கேமிரா குழுவுடன் பீச் சுத்தம் செய்வதாக நடித்தாரா பிரதமர் மோடி?

அரசியல் சமூக ஊடகம்

‘’கேமிரா குழுவுடன் பீச்சை சுத்தம் செய்வதாக நடித்த மோடி,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வரும் வைரல் புகைப்படத்தைக் காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

மதவாத எதிர்ப்பு பிரச்சாரம் என்ற ஃபேஸ்புக் ஐடி, மேற்கண்ட பதிவை அக்டோபர் 12, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதில், மோடி கடற்கரையில் குப்பை அள்ளும் புகைப்படங்களையும், அவரை சில புகைப்படக்காரர்கள் போட்டோ பிடிப்பது போன்ற புகைப்படத்தையும் இணைத்து பகிர்ந்துள்ளனர். அதன் மேலே, ‘’இதெல்லாம் ஒரு பொழப்பா சார்,’’ என எழுதியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:
சீன அதிபர் ஜீ ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சந்தித்து, பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி, தான் தங்கியிருந்த ரிசார்ட்டை ஒட்டிய கடற்கரை பகுதியில் பிளாஸ்டிக் குப்பைகளை அப்புறப்படுத்தினார். இதையொட்டி பல்வேறு புகைப்படங்கள், செய்திகள், வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாக வெளியிடப்பட்டன. 

இந்நிலையில், பிரதமர் மோடி திட்டமிட்டே பிரத்யேக புகைப்படக் குழு ஒன்றை நியமித்து, அவர்கள் முன்னிலையில் குப்பை பொறுக்குவதுபோல போஸ் கொடுத்தார் என்றும், அவரது புகைப்படக் குழு இதோ என்றும் கூறி, மேற்கண்ட ஃபேஸ்புக் புகைப்படம் வைரலாக பகிரப்படுகிறது.

இது தவறான தகவலாகும். இதனை கூகுள் இணையதளத்தில் பதிவேற்றி, ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தபோது, இந்த புகைப்படம் பற்றிய உண்மை விவரம் கிடைத்தது.

இதன்படி, Scotland, Fife பகுதியில் உள்ள West Sands beach பற்றிய புகைப்படம் இதுவாகும். அங்கு நடைபெற்ற ஷூட்டிங் ஒன்றின் புகைப்படத்தை எடுத்து, அதில் கடலோரமாக தெரியும் கட்டிடங்களை மறைத்துவிட்டு, மோடியை இவர்கள் படம்பிடிப்பதுபோல தவறாகச் சித்தரித்துள்ளனர் என தெரியவருகிறது. மேலே உள்ள புகைப்படத்தில், கடலில் பொதுமக்கள் குளிப்பதையும், தொலைவில் St Andrews Cathedral மற்றும் St Rules Tower ஆகியவை தெரிவதையும் காணலாம். அத்துடன், இது மிகப் பழைய புகைப்படமாகும்.

இதுதொடர்பாக, ஏற்கனவே பல்வேறு ஊடகங்களும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தி, அதன் முடிவுகளை சமர்ப்பித்துள்ளன. அவற்றின் லிங்க் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

TOI LinkTheQuint LinkIndiaToday Link 

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,

1) ஒரு நாட்டின் பிரதமர் என்றால் அவருக்கென பிரத்யேக புகைப்படக்காரர் அல்லது தனிப்பட்ட உதவியாளர்கள் கட்டாயம் இருப்பார்கள். பிரதமர் வெளியிடங்களுக்குப் பயணம் செல்வதை அவர்கள் புகைப்படம், வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிடுவது வழக்கமான செயல்தான். இது மோடி மட்டுமல்ல, எந்த அரசியல் கட்சித் தலைவராக இருந்தாலும் நடைபெறும் விசயம் என்பதை மறந்துவிட வேண்டாம்.

2) பிரதமர் மோடியின் புகைப்படக் குழு இவர்கள் எனக் கூறி சமூக ஊடகங்களில் பகிரப்படும் புகைப்படம் தவறானதாகும்.

3) ஸ்காட்லாந்தில் உள்ள பீச் ஒன்றின் புகைப்படத்தை பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் இணைத்து, தனிப்பட்ட அரசியல் லாபத்திற்காகச் சிலர் பகிர்ந்து வருகிறார்கள்.  

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ள தகவல் தவறானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:கேமிரா குழுவுடன் பீச் சுத்தம் செய்வதாக நடித்தாரா பிரதமர் மோடி?

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •