<strong>Explainer: இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் பயணிப்போருக்கு எச்சரிக்கை என்று பரவும் வீடியோ; உண்மை என்ன?</strong>
இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் வருவோரைத் தாக்கி, வாகனங்கள், பணம், நகை கொள்ளையடிக்கப்படுகிறது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
நம்முடைய வாசகர் ஒருவர் ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ் அப் சாட்பாட் எண்ணுக்கு வீடியோ ஒன்றை அனுப்பி, அது எங்கு நடந்தது என்று கேள்வி எழுப்பியிருந்தார். ஆனால் இந்த வீடியோ பற்றி எந்த ஒரு தகவலையும் அவர் பகிரவில்லை.
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
இந்த வீடியோ பதிவை ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் யாரும் பகிர்ந்து வருகிறார்களா என்று பார்த்தோம். அப்துல்மு சபிர் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் இந்த வீடியோ மற்றும் பதிவை 2022 நவம்பர் 30ம் தேதி பதிவிட்டிருந்தது தெரிந்தது. நிலைத் தகவலில், "இரவு நேரங்களில் ஆளில்லா சாலைகளில் இரு சக்கர வாகனங்களில் வருவோர் எச்சரிக்கைக்காக!! *_நாட்டு நடப்பு" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் பலரும் இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மைப் பதிவைக் காண: Facebook
அதே நேரத்தில் இந்த வீடியோவில் கோவாவில் நிகழ்ந்தது என்பது போல, கோவா மக்களே கவனத்துடன் இருங்கள் என்று குறிப்பிட்டு ஆங்கிலத்தில் பலரும் இந்த வீடியோவை பதிவிட்டு வருவதை காண முடிந்தது.
உண்மை அறிவோம்:
வீடியோ மற்றும் பதிவில் இந்த வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவில்லை. எங்கு நடந்தது என்று தெரியாமல் பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர். மேலும், பலரும் இந்த சம்பவம் எங்கு நடந்தது என்று நம்மிடம் கேள்வியும் எழுப்பி வருகின்றனர். அதனால் இந்த வீடியோ பற்றிய முழு விவரத்தை அறிந்துகொள்ள ஆய்வு செய்தோம்.
உண்மைப் பதிவைக் காண: g1.globo.com I Archive
வீடியோ காட்சியைப் புகைப்படங்களாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த சம்பவம் பிரேசிலில் 2022 ஆகஸ்ட் மாதம் நடந்திருப்பது தெரிந்தது. இது தொடர்பாக வெளியான செய்திகளைப் பார்த்தோம். பிரேசிலில் செயின்ட் லூயிஸ் (São Luís) என்ற இடத்தில் இரவில் சாலையில் தனியாக வந்த பெண்ணை தாக்கி, இருசக்கர வாகனத்தைத் திருடிச் சென்றதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த பெண் படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், இருசக்கர வாகனத்தைத் திருடிய இருவரையும் போலீசார் கைது செய்தனர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதில் உள்ள தகவல் அடிப்படையில் தொடர்ந்து கூகுளில் தேடிய போது தாக்குதலுக்கு ஆளான பெண்ணின் பேட்டியுடன் வெளியான செய்தி வீடியோ நமக்குக் கிடைத்தது. இதன் மூலம் இந்த வீடியோ பிரேசிலில் எடுக்கப்பட்டது என்பதும், தாக்குதலுக்கு ஆளான பெண்மணி தற்போது நலமுடன் இருப்பதும், தாக்கிய இரண்டு கொள்ளையர்களும் பிடிபட்டனர் என்பதும் தெரிந்தது.
பிரேசில் வீடியோவை என்ன, ஏது என்று எதுவும் தெரியாமல் விழிப்புணர்வுக்காக தமிழ்நாட்டில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இதை பார்க்கும் பலருக்கும் இது நம் ஊரில் எங்கு நடந்தது என்ற கேள்வியே எழுகிறது. சிலர் இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பினாலும் பதில் இல்லை. விழிப்புணர்வுக்காக இருந்தாலும் சரியான விவரம் சேர்த்து பதிவிடும் போது அது பற்றி வதந்திகள் பரவுவதை நம்மால் தடுக்க முடியும்!
முடிவு:
இரவு நேரத்தில் தனியாக இருசக்கர வாகனத்தில் பயணிப்போர் கவனத்துடன் பயணம் செய்யுங்கள் என்று பரவும் எச்சரிக்கை வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டது இல்லை. இந்த சம்பவம் பிரேசிலில் நடந்தது என்பதை அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. விழிப்புணர்வு வீடியோவாக இருந்தாலும் முழு தகவலுடன் பகிரும் போது குழப்பங்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel
Title:Explainer: இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் பயணிப்போருக்கு எச்சரிக்கை என்று பரவும் வீடியோ; உண்மை என்ன?
Fact Check By: Chendur PandianResult: Explainer