
‘’டென்னிஸ் ராக்கெட் வைத்து டேபிள் டென்னிஸ் விளையாடினார் மு.க.ஸ்டாலின்,’’ என்று கூறி, ஒரு ஃபேஸ்புக் புகைப்பட பதிவை காண நேரிட்டது. இதனைப் பலரும் வைரலாக ஷேர் செய்து வருவதால், இதுபற்றி உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம்.
தகவலின் விவரம்:

கடந்த மே 13ம் தேதி இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. பூபாலன் சிதம்பரம் சிட்டங்காடு என்பவர் இந்த பதிவை பகிர்ந்துள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி, அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட புகைப்படத்தில் இருப்பதுபோல, மு.க.ஸ்டாலின், பெரிய டென்னிஸ் ராக்கெட் வைத்து, டேபிள் டென்னிஸ் எங்கேயும் விளையாடினாரா என்ற சந்தேகத்தில், கூகுளில் சென்று, ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, இதுதொடர்பான சில ஆதாரங்கள் கிடைத்தன.

இதன்படி, பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே, தனது சாணக்யா ஆன்லைன் சேனலின் பெயரில் வெளியிட்டிருந்த ஒரு புகைப்படத்தை ஆய்வு செய்தோம். அந்த புகைப்படத்தில், மு.க.ஸ்டாலின் டென்னிஸ் ராக்கெட் எதையும் வைத்திருக்கவில்லை. வழக்கமாக, டேபிள் டென்னிஸ் விளையாடுவோர் என்ன வைத்திருப்பார்களோ, அதே அளவு சிறிய மட்டை வைத்துத்தான், மு.க.ஸ்டாலின் விளையாடுகிறார். அது புகைப்படத்தை பார்க்கும்போதே தெளிவாக தெரிகிறது.

இதன்பேரில், ரங்கராஜ் பாண்டே ஃபேஸ்புக் பக்கத்தில் தேடிப்பார்த்தோம். அவர், நாள்தோறும் Picture Of the Day எனச் சொல்லி, மு.க.ஸ்டாலினை கிண்டல் செய்வது போன்ற புகைப்படங்களை வெளியிடுவதை, கடந்த மார்ச் மாதத்தில் வழக்கமாகச் செய்துவந்திருக்கிறார். இதன்பேரில், சமூக ஊடகங்களில் திமுக.,வினர் அவரை கடுமையாக விமர்சித்து வந்துள்ளனர். இதையடுத்து, மு.க.ஸ்டாலின் பற்றி வெளியிட்ட புகைப்படங்களில், சிலவற்றை அவர் நீக்கியதாகவும் தெரிகிறது. ஆதார படம் கீழே தரப்பட்டுள்ளது.

எப்படியிருந்தாலும், நமக்குத் தேவையான அசல் புகைப்படம் கிடைத்துவிட்டது. அதில், மு.க.ஸ்டாலின், சாதாரண டேபிள் டென்னிஸ் பேட்டில்தான் விளையாடுகிறார். இதனை வேண்டுமென்றே லைக் வாங்குவதற்காக, ஃபோட்டோஷாப் செய்து சிலர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளதாக, தெரிகிறது.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவு தவறாகச் சித்தரிக்கப்பட்ட ஒன்று, என உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறான ஒன்று, என நிரூபிக்கப்பட்டுள்ளது. இத்தகைய தவறான செய்தி, புகைப்பட மற்றும் வீடியோ பதிவுகளை நமது வாசகர்கள் யாரும் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:டென்னிஸ் ராக்கெட் வைத்து டேபிள் டென்னிஸ் விளையாடிய மு.க.ஸ்டாலின்: வைரல் புகைப்படம்
Fact Check By: Parthiban SResult: False
