பகுதி சரியாக அமைக்கப்படாதது தெளிவாகத் தெரிகிறது. இந்த புதிய பாலம் தற்போது திறக்கப்பட்டதா என்று தெரியவில்லை.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் பாலத்தின் பெயர் சத்தார்காட் பாலம் என்று குறிப்பிடவில்லை. ஆனால், ரூ.264 கோடியில் கட்டப்பட்ட பாலம் என்று குறிப்பிட்டுள்ளனர். சத்தார்காட் பாலம்தான் சமீபத்தில் ரூ.264 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.

அந்த பாலத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பாதிப்பு ஏற்பட்டது சத்தார்காட் பாலத்தில் இருந்து இரண்டு கி.மீ தொலைவில் அமைந்துள்ள வேறு ஒரு சிறு பாலம் ஆகும். பாலம் இடிந்து விழவில்லை, இணைப்பு பகுதி மட்டுமே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. பாலம் உறுதியாக உள்ளதை காண முடிகிறது. இதன் அடிப்படையில் உண்மையான விஷயத்துடன் தவறான தகவல் சேர்த்துப் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:பீகாரில் ரூ.264 கோடியில் கட்டிய பாலம் 29 நாளில் விழுந்ததா?

Fact Check By: Chendur Pandian 

Result: Partly False