
மகாத்மா காந்தியையும், அவரை கொன்ற கோட்சேவையும் பிரதமர் மோடி கும்பிடுகிறார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

காந்தி சிலை மற்றும் சாவர்க்கர் படத்தை பிரதமர் மோடி வணங்கும் புகைப்படங்கள் ஒன்றாக சேர்த்துப் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இப்ப சொல்லுங்க, இவங்களுக்கு நம்ம ஊர்ல என்ன பெயர் சொல்லுவாங்க…? இங்கே மகாத்மா காந்திக்கும் ஒரு கும்பிடு, சுட்டு கொன்ற கோட்சேவுக்கும் ஒரு கும்பிடு..!!!? நாடு வெளங்கிடும்…!!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை facebook DMK என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் R V Sundar Raj என்பவர் 2020 ஆகஸ்ட் 18ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பிரதமர் மோடி மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவை வணங்குவதாக, தொடர்ந்து பல பதிவுகள் வெளியாகி வருகின்றன. அதேபோல் பா.ஜ.க தலைவர்களும் குறிப்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டவர்கள் கோட்சேவை வணங்கினார்கள் என்று வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. அவ்வப்போது இதுபற்றி நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ்ப் பிரிவு ஆய்வு செய்து கட்டுரை வெளியிட்டு வருகிறது.
தற்போது புதிய படம் ஒன்றுடன் கோட்சேவை வணங்கிய மோடி என்று சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. படத்தில் உள்ளவர் கோட்சே இல்லை, சாவர்க்கர் என்பது தெரிந்தாலும் அதை ஆதாரத்துடன் உறுதி செய்ய ஆய்வு மேற்கொண்டோம்.
படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த படத்தை பிரதமர் மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் 2018 டிசம்பர் 30ம் தேதி பதிவேற்றம் செய்திருந்தது தெரிந்தது.
அதில், “அந்தமான் செல்லுலார் சிறையில் அடைக்கப்பட்டவர்களில் ஒருவர் வீர சாவர்க்கர். அவர் அடைக்கப்பட்டு இருந்த சிறை அறைக்குச் சென்றேன். கடுமையான சிறைவாசம் வீர சாவர்க்கரின் தீரத்தைக் குறைக்கவில்லை. அவர் இந்திய விடுதலைக்காக தொடர்ந்து எழுதியும் பேசியும் வந்தார்” என்று குறிப்பிட்டிருந்தார்.
அந்தமான் செல்லுலார் சிறைக்கு வருகை தந்த பிரதமர் மோடி அங்கு சாவர்க்கர் அடைக்கப்பட்டு இருந்த அறையில் தியானம் செய்ததாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்ததைக் காண முடிந்தது.

இதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடி, அந்தமான் செல்லுலார் சிறையில் சாவர்க்கர் படத்துக்கு முன்பு தியானம் செய்த படத்தை வெளியிட்டு கோட்சேவுக்கு வணக்கம் வைத்தார் என்று தவறான தகவல் பரப்பப்பட்டு வருவதாக, உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:காந்தியையும், அவரை சுட்ட கோட்சேவையும் கும்பிடும் மோடி?- புது விதமாக பரவும் வதந்தி
Fact Check By: Chendur PandianResult: False
