சவூதி அரசர் சல்மான் காலில் விழுந்தாரா மோடி?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social

சவூதி அரசர் சல்மான் காலில் மோடி விழுந்து வணங்கியதாகக் கூறி ஒரு புகைப்படம் ஃபேஸ்புக்கில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் பார்ப்பதற்கு, நம்பும்படியாக இல்லை என்பதால், அதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

வதந்தியின் விவரம்:

Archived Link

இதில், பிரதமர் மோடி, சவூதி அரசர் சல்மானின் காலில் விழுந்து ஆசிபெறுவது போன்ற புகைப்படம் பகிரப்பட்டு, அதன் மேலே ,இந்தியாவின் அனைத்து கேவலப்பட்ட ஊடகங்களும் மறைத்த புகைப்படம்…!! என எழுதியுள்ளனர். இதனை வேறு ஒருவர் பகிர்ந்த நிலையில், அதனை எடிட் செய்து, அப்படியே குறிப்பிட்ட நபர் இங்கே பகிர்ந்துள்ளார்.

உண்மை அறிவோம்:
Nilofar Nilofar என்ற ஐடியில் இருந்து, இப்பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஐடியில் இருந்து வெளியிடப்படும் பதிவுகள் அனைத்துமே, பாஜக எதிர்ப்பு பதிவுகளாக உள்ளன. எனவே, மோடி பற்றிய புகைப்படம் மீது நமக்கு மேலும் சந்தேகம் வலுத்தது. இதையடுத்து, இப்படி ஏதேனும் சம்பவம் நிகழ்ந்ததா என கூகுளில் தேடிப் பார்த்தோம்.

அப்போது, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படம் பற்றியும், அதன் உண்மை விவரங்கள் பற்றியும் சுவாரஷ்யமான தகவல்கள் கிடைத்தன. ஆதார படம் கீழே தரப்பட்டுள்ளது.

எடுத்த எடுப்பிலேயே, கூகுளில், நாம் தேடிய புகைப்படம், போலியான ஒன்று என்பதற்கான ஆதாரமும், அதன் உண்மை புகைப்பட விவரமும் தெரியவந்தது. அதாவது, பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் காலில் விழுந்து பிரதமர் மோடி ஆசிபெற்ற புகைப்படத்தை அப்படியே மார்ஃபிங் செய்து, சவூதி அரசர் காலில் விழுந்தது போல சித்தரித்துள்ளனர். இதேபோல, சோனியா காந்தி காலில் மோடி விழுவது போன்ற புகைப்படங்களும் இந்த தேடுதலில் கிடைத்தன.

கடந்த 2013ம் ஆண்டு, போபாலில் நடைபெற்ற பேரணி ஒன்றில் பங்கேற்ற எல்.கே.அத்வானியின் காலை தொட்டு மோடி ஆசிர்வாதம் பெற்றுள்ளார். இந்த புகைப்படத்தையே பலரும் தங்களது சுய லாபத்திற்காக, சித்தரித்து வெளியிட்டு வருவதும் தெளிவாக தெரியவருகிறது. இதுபற்றிய ஆதார செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Archived Link

சரி யார்,இப்படி மோடியின் புகைப்படத்தை தவறாகச் சித்தரித்து வெளியிட்டது, என்ற கோணத்தில் ஆய்வு செய்தோம். அதில் கிடைத்த விவரங்கள் பற்றிய ஆதார புகைப்படம் கீழே தரப்பட்டுள்ளது.

அதாவது, மோடியின் புகைப்படத்தை, பத்திரிகையாளர் ஒருவர் மார்பிங் செய்துவிட்டதாகக் கூறி, கடந்த 2016, ஏப்ரல் 4ம் தேதியன்று, பாஜக சார்பாக, டெல்லி சைபர் குற்றவியல் பிரிவு போலீசாரிடம் புகார் தரப்பட்டது. சிஎன்என் ஐபிஎன் ஊடகத்தில் பணிபுரியும் ராகவ் சோப்ரா என்ற பத்திரிகையாளர், மோடி, சவூதி அரசர் காலில் விழுந்து ஆசிபெறுவது போல தவறாகச் சித்தரித்து வெளியிட்டதாக, அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது. இதன்பேரில், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குறிப்பிட்ட புகைப்படத்தை, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்த அந்த பத்திரிகையாளர் சில மணிநேரங்களிலேயே உடனடியாக அழித்துவிட்டார். ஆனாலும், அதற்குள்ளாக, அதனை பலரும் ஷேர் செய்து, வைரலாக்கி விட்டனர் என, போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, தனது குற்றத்தை உணர்ந்த ராகவ் சோப்ரா, ட்விட்டர் மூலமாக, பகிரங்க மன்னிப்பு கோரினார். இதேபோல, அவர் பணிபுரியும் சிஎன்என் ஐபிஎன் ஊடக நிறுவனமும், ட்விட்டர் மூலமாக, வருத்தம் தெரிவித்து, விளக்கமான பதிவுகளை வெளியிட்டும் இருந்தது. இதன் முடிவாக, இந்த விவகாரம் அப்போதே முடித்து வைக்கப்பட்டு விட்டது. இதுபற்றி Business Standard வெளியிட்ட செய்தியை முழுதாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Archived Link

ராகவ் சோப்ராவின் மன்னிப்பு கேட்கும் ட்விட்டர் பதிவுகள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

Archived Link

இதுதொடர்பாக, சிஎன்என் ஐபிஎன் ஊடகம் சார்பாக வெளியிடப்பட்ட விளக்கமும் கீழே தரப்பட்டுள்ளது.

Archived Link

இதுவரை நமக்கு கிடைத்த ஆதாரங்களின்படி, தெரியவந்த உண்மையின் விவரம்,
1) குறிப்பிட்ட மார்ஃபிங் புகைப்படம், கடந்த 2016ம் ஆண்டில் தயாரிக்கப்பட்டதாகும்.
2) இதனை வெளியிட்ட நபர் அப்போதே பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.
3) இதுபற்றி பாஜக சார்பாக, போலீசில் புகாரும் தரப்பட்டுள்ளது.
4) 2 ஆண்டுகளுக்கு முன் வெளியான புகைப்படத்தை, அரசியல் காரணங்களுக்காக, தற்போது மீண்டும் பகிர்ந்துள்ளனர்.
5) உண்மையில் மோடி, பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் காலில்தான் கடந்த 2013ம் ஆண்டில் விழுந்துள்ளார். அந்த புகைப்படத்தை பயன்படுத்தி, அவரவர் இஷ்டத்திற்கு மார்ஃபிங் செய்துவருவதும் தெரியவருகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படம் தவறான ஒன்று என உறுதி செய்யப்படுகிறது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான புகைப்படம், வீடியோ மற்றும் செய்தியை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அவ்வாறு நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் அளித்தால், உரிய சட்ட நடவடிக்கையை நீங்கள் சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Avatar

Title:சவூதி அரசர் சல்மான் காலில் விழுந்தாரா மோடி?

Fact Check By: Parthiban S 

Result: False