ப.சிதம்பரம் கைது நிகழ்வை நேரலையில் பார்த்து ரசித்த மோடி?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்படும் நிகழ்வைப் பிரதமர் மோடி தன்னுடைய அலுவலகத்திலிருந்து நேரலையில் பார்த்து கைத்தட்டி மகிழ்ந்தது போன்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

MODI 2.png

Facebook Link I Archived Link 1 I Archived Link 2

வெறும் ஏழு விநாடிகள் மட்டுமே ஓடும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில், பிரதமர் மோடி தன்னுடைய அலுவலகத்தில் உள்ள தொலைக்காட்சி திரையைப் பார்த்து கைத்தட்டி ரசிக்கிறார். தொலைக்காட்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்படும் காட்சி வருகிறது. நிலைத் தகவலில், “புரிகிறதா ப. சிதம்பரம் அவர்களை சிபிஐ ஏன் சுவர் ஏறி குதித்து கைது செய்ப்பட்டுள்ளார் என்று????” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை, facebook DMK என்ற ஃபேஸ்புக் பக்கத்தில், Kaja Mohideen என்பவர் 2019 ஆகஸ்ட் 21ம் தேதி வெளியிட்டுள்ளார். இதைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் சந்திரயான் 2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட போது, அதைப் பிரதமர் தன்னுடைய அலுவலகத்திலிருந்து பார்த்து தொடர்பாக ஒரு வீடியோ வெளியாகி இருந்தது. அந்த வீடியோவை எடிட் செய்து இந்த வீடியோ உருவாக்கப்பட்டது போல் இருந்தது. 

மேலும், மோடியின் அலுவலகத்தில் உள்ள தொலைக்காட்சித் திரையில் ஓடிக்கொண்டிருக்கும் வீடியோ காட்சியில் ஏ. என்.ஐ என்று தெளிவாகத் தெரிகிறது. ஏ.என்.ஐ என்பது ஊடகங்களுக்கு செய்தி, புகைப்படம், வீடியோக்களை விற்பனை செய்யும் செய்தி நிறுவனம். அது செய்தி தொலைக்காட்சி இல்லை… அது எடுத்த வீடியோவை பிரதமர் மோடி தன்னுடைய மொபைல் போனிலேயே பார்க்க முடியும்.  எனவே, இந்த வீடியோ உண்மையான வீடியோதானா என்று ஆய்வு மேற்கொண்டோம்.

முதலில், பிரதமர் மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ, புகைப்படம் ஏதும் வெளியிட்டுள்ளாரா என்று தேடினோம் அப்போது, ஜூலை 23ம் தேதி அவர் வெளியிட்டிருந்த செய்தி, புகைப்படம் நமக்கு கிடைத்தது. ப.சிதம்பரம் கைது தவிர்த்து மற்ற அனைத்தும் ஒரே மாதிரி இருந்தது தெரிந்தது.

Archived Link

சந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்படுவதை தன்னுடைய அலுவலகத்திலிருந்து தொலைக்காட்சி மூலம் பார்க்கும் வீடியோ உள்ளதா என்று தேடினோம். அப்போது, என்.டி.டி.வி, ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்ட வீடியோக்கள் நமக்கு கிடைத்தன. ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்த வீடியோவை இவர்கள் பயன்படுத்தியிருந்தனர். ஹிந்துஸ்தான் டைம்ஸ் வீடியோ தெளிவாக இருந்ததால் அதை நம்முடைய ஆய்வுக்கு எடுத்துக் கொண்டோம். 

Archived Link

அதில் 33வது விநாடியில் பிரதமர் மோடி கைத்தட்டி வாழ்த்து தெரிவித்த காட்சிகள் வருகின்றன. அந்த காட்சியும், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் காட்சியும் சரியாக இருந்தது. 

ப.சிதம்பரம் கைது செய்யப்படும் வீடியோவை தேடினோம். அதுவும் ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் எடுத்த வீடியோதான். ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் அந்த வீடியோ நமக்குக் கிடைத்தது. அந்த வீடியோவை எடுத்து, சந்திரயான் 2 வீடியோவோடு சேர்த்து மார்ஃபிங் செய்து போலியான வீடியோ உருவாக்கப்பட்டது தெரிந்தது.

Archived Link

ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டது தொடர்பாக பிரதமர் மோடி கருத்து ஏதும் கூறியுள்ளாரா என்று தேடினோம். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை. கருத்தே தெரிவிக்காதபோது, வீடியோ எப்படி வெளி வந்திருக்கும்? எதிர்க்கட்சித் தலைவரை கைது செய்வதை நேரில் பார்க்கும் வீடியோவ பிரதமர் வெளியிடுவாரா? எதைப் பற்றியும் யோசிக்காமல், அவதூறு பரப்ப வேண்டும் என்ற நோக்கில் இந்த வீடியோ தயாரிக்கப்பட்டுள்ளது மட்டும் உறுயாக தெரிகிறது.

MODI 3.png

நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ இந்தி (www.factcrescendo.com) பிரிவும் கூட இந்த வீடியோ போலியானது என்று ஆய்வு மேற்கொண்டு கட்டுரை வெளியிட்டுள்ளது நமக்கு கிடைத்துள்ளது. அந்த கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

நம்முடைய ஆய்வில்,

சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்படும் தினத்தன்று பிரதமர் மோடியின் அலுவலகத்தில் எடுக்கப்பட்ட வீடியோ, புகைப்படங்கள் கிடைத்துள்ளன.

ப.சிதம்பரம் கைது செய்து அழைத்துச் செல்லப்படும் வீடியோ கிடைத்துள்ளது.

ப.சிதம்பரம் கைது பற்றி பா.ஜ.க-வினர் கருத்து கூறியுள்ளனர். ஆனால், பிரதமர் மோடி எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை.

வீடியோ போலியானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ இந்தி பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், ப.சிதம்பரம் கைதானதை பிரதமர் மோடி பார்த்து ரசித்தது போன்று போலியாக வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:ப.சிதம்பரம் கைது நிகழ்வை நேரலையில் பார்த்து ரசித்த மோடி?

Fact Check By: Chendur Pandian 

Result: False