
“கிறிஸ்தவர்களைப் போல நேர்மையான மக்களை நான் பார்த்தது இல்லை. இந்து சாமியார்கள் அனைவரும் திருடர்கள்” என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக ஒரு ட்வீட் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ட்வீட்டை யாரோ ஒருவர் ஸ்கிரீன்ஷாட் எடுத்துப் பகிர்ந்ததை ஸ்கிரீன் ஷாட் எடுத்தது போல பதிவு உள்ளது. அதில், மு.க.ஸ்டாலின் ட்வீட் பகுதியில், “ஒரு கிறிஸ்துவ பாதிரியார் தவறு செய்தார் என்பதற்காக அனைத்து கிறிஸ்துவ மக்களையும் தவறாக நினைப்பது சரியில்லை. கிறிஸ்துவர்கள் போல நேர்மையான மக்களை நான் இந்துக்களில் பார்த்தது இல்லை. இந்து சாமியார்கள் அனைவரும் திருடர்கள்” என்று எழுதப்பட்டுள்ளது.
இதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பதிவிட்டவர் பகுதியில் “இதுக்கு மேலயும் இந்த கட்சில இருந்துகிட்டு உப்புதான் போட்டு சாப்பிடறேன்னு இந்துக்கள் யாரும் சொல்லாதீங்க. வாய்ல கெட்டகெட்ட வார்த்தையா வரும்” என்று உள்ளது.
இந்த பதிவை Senthil Ganesh Rajalakshmi என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் ஆசைச்செல்வன் கோம்பத்துரை என்பவர் 2019 டிசம்பர் 23ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க இந்துக்களை அவமதித்துவிட்டார்கள், தவறாகப் பேசிவிட்டார்கள் என்று சமூக ஊடகங்களில் தொடர்ந்து வதந்தி பரவிக்கொண்டே இருக்கிறது. இந்து கோவிலை இடிப்போம் என்று கூறியதாகவும், ஆயுதபூஜை கொண்டாடுவோர் ஓட்டுத் தேவையில்லை என்று கூறியதாகவும், இந்துக்கள் ஓட்டு வாங்கி வெற்றி பெற வேண்டிய அவசியம் இல்லை என்று மு.க.ஸ்டாலின் கூறியதாகவும் தொடர்ந்து இதுபோன்ற பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் கிறஸ்துமஸ் கொண்டாடப்பட்டு வரும் சூழலில், கிறிஸ்துவர்களை புகழ்ந்தும் இந்துக்களை திட்டி மு.க.ஸ்டாலின் கூறியதாக ட்விட்டர் பதிவு ஒன்று டிசம்பர் 23ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது.
இந்த ட்விட்டர் ஸ்கிரீன்ஷாட்டில் இந்த ட்வீட் எப்போது வெளியானது என்று எந்த ஒரு தகவலும் இல்லை. தேதி, நேரம் உள்ளிட்டவை அகற்றப்பட்டிருந்தது. மேலும், ப்ரொஃபைல் படம் தற்போது மு.க.ஸ்டாலின் ப்ரொஃபைல் போலவும் இல்லை. இதனால், பழைய பதிவை தற்போது மீண்டும் பயன்படுத்தியிருக்கலாம் என்று தெரிந்தது.

மேலும் ட்வீட்டில் நிறைய பிழைகள் இருந்தன. ‘மக்களை’ என்பதற்கு பதில் ‘மக்கள்ளை’ என்று இருந்தது. சாமியார்கள் என்று குறிப்பிடுவதற்குப் பதில் சமியார்கள் என்று இருந்தது. இவை எல்லாம் இந்த ட்வீட்டை அவர் வெளியிட்டிருக்க வாய்ப்பில்லை என்பதை உறுதி செய்தன.
இந்த ட்வீட் படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். இதை ஒரு பிளாக்கில் கடந்த ஜனவரி மாதம் ஒருவர் வெளியிட்டிருந்தது தெரிந்தது. தொடர்ந்து தேடியபோது, கடந்த ஆண்டு டிசம்பர் 28ம் தேதி இது தொடர்பாக டெக்கான் கிரானிக்கிள் பத்திரிகையில் செய்தி ஒன்று வெளியாகி இருந்தது தெரிந்தது. அதில், மு.க.ஸ்டாலின் கூறினார் என்று தொடர்ந்து இதுபோன்ற அவதூறான பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது என்று தி.மு.க அமைப்புச் செயலாளரும் எம்.பி-யுமான ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டியிருந்த செய்தி கிடைத்தது. அதில், இந்த ட்வீட் அப்படியே இருந்தது.

Search Link | Blog Link |
deccanchronicle.com | Archived Link |
அந்த செய்தியில் ஸ்டாலின் பெயரில் பரவும் போலி ட்வீட் பற்றி சென்னை மாநகர போலீஸ் ஆணையரிடம் புகார் கூறியதாகவும் ஆனாலும் தொடர்ந்து இந்துக்கள் பற்றி தி.மு.க மற்றும் தி.மு.க தலைவர் தவறாக பேசியதாக போலியான ட்வீட்கள் வந்துகொண்டே இருக்கின்றன என்றும் கூறியிருந்தார்.
இதன் மூலம், இந்த பதிவை மு.க.ஸ்டாலின் வெளியிடவில்லை என்பது தெரிந்தது. மு.க.ஸ்டாலின் அவ்வாறு கூறினார் என்று தங்கள் சொந்த மதத்தை, சாமியார்களையே இவ்வளவு மோசமாக விமர்சிக்க இந்துக்கள் என்று கூறிக்கொள்பவர்களுக்கு எப்படித்தான் மனது வந்தது என்று தெரியவில்லை. நாம் கீழ்த்தரமாக விமர்சித்தாலும் சரி, தி.மு.க மீது வெறுப்பு வந்தால் போதும் என்று இதை உருவாக்கியவர் நினைத்திருப்பார் என்றே தோன்றுகிறது. ‘இந்து சாமியார்கள்’ என்று சொல்ல கூசியதால் ‘சமியார்கள்’ என்று போட்டு மனதைத் தேற்றிக்கொண்டாரோ என்னவோ…
நம்முடைய ஆய்வில்,
இந்துக்கள் பற்றி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தவறாக பேசினார் என்று போலியான ட்வீட், பதிவுகள், நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ட்வீட் பற்றி சென்னை போலீஸ் ஆணையரிடம் தி.மு.க சார்பில் ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், “கிறிஸ்துவர்கள் போல நேர்மையான மக்களை நான் இந்துக்களில் பார்த்தது இல்லை. இந்து சாமியார்கள் அனைவரும் திருடர்கள்” என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக பகிரப்படும் ட்வீட் பதிவு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:கிறிஸ்தவர்கள் போல நேர்மையான மக்களை பார்த்ததில்லை: மு.க.ஸ்டாலின் பெயரில் வதந்தி
Fact Check By: Chendur PandianResult: False
