செருப்பு அணிந்தபடி குருவாயூர் கோவிலுக்குச் சென்ற மோடி– ஃபேஸ்புக் பதிவால் சர்ச்சை

அரசியல் சமூக ஊடகம்

குருவாயூர் சென்ற பிரதமர் மோடி, செருப்புக் காலுடன் கிருஷ்ணன் கோவிலுக்குள் சென்றார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அல்பனுக்கு வாழ்வு வந்தால் குருவாயூர் கோவிலில் செருப்பு போட்டு நடப்பானாம் அவன் யார் ?

Archived Link

கேரள மாநிலம் குருவாயூர் கோவிலில் பிரதமர் நடந்து செல்லும் படத்தைப் பகிர்ந்துள்ளனர். அதில், பிரதமர் காலில் செருப்பு இருப்பதை சிவப்பு நிறத்தில் வட்டமிட்டு காட்டியுள்ளனர்.

நிலைத் தகவலில், “அல்பனுக்கு வாழ்வு வந்தால் குருவாயூர் கோவிலில் செருப்பு போட்டு நடப்பானாம்… அவன் யார்?” என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த பதிவை, Venkatachalam Sivakumar என்பவர் ஜூன் 9, 2019 அன்று வெளியிட்டுள்ளார். இதைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று இரண்டாவது முறையாகப் பிரதமர் பதவியை ஏற்ற மோடி, கடந்த ஜூன் 8ம் தேதி கேரள மாநிலம் குருவாயூர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். குருவாயூர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக, 7ம் தேதி இரவே கேரள மாநிலம் கொச்சி வந்தடைந்தார் மோடி. 8ம் தேதி கொச்சியில் இருந்து தனி ஹெலிகாப்டரில் குருவாயூர் வந்தார். கோவிலுக்கு அருகில் உள்ள ஶ்ரீவத்சம் விருந்தினர் மாளிகைக்கு அவர் சென்றார். அங்கு கேரள பாரம்பரிய முட்டு எனும் வேட்டி அணிந்து கோவிலுக்கு நடந்தே சென்றார். இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கோவிலுக்குள் மோடி செருப்பு காலுடன் சென்றதாக குறிப்பிட்டுள்ளனர். படத்தைப் பார்க்கும்போது எல்லோருக்கும் அந்த எண்ணம் எழுவது இயல்பே… உண்மையில் அவர் செருப்பு காலுடன் கோவிலுக்குள் சென்றாரா என்று நாம் ஆய்வை மேற்கொண்டோம்.

குருவாயூரில் பிரதமர் மோடியின் சாமி தரிசனம் தொடர்பான படங்களை ஆய்வு செய்தோம். இதில் பல படங்களில் செருப்பு அணிந்தும் பல படங்களில் செருப்பு அணியாமலும் மோடி இருந்தது தெரிந்தது. இதன் மூலம், கோவிலுக்குள் செல்வது வரை செருப்பு அணிந்திருக்கலாம். வெளியே கழற்றிவிட்டு உள்ளே சென்றிருக்கலாம் என்று யூகிக்க முடிந்தது. நியூஸ்18 தமிழில் வெளியான புகைப்படத் தொகுப்பை பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

GURUVAYUR MODI VISIT 2.png

இதை உறுதி செய்ய வீடியோவை ஆய்வு செய்தோம். தூர்தர்ஷன் வெளியிட்ட வீடியோ நமக்குக் கிடைத்தது. அதில், ஶ்ரீவத்சம் விருந்தினர் மாளிகையில் இருந்து மோடி வெளியே வருகிறார். அவர் அருகில் கேரள மாநில ஆளுநர் சதாசிவம் உள்ளிட்டவர்கள் இருக்கின்றனர். மோடி மற்றும் அவரது பாதுகாவலர்கள் தவிர்த்து அனைவரும் வெறுங்காலுடனே நடந்து வருகின்றனர்.

Archived link

அவர்கள் நடந்து வரும் பாதையில் பல கடைகள் இருப்பதை காண முடிந்தது. பின்னர், ஒரு இடத்தில் கோவில் வாசலுக்கு அருகே மோடி நின்று செருப்பு கழற்றுவது போல உள்ளது. இந்தக் காட்சியை சரியாக, 3.46 நிமிடத்தில் காணலாம். அதன்பிறகு கோவில் வாசலில் அவருக்கு பூரணகும்ப மரியாதை அளிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து கோவிலுக்குள் மோடி நுழைகிறார்.

GURUVAYUR MODI VISIT 3.png

உள்ளே என்ன நடந்தது, மோடியின் சாமி தரிசனம் பற்றிய காட்சிகள் தூர்தர்ஷன் வீடியோவில் இல்லை. ஆனால், கோவிலுக்குள் மோடி நுழையும் படங்கள் நமக்குக் கிடைத்தன. அதில், அவர் வெறுங்காலுடனே அடி எடுத்து வைக்கிறார்.

GURUVAYUR MODI VISIT 4.png

இதன் மூலம், விருந்தினர் மாளிகையில் இருந்து கடைத் தெரு வழியாக நடந்து வரும் வரை மோடி செருப்பு அணிந்திருக்கிறார். கோவிலுக்குள் செல்லும்போது செருப்பை கழற்றிவிட்டு, வெறுங்காலுடன் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தது உறுதியாகிறது.

நாம் மேற்கொண்ட ஆய்வில், விருந்தினர் மாளிகையில் இருந்து கோவில் வாசல் வரை மட்டுமே பிரதமர் மோடி செருப்பு அணிந்து சென்றுள்ளார்.

கோவிலுக்குள் நுழைவதற்கு முன்பு செருப்பைக் கழற்றும் வீடியோ கிடைத்துள்ளது.

கோவிலுக்குள் வெறுங்காலுடன் நடந்து சென்றதற்கான புகைப்படங்கள் கிடைத்துள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், குருவாயூர் கோவிலுக்குள் பிரதமர் மோடி செருப்பு அணிந்து சென்றார் என்ற மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என நிரூபிக்கப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:செருப்பு அணிந்தபடி குருவாயூர் கோவிலுக்குச் சென்ற மோடி– ஃபேஸ்புக் பதிவால் சர்ச்சை

Fact Check By: Praveen Kumar 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •